ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, October 24, 2009


பயங்கரவாத நாடுகள் இந்தியா?பாகிஸ்தான்? சீனா?


ஒரு இனத்தின் இருப்பின் முதுகெலும்பை உடைத்த யுத்தத்தில் அந்த இனத்தையும் தன் குடிமக்களாகக் கொண்ட அரசு கனரக ஆயுதங்கைப் பாவித்து சர்வதேச மனித உரிமைகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் மீறிச்செயற்பட்டமையைக் கண்டித்து இப்பொழுது சர்வதேசமெங்கும் குரல் எழுந்துள்ளது.

இது ஒரு வகையில் தத்தமது தன்னாதிக்கத்தை இச்சிறுதீவில் விரிப்பதற்கு ஏகாதிபத்திய அரசுகள் விரிக்கும் கபட வலை என்ற சந்தேகங்கள் ஒரு புறம் இருக்க நடந்தேறிய மனித அவலங்களின் சிறுகூறுதன்னிலும் வெளிப்படக் கிடைத்த சந்தர்ப்பம் என்பதையும் புறந்தள்ளிவிட முடியாது.

அந்த வகையில் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் இலங்கை தொடர்பான கருத்துக்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான சபையும் ஐரோப்பிய கூட்டமைப்பும் இப்போது எடுத்துவரும் முயற்சிகளையும் வரவேற்கலாம்.

27 வருடகால ஈழத் தமிழினத்திற்கு எதிரான இன அழிப்பின் இறுதித்தருணங்களில் சிங்கள பாசிச அரசு கையாண்ட மனித நாகரீகமே வெட்கித் தலை குனியும் உத்திகளும் நிராதரவாய்த் தவித்த அப்பாவி மக்களின் வகை தொகையற்ற கொலைகளும் விசாரிக்கப்படவேண்டுமெனபதுவும் இக்கொலைகளின் பின்னால் இரத்தம் தோய்ந்தகரங்களுடன் இருக்கும் அனைத்து அரச, இராணுவ, ஆலோசக நபர்களையும் நீதியின் முன்னால் நிறுத்த வேண்டிய கடப்பாடு அனைத்து மக்களின் முன்னாலும் இருக்கின்றது.

காஸாவில் நடத்தப்பட்டது போன்ற சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் பொழுது இவ்வின அழிப்பின் முழு அவலமும் வெளிக்கொணரப்படுவதுடன் இவ்வின அழிப்பில் ஈடுபட்ட காட்டுமிராண்டிகளையும் நீதியின் முன் கொண்டு வரலாம்.

சர்வதேச சமூகத்தின் அக்கறை சிறிலங்கா பாசிச அரசில் இருந்து இயங்கிய போரியல் குற்றவாளிகளான அரசியல் இராணுவ அரக்கர்களைத் தண்டிப்பதுடன் மட்டும் திருப்திப்பட விழைக்கின்றது.

நாகரீக சமூகத்தின் பிரதிநிதிகளாக சர்வதேச சமூகம் தன்னை மனச்சாட்சியுடன் வெளிப்படுத்துவதாக இருந்தால் அது இவ்வாறான மாமூல் நடவடிக்கைகளையும் தாண்டி இந்த இன அழிப்பை விரும்பித் தூண்டியவர்களும் கொலைப்படையான பாசிச சிறிலங்கா அரசிற்கு இராணுவ தளபாட ஆலோசனை கொடுத்துதவிய அனைத்து நாடுகளையும் அரசுகளையும் தண்டிக்க முன் வரவேண்டும்.

சிறிலங்கா பாசிச அரசின் ஒரு இன அழிப்புக்கான முனைவுகளைப் பூரணமாக அறிந்து கொண்டும் பாரிய உயிர் அழிவை ஏற்படுத்தக்கூடிய தடைசெய்யப்பட்ட உயிரியல் இரசாயன ஆயுதங்களைக் கொடுத்துதவிய இந்தியா,பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் மனிதர்களின் வாழ்வு அதற்கான பிறப்புரிமை மனிதாபிமானம் போன்றவற்றையும் ஐக்கிய நாடுகள் சாசனத்தில் வரையறுக்கப்பட்ட இன, மொழி, தேசியக்குழுக்களுக்கான வாழ்வுறுதிக்கான விழுமியங்களையும் மதியாத பயங்கரவாததை ஏற்றுமதி செய்யும் நாடுகளாகத் திகழ்கின்றன.

இன்றைய நூற்றாண்டின் மனித நாகரீகத்தின் மேன்மையைச் சிறிதும் மதியாது பயங்கரவாதப்பண்புகளைப் பேணிக்காக்கும் நடைமுறைப்படுத்தும் இந்நாடுகளை சர்வதேச அரங்கில் இருந்தே விலத்திவைப்பதே வாழ்வு பற்றிய நம்பிக்கையை மனிதர்களிடம் உயிர்ப்பிக்கும்.

இதைச்சர்வதேச நாடுகள் சரியான முறையில் கவனத்தில் எடுத்து நடைமுறைப்படுத்துவதே உலகில் இருந்து பயங்கரவாதத்தை முடிவிற்கு கொண்டுவரும். செய்வார்களா?

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil