ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, July 13, 2009


புலிகளின் புருடாவும் வெட்கம் கெட்ட அறிக்கையும்


50 ஆயிரம் மக்களினதும் போராளிகளினதும் சாம்பரின் மீது புலிகளின் "நாடு கடந்த அரசு " புருடா நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை ஆயுதப் போராட்டத்தின் மூலமே தமிழீழம் அடையமுடியுமென்று அழுங்குப் பிடியாக நின்ற புலிகளுக்கு வன்னிக் களம் ஞானம் கொடுத்த போதி மரமாக அமைந்து விட்டது. அவர்களின் ஆயுத மாயை அடங்காப் பற்று அனைத்தையும் தூள் தூளாக உடைத்து நொருக்கிவிட்டது.

இன்று ஆயுதம் எங்கள் குறிக்கோள் அல்ல அகிம்சையே பெரும் மூலதனம் என்று அக்கப்போர் கிளப்பிக்கொண்டிருக்கின்றனர்.

//தமிழ் ஈழப் பிரச்னையில், குறிப்பாக கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்களில், இந்தியாவின் பங்கை பல கோணங்களில் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் திட்டம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றுதான் கூறுகிறோம்.

இனி ஆயுதப் போராட்டம் இல்லை. இந்தியாவின் இறையாண்மையையோ அல்லது பூகோள நலன்களையோ எம்முடைய செயல்கள் பாதிக்காது என உறுதி அளிக்கிறோம்.//

இதே ஞானம் சில ஆண்டுகளுக்கு முன்னரேனும் கிடைத்திருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் பலி கொடுத்திருக்கத் தேவையில்லை. அவர்களின் இன்னுயிர்களை வீணே இழந்திருக்கத் தேவையில்லை.

இத்தனை மக்களையும் கொன்று குவித்த யுத்தத்தை இந்தியாவே முன்னின்று நடாத்தியிருந்தது.அதனை சிறிலங்கா ஜனாதிபதி ராஜபக்ஸேயின் சகோதரர் கோத்தபாயவே ஒப்புக்கொண்டுள்ளார். "இந்தியாவின் யுத்தத்தை நாங்கள் நடாத்தி முடித்தோம்" என்று மகிந்த ராஜபக்ஸேயும் பிரகடனப்படுத்தியிருந்தார்.

இவையெல்லாம் பட்டவர்த்தனமான உண்மைகளாக இருக்க அண்மையில் புலிகளின் சட்ட ஆலோசகர் உருத்திரகுமார் ஒரு வெட்கம் கெட்ட அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.

//''நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு, புலம் பெயர்ந்த அனைவரின் உதவியும் அவசியம் தேவை. இந்தியாவின் உதவி மிகவும் அவசியம். இந்தியாவை நாங்கள் என்றுமே எதிரி நாடாக பாவித்ததில்லை. //

அப்போது இந்தியா ஏன் உங்களை எதிரிகளாகப் பாவித்தது. உங்களை அழிப்பது என்ற போர்வையிலேயே 50 ஆயிரம் மக்களைக் கொன்று புதைத்தும் 3 இலட்சம் மக்களை இடம் பெயர்த்து முட்கம்பி வேலிக்குள் அடைத்துப் போட்டிருக்கின்றது. இறந்து போன மக்களுக்கும் அகதிகளாக ஒடுங்கிப்போய் இருக்கும் மக்களுக்கும் சொல்வதற்கு உங்களிடம் ஏதாவது நல்ல காரணம் இருக்கின்றதா?

//நாங்கள் திட்டமிடுவது, வெறும் வலைதளத்தில் மட்டுமே வாழும் அரசு அல்ல.தலைவருக்குப் பிறகான பதவிச் சண்டையும் அல்ல. எந்த ஒரு குழுவையோ அல்லது தனிநபரையோ இது முன்னிலைப்படுத்தாது. விரைவில் தேர்தலும் நடத்துவோம். ஜனநாயக முறைப்படி, அதில் யாரும் பங்கு பெறலாம். முகாம்களில் சீரழியும் மூன்று இலட்சம் ஈழ மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். எங்கள் இலக்கு, தனி ஈழம். அதை இனி ஜனநாயக முறையில் இந்தியா, உலக நாடுகளின் உதவியுடன் பெறுவோம்.//

உங்களை 25 வருடங்களாக நம்பி உங்களை ஆதரித்துப் பாதுகாத்த மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு உங்களுடன் சேர்த்து மக்களையும் அழித்த இந்தியாவின் உதவியுடன் தமிழீழம் அமைத்துத் தரப் புறப்பட்டிருக்கும் உங்களை என்னவென்பது?

நாடு கடந்த அரசினை அமைக்க அமெரிக்கா தன் எல்லைகளை மூஉடிக்கொண்டபோது உங்களுக்கு இந்தியாவின் உதவி வேண்டியிருக்கின்றது. இந்தியாதான் எப்போதும் தமிழீழத்தினதும் புலிகளினதும் எதிரி என்பதை எப்போது நீங்கள் புரிந்து கொள்ளப்போகின்றீர்களோ?

புலம் பெயர்ந்த தேசங்களிலிருந்து ஆட்சியதிகாரத்தை இறக்குமதி செய்து விட முடியாது என்ற கருத்து இப்போது தமிழ் பேசும் மக்களிடம் முனைப்புப் பெற்றுள்ளது. ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களிற்கே சுதந்திரத்தின் தேவையும் அதைப்பெற்றுக் கொள்ளும் போராட்ட வலுவும் இருக்கும் என்பது உண்மையே. ஈழத்தில் கட்டியெழுப்பப்படும் தமிழ் அரசியல்த் தலைமையே மக்கள் மத்தியில் போராட்டத்தை முன்னெடுக்கும் திறன்வாய்ந்தது. ஈழத்தில் இருக்கும் முற்போக்கு புரட்சிவாதச் சக்திகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாகும். அதற்கான காரணமும் தேவையும் வெளிப்படையானது.

புலிகளின் அழிவுடன் ஏற்பட்ட தமிழர்களுக்கான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு பேரினவாதக் கட்சிகள் இப்போது தீவிரம் காட்டுகின்றன. கருணா ,டக்ளஸ், போன்றவர்களின் தலைமையில் இருக்கும் உதிரிக்கட்சிகளையும் ஆனந்த சங்கரி போன்ற தனி நபர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு தமிழருக்கான அரசியல் தலைமை வெற்றிடத்தை இவை நிரப்ப முற்படுகின்றன.

இது தமிழ்த் தேசியத்தின் அடையாளங்களை அழித்தொழிக்கும் ஆபத்தின் அறிகுறி. தொடர்பு பட்ட தமிழ்ப்பிரதேசம் கலாச்சார அடையாளங்கள் என்பவற்றை நொதுமைப் படுத்தி சிங்களப் பெரும்பான்மையுடன் இலங்கையின் அனைத்துப் பகுதிகளையும் பூரணப்படுத்தும் திட்டமிடலின் அதி ஆபத்தான கணங்கள்.

இதை கருத்தில் கொண்டு தமிழ மக்களிடையே இருக்கக் கூடிய முற்போக்கு அணிகள்,மாக்ஸிய கம்யூனிஸக் கூட்டுகள் இணைந்து தமிழர் அரசியலின் தலைமையை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான ஆதரவை வழமை போல தமிழக , புலம்பெயர்ந்த தமிழர்கள் வழங்குவது ஆக்கபூர்வமான செயலாகவிருக்கும்.

அதைவிட்டு நாடு கடந்த அரசு, புலம்பெயர் மக்களின் தலைமைத்துவம் என்பதெல்லாம் போகாத ஊருக்குக் கொண்டு சென்று தமிழ் மக்களின் போராட்டத்தை இன்னும் பலகாலம் பின் தள்ளவே வழி வகுக்கும்.

1 comment:

ttpian said...

தமிழ் நாட்டு மார்க்சிஷ்ட்கள், ஒன்றுபட்ட இலங்கை என்று ஒப்பாரி வைத்து,நமது இனத்தை அழித்த சண்டாளர்கள்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil