ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, July 29, 2009


பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்


இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றதா? இல்லையா? என்பதில் பல நாடுகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. அல்லது தம் தம் தேவைகளுக்கேற்ப இனப்பிரச்சினையென்று ஒன்று இருக்கின்றது.. இல்லவே இல்லை என்று நாடகமாடிக்கொண்டிருக்கின்றன. இதில் முதன்மை இடம் இந்தியாவிற்குத் தான். வெறுமே புகைந்து கொண்டிருந்த இனப்பிரச்சினையை ஊதிப்பெரிதாக்கி இறுதியில் இத்தனை இலட்சம் மக்களின் அழிவிற்கும் துணை போனது இந்தியாவின் இத்தகைய கபடத்தனமே. இயக்கங்களை ஆதரித்து ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து ஊக்கப்படுத்தியதும் ஈற்றில் தடைசெய்யப்பட்ட நாசகார இரசாயன ஆயுதங்களை சிங்கள அரசிற்குக் கொடுத்து வகை தொகையின்றி ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவித்ததும் இந்தியாவின் தன்னலம் ஒன்றே குறிக்கோளான இத்தகைய கபடத்தனத்தாலே ஆகும்.

தன் நலனுக்கு அனுகூலமாகும் போது அது "சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரம்" என்பதுவும்
சிறிலங்கா அரசை மிரட்ட "சோற்றுப்பொதிகளை" வீசுவதும் இந்தியாவின் "ஜனநாயகமாக" நினைத்துக் கொண்டிருக்கின்றது.

இதுவரை தம் இன்னுயிரை இழந்த ஈழத்தமிழர்கள் அனைவரின் உயிரிழப்பிற்கும் இந்தியாவே காரணம் என்பதை காலம் கடந்தாயினும் பாமர ஈழத்தமிழனும் புரிந்து வைத்திருக்கின்றான். இனியும் இந்தியாவின் "சோற்றுப்பொதிகளை" நம்பி ஏமாறுவதற்கு யாரும் தயாராகவில்லை. இந்தியா என்ற மனச்சாட்சியற்ற எதிரியை மன்னிக்கவும் யாரும் தயாராகவில்லை.

இத்தனை இழப்பையும் வேதனையையும் ஈழத்தமிழருக்கு கொடுத்த இந்தியா இப்போது சோற்றுப்பொதி நாடகமாக சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து இயங்கப் போவதாக நாடகமாடுகின்றது.

'விடுதலைப் புலிகளுக்கு பிற்பட்ட காலகட்டத்தில்' சிறிலங்கா அரசின் மீதான புதுடில்லியின் அரசியல் பிடி தளர்ந்துபோய் இருப்தையே காணக்கூடியதாக இருப்பதாகவும் , இழந்துபோன செல்வாக்கை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலையில் இந்தியா இருப்பதாகவும்' இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான எம். பத்ரகுமார் கூறியிருக்கின்றார்.


"சீனாவின் மூலோபாயத்தை முறியடிப்பதற்கான பொதுவான அக்கறையில் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்திருக்கின்றது. ராஜபக்சவின் போருக்கு உறுதியான ஆதரவை வழங்கிய பின்னர் 'அரசியல் தீர்வை' வலியுறுத்தும் பராக் ஒபாமா நிர்வாகத்துடன் நெருங்கிச் செயற்பட வேண்டியதாக டில்லி உள்ளது" என்று இந்தியாவின் வெளிப்படையான தேவையையும் பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்கின்றார்.

ஈழத்தமிழர்களுக்கான "சோற்றுப்பொதிகளை" தயார் செய்வதற்கான இந்தியாவின் தேவைகள் இவ்வாறுதான் பெருகிச் செல்கின்றன.

இதனை படிப்பறிவற்ற ஈழத்துப்பாமரனும் விளங்கிக்கொண்ட அளவில் புலிகளின் "பின்னாள்" தலைவர்கள் என்று தம்மைப் பிரகடனப்படுத்தியவர்கள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவில்லை என்பதை விட கால் பிடித்து பிழைப்பதில் "சுகம்" கண்டு கொண்டுள்ளார்கள் என்று தான் எண்ண வேண்டியிருக்கின்றது.

புலிகளின் "பின்னாள்" தலைவராக தன்னை வரித்துக்கொண்டிருக்கும் செல்வராஜா பத்மநாதன் அந்த "சுகத்தில் முதுகு சொறிந்து கொள்ளும் " அவலத்தை இந்திய நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ஈழத் தமிழர்கள், அவர்களின் வேட்கையான தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியா உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இந்தியாவில் இருந்து வெளிவரும் 'டெக்கான் குரோனிக்கல்'அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

"ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. உலகம் முழுவதில் உள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள்"


பம்மாத்து அரசியலையும் புலிகள் சேர்த்து வைத்த மக்கள் சொத்துகளைப் பங்கு போட்டுக்கொள்ளவும் கால அவகாசம் தேடுவதை விட்டு உருப்படியாக ஏதாவது செய்தால் மக்கள் நன்றியாவது பாராட்டுவார்கள்.


"இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் தமிழ் இனவாதிகளுக்குமே இன்று அரசியல் தீர்வு தேவைப்படுகின்றதே தவிர தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை இல்லை. அவர்கள் அரசியல் தீர்வைக் கேட்கவும் இல்லை. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவால் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வு யோசனைகளைக் குப்பைக்கூடைக்குள் வீசிவிடவேண்டும்"
எனவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் தலைவர் குணதாச அமரசேகர வலியுறுத்தி யிருக்கின்றார்.

இது ஈழத்தமிழர் இருப்பையே கேள்விக்குறியாக்கும் சிங்களவர் எண்ணம். அதேபோல சிங்களப் பெரும்பான்மை வாதிகளினதும் சிங்கள அரசினதும் தீர்வுத் திட்டம் இவ்வாறு இருக்கக் கூடும் என்றும் எம். பத்ரகுமார் எதிர்வு கூறியிருக்கின்றார்.

"தமிழர்களின் பிரச்சினைக்கான இறுதித் தீர்வுத் திட்டம் ஒன்று ராஜபக்சவிடம் இருக்கின்றது. தமிழர்களின் தாயகத்தில் சிங்களவர்களைத் திட்டமிட்ட முறையில் குடியமர்த்துவதுடன் சம்பந்தப்பட்ட திட்டமே இது. இதன் மூலம் அடுத்த தசாப்தத்தில் இந்தப் பிராந்தியத்தின் குடித்தொகை அடர்த்தி தமிழர்களுக்குப் பாதகமான முறையில் மாற்றப்பட்டுவிடும். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பிரச்சினையை இவ்வாறுதான் சிறிலங்கா அரசு தீர்த்துவைத்தது"

"தமிழர்கள் இந்தியாவை நோக்கி பெருமளவில் வெளியேறுவதை சிங்க அரசுகள் தமது அரச கொள்கையாக எதிர்காலத்தில் ஊக்குவிக்கும்"
என எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் பத்ரகுமார், "தமிழர்களும் இவ்வாறு இந்தியாவுக்கு குடிபெயர்ந்து செல்வதை விரும்பலாம். இதுதான் சிங்கள அரசு விரும்பும் 'தமிழர் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக அமையும்'

இது ஒரு வகையில் "சோற்றுப்பொதி" வீசும் இந்தியாவின் அபிலாஷைகளுக்காக அவர் வரித்துக் கொடுக்கும் காரணங்களாக இருக்கக் கூடுமெனினும் சிங்கள ஏகாதிபத்தியக் கனவும் அதே திசையில் பயணிக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

"ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. உலகம் முழுவதில் உள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள்" எனத் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், "இந்தியா எம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.

உலக அரசியலின் போக்கையும் இந்தியாவின் சுயநலன்களையும் புரிந்து கொள்ளாது எவ்வளவு தூரம் அவரின் அறியாமை வெளிப்பட்டிருக்கின்றது.(இதில் இராஜதந்திரம் பொதிந்திருப்பதாக யாராவது பம்ம முன்வரக்கூடும். இந்திய சுயநல பச்சோந்தித்தனத்தின் முன்னால் உங்கள் இந்திய மனதை மாற்றும் இராஜதந்திரம் செல்லாக்காசுதான்)விட்டில் பூச்சித்தனத்துடன் மீண்டும் மீண்டும் விளக்கில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் சுய இச்சை. இவர்கள் தான் ஈழத்தமிழினத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாம். கொடுக்கப்பட்ட பலி போதாது என்று மஞ்சளும் குங்குமமும் பூசி பலியாடுகளைத் தயார்ப்படுத்தும் பூசாரித்தனம். தமிழ் மக்கள் இவர்களை இனங்கண்டு புறமொதுக்க வேண்டும்.

"தற்போது நாம் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்தக் குழு நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக எமது மக்களின் கனவாக இருந்துவரும் தமிழீழத்தை அடைவதற்கான செயற்திட்டம் ஒன்றை இந்தக் குழு தயாரித்து வருகின்றது" - செல்வராஜா பத்மநாதன்

இனப்படுகொலை முடிந்து மூன்று மாதங்களும் உருண்டோடிவிட்டது.இப்பொழுது தான் செயற்குழு அமைத்திருக்கின்றார்களாம். முகாம்களில் புண்ணாகிப்போன மனங்களுடன் அடைபட்டுக்கிடக்கும் மக்கள் குறித்து ஒரு துரும்பையும் தூக்கிப்போடவில்லை. சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து எந்தச் செயற்பாட்டிலும் ஈடு படவில்லை. உதவி அமைப்புகளின் உதவிகள் அந்த அல்லல்ப்படும் மக்களிடம் சென்று சேர எந்த நடவடிக்கையும் இல்லை.

வன்னியில் அகப்பட்டிருந்த தங்கள் தலைவரையே காக்க முடியாது தப்பியோடிய தனி நபர்கள்

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

என்ற பெயரில் மாமனிதர் பட்டங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே குதிரை அதே குண்டுச்சட்டி. அப்போது மாவிலாறில் செத்துத் தொலைந்தவர்கள் எல்லாம் மண்ணாங்கட்டிகளா ? சிங்களத்தின் இருண்ட சிறைகளில் இன்றும் தினம் தினம் கற்பிழந்தும் கடும் சித்திரவதைகளில் அழுந்திக்கிடக்கும் அவர்களெல்லாம் யார்?

புலிகளோடு இருந்ததனால் புலிகளுக்கு வால் பிடித்ததனால் .. அவர்கள் என்ன தீண்டத்தகாதவர்களா?

கோட்டுச் சூட்டுடன் பிளைற்றில் பறந்து பறந்து மக்களால் புலிகளுக்கு வழங்கப்பட்ட சொத்தைக் காபந்து பண்ணத்துடிக்கும் இவர்கள் ஏன் அவர்களைப்பற்றிச் சிந்திக்கவில்லை.

புலிகளின் பினாமிகள் பெயரில் இதுவரை நடாத்தப்பட்டு வந்த புடவைக்கடைகள்,சோற்றுக்கடைகள், பலசரக்குக் கடைகள் எங்கும் எல்லாம் திடீர் திடீரென்று மலிவோ மலிவு விற்பனையுடன் திடீர் திடீரென்று (பாங்ரப்ஸியென்று ) மூடப்படுகின்றது. கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடுகின்றார்களா? யாரிடம் கணக்குக் கேட்பது?

மக்கள் ஒன்றும் மண்ணாங்கட்டிகள் அல்ல.. அவர்கள் தங்கள் தலைமையைக் கண்டெடுப்பார்கள். அவ்வாறு தான் வரலாறு எழுதப்படுகின்றது.

குறிப்பு: பாங் ரப்ஸி அடிக்கப்படும் புலிப்பினாமிகளின் விபரம் விரைவில் வெளிவிடப்படும். தகவல்கள் தெரிந்தவர்கள் அனுப்பி வைக்கலாம்..ஆதாரத்துடன்...

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil