ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Monday, July 13, 2009
சிறீயும் ரவியும் தமிழ் ஈழத்தின் விதிகள்
ஒரு நொடியில் ஒரு கணத்தில் பல சம்பவங்கள் மாறிப் போய் விடுவதுண்டு. அப்படித்தான் ஈழத் தமிழனின் தலை விதியும் மாறிப் போய் விட்டிருக்கின்றது. இரண்டு சம்பவங்கள் அவ்வாறு எண்ணத் தூண்டுகின்றன. இந்தியாவும் இராஜீவ் காந்தியும் தான் சம்பவங்கள் . ஆனால் காராணங்கள் வேறு எங்கோ தீர்மானிக்கப்பட காரணகர்த்தர்கள் யாராகவோ இருந்திருக்கின்றார்கள்.
பிராந்திய நலன் என்ற புளிச்சுப்போன போர்வையை விலக்கிவிட்டு சாதாரண சம்பவங்களூடு இதனைப் பார்க்கலாம். நடக்காததையும் நடப்பதையும் தீர்மானிப்பதற்கு இப்பிரபஞ்ச வெளியில் பல காரணங்களைத் தேட முடியும். மனிதனின் மூளையென்பது மிகச்சிறிய அலகுதான். அதைக் கொண்டு இப்பிரபஞ்ச வெளியை அளக்க முயலும் பிரயத் தனம் தானே வாழ்க்கை என்பது.
ஈழத் தமிழனின் தலை எழுத்தை இவ்வாறே எழுதிச் செல்லும் விதியின் கரங்களைப் பார்ப்போம்.
முதல் சம்பவம் இந்தியாவின் ரோ வின் ஆதரவைப் பெற்றிருந்த டெலோ இயக்கமும் அதன் அப்போதைய தலைவராய் இருந்த சிறீ சபாரத்தினமும். இரண்டாவது சம்பவம் ஜே ஆரின் மகனும் ஆலோசகருமாயிருந்த ரவி ஜெயவர்த்தன.
பல இயக்கங்களால் ஈழத்தமிழ் எல்லைகள் அலைக்கழிக்கப்பட எழுந்த தன் முனைப்புகளில் ஒன்றை ஒன்று பிடித்துச் சாப்பிட கங்கணம் கட்டிக் கருவிக் கொண்டிருந்த காலம். புலிகளின் "அடங்க மறுத்த" தன்மைகளால் வெறுத்துப் போயிருந்த இந்தியாவும் ரோவும் புலிகளை அப்போதே அழித்து விடுவது என்ற முடிவை எடுத்திருந்தது. அதற்கான கருவியாக டெலோ தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இந்திய உயர் மட்டத்தில் தொடர்பு கொண்ட புலி அனுதாபிகளாலோ அரசியல் வாதிகளாலோ செய்தி புலியின் கைகளை எட்டிவிட, சீறிக்கொண்டு புலி எழுந்துவிட, கருவி உடைத்தெறியப்பட்டது. ஈழத்தமிழனின் விதியில் அழுத்தமான ஒரு கோடு வரையப்பட்டது.
அடுத்த சம்பவம் அதன் பின்னான பல காலத்தின் பின் இராஜீவ் -ஜெயவர்த்தனா ஒப்பந்தக் காலத்தில். இராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில் பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள். அப்போதைய சிறிலங்கா இராணுவ தளபதி டி.ஜே.வீரதுங்கவின் பலத்த எதிர்ப்பையும் மீறி ஜேஆரின் மகனும் ஆலோசகருமான ரவி ஜெயவர்த்தனவால் துப்பாக்கிகளின் குண்டுகள் அகற்றப்பட்டன. அதற்கு முன்னுதாரணம் கொடுத்தவர் எகிப்து நாட்டின் ஜனாதிபதி அன்வர் சதாத். இதே போன்ற ஒரு இராணுவ அணிவகுப்பில் தன் உயிரைக் கொடுத்து இராஜீவைக் காப்பாற்றியிருந்தார்.
இல்லாவிட்டால் அன்று துப்பாக்கியின் பின் பக்கத்தால் இராஜீவை அடித்த சிங்கள வீரன் அவ்வளவு சிரமப்படாமலேயே இராஜீவை தீர்த்துக் கட்டியிருப்பான். இராஜீவின் உயிர் இலங்கைக்கே ஒதுக்கப்பட்டிருந்தாலும் அது ரவியின் ரூபத்தில் தமிழ் மக்களுக்கெதிராகத் திருப்பிவிடப்பட்டு விட்டது. பிரபஞ்சம் வரைந்த இரண்டாவது கோடு.
அன்று சிங்களவர்களால் இராஜீவ் தீர்த்துக் கட்டப்பட்டிருந்தால் இன்று ஈழத்தமிழ் மக்களால் அதிகம் நேசிக்கப்படுபவர் அவராகத் தான் இருந்திருக்கும். இந்தியாவும் கூட. ஆனால் என்ன செய்வது... விதி வலிது.
//ஆனால், ராணுவ அணிவகுப்புபின்போது அவரை சுட்டுக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது இப்போது தெரிய வந்துள்ளது.
ராஜீவ்காந்திக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை தரும்போது, ராணுவத்தினர் வைத்திருக்கும் துப்பாக்கிகளில் குண்டுகள் இருக்கக் கூடாது. ராணுவத்தினர் குண்டுகள் இல்லாத துப்பாக்கிகளை ஏந்தியவாறுதான் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசகர் ரவி ஜெயவர்த்தனே தனது தந்தையிடம் கேட்டுக்கொண்டார்.
அதிபர் ஜெயவர்த்தனே இதை ஏற்றுக்கொண்ட போதிலும் அப்போதைய ராணுவத் தளபதியாக இருந்த லெப்டினெட் ஜெனரல் டி.ஜே.வீரதுங்கா இதை ஏற்காமல் எதிர்ப்புத் தெரிவித்தார்.
துப்பாக்கியிலிருந்து குண்டுகளை அகற்றுவது படைவீரர்களின் மனநிலையைப் பாதிக்கும். படைவீரர்களின் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிடும் என்று வீரதுங்கா தெரிவித்ததோடு, குண்டுகளை அகற்ற கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்தார். ஆனால் ரவி ஜெயவர்த்தனேவின் ஆலோசனைப்படி குண்டுகள் அகற்றப்பட்ட துப்பாக்கியை அணிவகுப்பு மரியாதையின் போது பயன்படுத்தினர்.
துப்பாக்கியிலிருந்து குண்டுகள் அகற்றப்பட்டதால்தான், ரோஹன டி.சில்வா வேறுவழியின்றி துப்பாக்கி பிடியால் ராஜீவ்காந்தியைத் தாக்கும் சம்பவத்தை நிகழ்த்தினார். இந்த அணிவகுப்பின் போது, துப்பாக்கியில் தோட்டாக்கள் இருந்திருந்தால், அந்த ராணுவ வீரர் ராஜீவ்காந்தியை சுட்டுக்கொன்றிருப்பார்//-சமாதானத்திலிருந்து யுத்தம்; கிளர்ச்சியிலிருந்து பயங்கரவாதம் (From Peac to war, Insurgency to Terrorism) என்ற புத்தகத்தில் இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சிரில் ரணதுங்கா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment