ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, October 22, 2009


புலிகளின் உருவலும் உருவலில் கலைத்து விடப்பட்டவர்களும்


உலகம் இன்னும் நொய்மையாகவே இருக்கின்றது. எவரினதும் தந்திரங்கள் அவதந்திரங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்ளவே செய்கின்றது.சொல்லிவிடவேண்டும் என்று எப்போதும் தோன்றிக்கொண்டிருக்கும் விடயமிது.அப்பழுக்கற்ற கைகளின் சொந்தக்க்காரர்களாக புலிகளின் புலம்பெயர் தேசத்துப் பினாமிகள் அடிக்கடி தங்களை நிரூபித்துக் கொள்ள சிலரை துரோகிகள் கூட்டத்தில் சர்வசாதாரணமாகத் தள்ளி விடுவார்கள். அவர்களின் நீண்ட நாளைய சரிதத்தை எடுத்துப் பார்த்தால் அவர்களின் ஊற்றுக்கண்ணும் புலிகளிடம் இருந்து தான் ஆரம்பித்திருக்கும்.

பாரீஸ் ஈழநாடு "புலம்பெயர் தேசங்களில் புதிய கருணாக்கள்!" என்ற தனது புதிய கண்டு பிடிப்பை இப்போது வெளியிட்டுள்ளது. அதில் நேரடியாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் எஸ்.குகநாதன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாரீஸ் ஈழநாடு எஸ்.சந்திரன் என்பவராலும் இதே எஸ்.குகநாதன் என்பவராலும் 80களில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரப்பத்திரிகை.

புலிகளின் நேரடி ஊதுகுழலாகவே களம் அமைத்தது இந்தப்பத்திரிகை. கொள்கை அளவில் புலி ஊது குழலாக இருந்ததில் இவர்கள் இருவருக்கும் எந்த ஆட்சேபணையும் இருக்கவில்லை. புலிகளின் பெயரைச் சொல்லி ஊதி வளர்ந்தபோது ஏற்பட்ட செல்வப்பெருக்கே இப்போதைய நிலைக்குக் காரணம்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1718&cntnt01origid=56&cntnt01returnid=51

எஸ்.குகநாதன் பிரிந்து போக, இப்போது அவர் புலிகளின் துரோக அணியில். இருக்கலாம்.... அவர் ஏன் பிரிந்தார் அல்லது பிரிக்கப்பட்டார்? எல்லாம் கொள்கைப்பிடிப்பினாலா? நாங்கள் ஒன்றும் காதில் பூச்சுற்றியவர்கள் அல்லவே.

இலண்டனில் தயா இடைக்காடர். உள்ளூர் தேர்தலில் புலிகளால் களம் இறக்கப்பட்டவர். அறிவு ஜீவி ஆபத்பாந்தவர் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர். என்ன நடந்தது ..ஏது நடந்ததோ இன்று அவருக்கும் துரோகி லேபிள்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1463&cntnt01origid=56&cntnt01returnid=51

ருத்திரகுமாரின் இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்கள் எல்லோரும் புலிலேபிளில் சிவந்து நிற்பவர்கள். ஏன் ஈழ சமுதாயம் இவர்களை மட்டுந்தானா? மட்டுமே கொண்டதா?

இலண்டன், பாரீஸ், கனடா, அவுஸ்திரேலியா எங்கும் இவர்களைத் தவிர வேறு அறிவு ஜீவிகளே இல்லையா?

பாட்டெழுதி சீ.டி அடித்த கஜன் இன்று கப்டன் கஜன். 13ஆவது நினைவஞ்சலி. கூடவே இருந்த நாதன் லெப்ரினன் கேணல். இவர்கள் இறந்ததற்காகவே கொடுக்கப்பட்ட பரிசு. அவர்களுடன் கூடவே இருந்து சீ.டீ வெளியிட்ட பரா,கேந்தி யாருக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை.

அப்போதே கவிஞனாக இருந்த அருள் மாஸ்டர் உண்மைக் கலைஞனாக இருந்த சாம்சன் எதிரணியில் இருந்த கலைச்செல்வன், இப்போது அ. மார்க்ஸுடன் கள்ளடித்து தலித்தியம் பேசும் சுண்ணாம்பு சுகன், லச்சுமி, 'கண்'காரிகள் யாரையும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். எல்லோரும் எப்போதையப் போலவும் துரோகிகள்.

நியூட்டனின் மூன்றாவது விதி குறிப்பதைப்போல 'ஒவ்வொரு தாக்கத்திற்கும் அதற்குச் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு' என்பதைப்போல இவர்களின் இயங்கலுக்கு எப்போதும் எதிர்ப்பக்கத்தில் துரோகிகள் வேண்டும். எதிரிகளைப் பற்றிக் கூட இத்தனை தூரம் அலுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் தமிழ் பேசும் 'துரோகிகளை' உருவாக்கி வைத்திருப்பார்கள்.

லண்டனில் ராஜேஸ்வரி,அங்கையற்கண்ணி, கோவில் சொந்தக்காரன் என்று எத்தனையோ பேர் துரோகிகள் பட்டியலில். கனடாவில் இளையபாரதி நம்பர் வண் துரோகி. இளையபாரதியைத் துரோகியாக்கி முன்னணிக்கு வந்த கலாதரன் இப்போது புதிய துரோகி.

இப்படியாக இவர்கள் துரோகிகளை வலிந்து உருவாக்குவது தமிழின விடுதலைக்கு எப்போதும் வலிமை சேர்க்கப்போவதில்லை.

கறைபடா கைகளின் சொந்தக் காரர்கள் தாங்கள் என்றும் எதிர்க்கேள்வி கேட்க யாருக்கும் அருகதை இல்லை என்பதும் இவர்கள் எப்போதும் கூறும் கருத்து. மாற்றுக்கருத்தை உள்வாங்கும் மனப்பக்குவத்தை இவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

புலிகளைப் பாஸிஸ்ட் என்றே ஒதுக்கி வைக்கும் மனப்போக்குடன் இயங்கிக் கொண்டிருக்கும் இராயாகரன் ,பொறுக்கி அரசியல் செய்யும் ஷோபா சக்தி, ஜனநாயகம், கட்டுடைப்பு செய்யும் அனைவரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் முப்பதினாயிரம் அரிய இனிய உயிர்களைக் கொல்லக் கொடுத்தபோதே உங்கள் எவராலும் எதுவும் செய்ய முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

போராட்டத்திற்கான தலைமை இனி போராடும் களத்தில் இருந்தே உருவாக வேண்டும்...உருவாகும். அது தான் யதார்த்தம். புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து வேகாத உணவை விற்க முற்படுவதை விட்டு ஒற்றுமையாகக் குரல் கொடுக்கப்பாருங்கள்.

புலம் பெயர்தேசத்து தமிழர்களும் இனி தமிழகத்தமிழர்களைப் போலவே தொப்பூழ்கொடி உறவு மட்டுமே. தமிழீழத் தமிழர்களின் அரசியல் தலைமை அல்ல.

இடம் பொருள் காலம் அறிந்து அவர்கள் தொழிற்பட வேண்டிய உற்சாகத்தை மட்டும் ..மட்டுமே நீங்கள் கொடுக்கலாம்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil