ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, October 17, 2009


நாடு கடந்த அரசும் காலாவதியான சிந்தனையும்


ஈழத்தமிழர்களை எண்ணிக் கவலைப்படாது ஒரு நாளும் இருக்க முடியவில்லை. கண்டவர்களின் இழுப்பிற்கெல்லாம் இழுபட்டு கால் முட்டி தேய்ந்த நிலையில் கண்ணீரில் குளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இயக்கங்கள், இந்தியா,சர்வதேசம்,நார்வே,சிங்களப் பாஸிஸம் என்று கால்களுக்கிடையே மிதிபட்டு சின்னாபின்னமாகிப் போய்விட்டார்கள்.

பீறிடும் இரத்தத்தைக் குடிப்பதில் தமிழ் நாட்டுத் தமிழர்களும்,தலைவர்களும் இந்தியப் பண்டிட்டுகளும் பர்சி பஞ்சாபி மலையாளத்தான் தெலுங்கன் பாகிஸ்தானி துலுக்கன் சீனத்து மஞ்சள் தலையன் என்று ஒரு போட்டியே நடந்து முடிந்திருக்கின்றது.கண்ணின் வக்கிரத்தைக் கறுப்புக் கண்ணாடியால் மறைத்தே வயிறு வீங்க உறிஞ்சியெடுத்த இரத்தமும் கண்ணீரும் ஆயிரம் கதைகள் சொல்லும்.

முள்ளுக்கம்பி வேலியும் முட்டிக்கால் தண்ணீரில் மிதக்கும் வாழ்க்கையுமாகத் தவிக்கும் அவர்களின் ஆதங்கம், தேவை எதுவும் அறியாமலேயே அரசியல் சாணக்கியர்கள் சாணி தட்டிக்கொண்டிருக்கின்றார்கள். பத்மநாதன் தொடக்கி வைத்த பாம்பாட்டி சர்க்கஸை ருத்திரகுமாரன் நடாத்திக் கொண்டிருக்கின்றார்.

ஈழத்து மண்ணைப் பார்த்திராத பர்க்கரும் பீஸாவும் உண்டு கொழுப்பெடுத்த விடலைகளைக் களமிறக்கி கொம்பு சீவிவிடப்பட்டிருக்கின்றது.தமிழர் தேசியம் சுயநிணயம் என்று எதுவுமே அறியாது சிறிலங்கா என்றால் "பாம்பு நிற்கும் டார்டி பிளேஸ் நாங்க வரமாட்டோம்" என்று அப்பா அம்மாவின் ஒரே உல்லாசப்பயணமான ஊருக்குப் போதலையும் தடை செய்த 'பால்குடிப்'பிள்ளைகள் தான் இப்போது பாம்புக்கும் தேளுக்கும் நடுவில் மழை நீரில் சிதம்பிச்சாகும் தமிழ் மக்களுக்கான 'நாட்டை' வென்றெடுக்க கூடி நிற்கின்றார்கள்.

ஹொண்டா ரொயொட்டாவில் ஓடி பர்க்கரை முழுங்கும் ஒரு தலை முறைக்கு ஈழத்தமிழன் வாழ்வு தேசியம் சுயநிர்ணயம் என்பதில் என்ன புரியப் போகின்றது.அதற்கு ஒரு நல்ல உதாரணம் தருகின்றேன். புலம்பெயர்ந்த நாடு ஒன்றில் செத்துப் போன 'புலித்தேசியத்திற்கு' ஊது குழலாக ஒலித்துக் கொண்டிருந்த வானொலியின் அறிவிப்பாளன் ஒருவன், நமீதா,ஸ்ரேயாவை அங்குலம் அங்குலமாக அலசி விடக் கூடியவர், பொது அறிவுக்கேள்வி ஒன்றின் போது முதல்முதல் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முதல் தமிழன் யார் என்று கேட்டு ஜீ.ஜீ.பொன்னம்பலம் என்று பதில் சொன்னபோது, விட்டார்பார் ஒரு சவுண்டு...சரியான பதில் கலக்கிட்டீங்க போங்க. அவ்வளவு சுத்தம்.

50க்கு 50 புகழ் ஜீ.ஜீ. செத்தபோதும் சுண்ணாம்பு ஜனதிபதி ஆட்சி இலங்கைக்கு வரவில்லை என்பது தெரியாத 'பால்குடி' அவர். அப்படிப்பட்ட பால்குடிகள் தான் இப்போது ருத்திரகுமாரனின் கைத்தடிகள். அதுசரி இவர்கள்ளெல்லோரும் யார் என்று கேட்டால்..அது தான் ..ஒருவருக்குமே தெரியந்திருக்கவில்லை.

பெயர்களில் மட்டும் வாழ்கின்றார்களா என்றும் புரியவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசை ஒரே ஒரு நாடாவது ஏற்றுக் கொண்டு அது இயங்குவதற்கு தளம் அமைக்க அனுமதி கொடுக்க வேண்டும். அது தான் வரலாறு கடந்த கால நடைமுறை. அந்த நாடு இடையில் அனுமதி மறுத்தாலும் இன்னுமொரு நாடு ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அத்தனை கால உழைப்பும் அம்பேல்.

உலகின் பெரியண்ணன் அமெரிக்கா அடித்தே கூறிவிட்டது. நாடுகடந்த தமிழீழ அரசிற்கு எப்பொழுதும் ஆதரவு இல்லையென்று.நார்வேயுடனான தமிழர்களின் அனுபவம் முள்ளிவாய்க்காலில் முட்டிக்கொண்டு நின்றபோதே அது கையை விரித்தபோது பல்லையிளித்து விட்டது. நார்வே வெறும் பொம்மைதான்.அதைச் சுற்றிவிடும் பம்பரங்கள் வேறு பல.இந்தியாவைக் கூட தாஜா பண்ண நார்வேக்காரர்கள் ஓடிக் களைத்தையும் அறிந்த பின்னருமா நார்வேயில் கூடிக் களித்தார்கள்.

என்ன ..ஈழத்தமிழனுக்கு வழி காட்ட அறிவும் அனுபவமும் கொண்ட தலைவர்களுக்கா பஞ்சம். பட்டாம் பூச்சிகள் பறக்கட்டும். இலைலயுதிர் காலத்தில் சருகுகளுடன் சிறகுடைந்த பட்டாம் பூச்சிகளையும் பெருக்கிக் கொட்டலாம்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil