ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, July 2, 2009


இந்தியா உடையும். கனவல்ல......நிஜம்


எவரை எப்போது எங்கு வாசித்தாலும் உலக பிராந்திய வல்லரசு ஒழுக்கைப் புரிந்து கொள்வதே உலகைப் புரிந்து கொள்ளச் சரியான பார்வை என்கின்றார்கள். சரி நானும் தான் அந்த ஒழுக்கைப் புரிந்து கொள்வோமே என்று முயன்றபோது தான் இந்த அதிர்ச்சிகரமான ஆனால் நடக்கப் போகும் உண்மை பளிச்சிட்டது. இரண்டாம் மகாயுத்தத்துடன் உலகை இரண்டாகப் பிரித்துக் கொண்டபின் உலகின் பெரும் வல்லரசாக விளங்கியது சோவியத் தான்.

அது வரை உலகம் பார்த்திராத சமதர்ம சமுதாயத்தை மக்கள் அனைவரும் சமம் என்பதை அதுவரை நலிந்து போயிருந்த மனித சமுதாயம் இரு கரம் நீட்டி வரவேற்க ஆயத்தமாகி இருந்தது.

கைத்தொழில் புரட்சியின் பின்னான காலத்தில் கோலோச்சியிருந்த முதலாளித்துவப் பொருளாதாரத்தில் ஒரு சிலர் மட்டுமே ஊதிப்பெருக்க உறிஞ்சப்பட்ட ஏழை எளியவர்க்கம் தாம் காப்பாற்றப்படும் மார்க்கமாக சோவியத்தின் எழுச்சியைப் பார்த்தது. மார்க்ஸை லெனினை உச்சரிக்காத ஏழை எளியவர்கள் இல்லையென்ற அளவில் உலகமெங்கும் புது எழுச்சியாகப் பார்க்கப்பட்டது.

இதைபார்த்துப் பயந்த முதலாளிவர்க்கம் தொடர்ந்து செய்த முயற்சியால் சோவியத் குடியரசில் அதுவரை அமுங்கியிருந்த முதலாளிவர்க்கம் மீண்டும் உயிர் பெற்று ஏழைகளின் சமதர்மக் கனவை துண்டு துண்டாக உடைத்துப் போட்டது. இது உலக ஒழுங்கின் முதல் விதி.

ஏக வல்லரசாக அமெரிக்கா நிலை நிறுத்தப்பட்ட பின்னர் தோன்றிய அரசியல் பொருளாதார சிக்கல்களில் அமெரிக்கா சார்ந்த மேற்குலகம் தேக்கம் கண்டபோது மாவோயிஸ சிந்தனைகளால் வெளியுலகு உட்புக முடியாத இறுக்கமான அரணுக்குள் குறைந்த ஊதியத் தொழிலாளர்களின் அபரிமித உழைப்புடன் சீனா பொருளாதாரத்தில் நிறைவைக்கண்டது. தொடர்ந்த உழைப்பின் பயன்கள் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவித்தது. ஏற்றுமதியில் முன்னேற்றங்கண்ட சீனா இன்று பொருளாதார ஆட்டங்கண்டிருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கடன் கொடுக்கும் நிலையில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளது.

பொருளாதார துரித வளர்ச்சி அபரிமித மனித சக்தியைக் கொண்ட சீனாவை வல்லரசுக்கனவு காணத் தூண்டியது.வல்லரசுக்கான இராணுவ உபகரண உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த இயல்பாகவே வல்லரசுகளுக்கு உண்டாகும் தன் பிராந்தியத்தில் மெல்ல மெல்லச் செல்வாக்கு செலுத்தும் முனைப்பில் இறங்கியது.

இதே கனவில் எதுவித முன் ஆயத்தமோ தயாரிப்புகளோ இன்றி வாய்ச் சவடாலில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவை அமெரிக்கா கூர் தீட்டிவிட முனைந்தது. இப்பிராந்தியத்தில் உடனடிப்பிரச்சினை அமெரிக்காவின் தூண்டுதலில் இந்தியா மூலமே வரும் என்பதை தீர்க்கமாக உணர்ந்திருந்த சீனா இந்தியாவின் இறுமாப்பை உடைத்தெறிய அதன் அண்டை நாடுகளில் தன் கரங்களை வலுப்படுத்தியது.

அதன் விளைவுகள் தான் நேபாளத்தில் இந்திய ஆதரவு மன்னர் ஆட்சி தூக்கியெறியப்பட்டு சீன சார்பு மாவோயிஸ்டுகள் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இம்மாவோயிஸ்டுகளின் வெற்றியின் பின்துணை சீனா என்பது உலகறிந்த உண்மை.

அதேபோல பாகிஸ்தானின் அத்யந்த நண்பனாக சீனா மாறியிருப்பதுவும் அண்மையில் சிறிலங்காவின் உள்நாட்டுப்போரில் சிங்கள அரசாங்கத்தின் கைகளைப் பலப்படுத்தியதும் சீனாவே. இந்தியாவை ஓரங்கட்டும் முயற்சியில் சீனா வெற்றி பெறத்தொடங்கி விட்டது. மேலை நாடுகள் பொருளாதார மந்தத்திலும் உள்நாட்டுக்குழப்பங்களிலும் மூழ்கி இருக்க சீனா தான் நினைப்பதை எந்த எதிர்ப்புகளுமில்லாது செயற்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. சோவியத் சார்பு அனியிலிருந்து இந்தியா வெளியேறிக் கொண்டிருப்பதுவும் அமெரிக்க சார்பு நிலையெடுப்பதுவும் இந்தியா மீதான நம்பகத் தன்மையைக் குறைத்து விட்டது.

அமெரிக்க அணியுடன் சேர முடியாத ரஷ்யா அமெரிக்காவுடன் சேர்ந்து விட்ட இந்தியாவை நம்பத்தயாரில்லை. அதே போல முன்னாள் சோவியத் கூட்டாளியான இந்தியாவை விட பாகிஸ்தானையே அமெரிக்கா அதிகம் நம்புகின்றது. சீனாவிற்கு எதிரான காய் நகர்த்தலில் இந்தியாவைப் பயன் படுத்துமே தவிர வளர்த்து விடாது. சொன்னதைச் செய்யும் நாய்க்குட்டியான பாகிஸ்தானும் சீனாவின் வடக்காக ஜப்பானும் தெற்காக தென்கொரியாவும் வலுவான கூட்டாளிகளாக அமெரிக்காவிற்கு இருக்கும் வரை புதிய கூட்டாளிகள் அமெரிக்காவிற்கு தேவையில்லை.

அதே போல சீனாவின் நெருக்குதல்களில் இருந்து தப்பிக்க அமெரிக்க சார்பு நிலையெடுக்க இந்திய முதலாளி வர்க்கம் வேண்டி நிற்கின்றது. இந்திய முதலாளிகளின் பரந்து விரிந்த நுகர்வோர் சந்தைக்கனவை ஏற்கனவே சீனா கலைத்துப்போட்டிருக்கின்றது. இந்தியாவைச் சுற்றியிருக்கின்ற அனைத்துக் குட்டிநாடுகளுக்கும் சீனா அள்ளித்தரும் சலுகைகளும் உதவிகளும் மிகவும் உவப்பாய் இருக்கின்றது.

அதன் காரணமாகவே பாகிஸ்தானுக்கான அமெரிக்க ஆயுத உதவிகளை ஒபாமாவின் அரசு குறைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்தபோது பாகிஸ்தானின் அரசியலாளர்கள் அடுத்த நாளே பீஜ்ஜிங்கில் நின்றனர். அதே போல சிறிலங்காவின் அரச இராணுவ பிரதிநிதிகளையும் பீஜிங் தெருக்களில்க் காணலாம்.

அண்மையில் வங்காளத்தில் எழுச்சிகொண்ட மாவோயிஸ்ட் தீவிர வாதக் கிளர்ச்சிகள் சீனாவின் கரங்கள் இந்தியாவிற்குள்ளும் வெகு உறுதியாக காலூன்றி விட்டன என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.

இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ந்து வரும் பேராசைக் கனவுகளும் ஊழலில் ஊறிப்பிரளும் அரசியல்வாதிகளின் குழப்பங்களும் அடித்தட்டு மக்களின் மனங்களில் கோபாக்கினியை வளர்த்து விட்டிருக்கின்றது. அரசியல்வாதிகளைச் சரிக்கட்டி தங்கள் பரந்து விரிந்த சந்தை வசதியைப் பெற்றுக் கொள்ள இந்திய முதலாளிகள் பெரிதும் வேட்கையுடன் அலைகின்றனர். பணம் நிரம்பிய சூட்கேசுகளையே கடமையாற்றுவதற்கான கதவுகளாய் வரித்துக் கொண்டிருக்கும் ஊழல்பெருச்சாளிகளான அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் பணத்தையும் இந்திய அடிமட்ட நுகர்வோரிடமிருந்தே முதலாளித்துவம் வசூலித்துக் கொள்ளும். அப்போது இந்திய சாதாரணனின் வாழ்க்கைத் தரம் கீழ் நீக்கியே சென்று கொண்டிருக்கும். அப்படியான மனநிலையில் புதிய உலகைப்படைக்கும் மாவோயிஸச் சிந்தனைகளால் மக்கள் கவரப்படுவது இயல்பாகவே நடந்தேறும்.

இன்று வங்காளம் நாளை கேரளம் என்று ஏற்கனவே மாக்ஸிஸம் நிலைகொண்டிருக்கும் மாநிலங்களில் ஏற்படும் போராட்டம் பிரிவினை சீனாவின் ஆதரவுடன் மற்றைய மாநிலங்களுக்கும் பரவிச் செல்லும். முழுமையான மாவோயிஸ சிந்தனையுடன் பிரிய நினைக்கும் மாநிலத்தை பிரித்தெடுக்கவோ பாதுகாக்கவோ சீனா நிச்சயம் முன்வரும்.

1947 இல் ஏற்பட்ட முதற்பிளவு பாகிஸ்தானாகியது போன்று 72 இல் பங்களாதேசமாகியது.அதே போல மற்றைய மாநிலங்களும் பிரிந்து செல்லவே முயன்று கொண்டிருக்கின்றன. இந்தியா என்ற அமைப்பில் இருந்து பிரிந்து தனித்தன்மையுடன் வாழவே ஒவ்வொரு மாநில மக்களும் விரும்புகின்றனர்.

இந்தியா என்பது பொதுவான பொதுத்தன்மை அல்ல. அது பல்வேறு பட்ட தனித்தன்மைகளின் கூட்டு. பழைய சோவியத் யூனியனைப் போல பலமொழி பல இன மக்களின் கூட்டு. ஆனானப்பட்ட சோவியத் யூனியனாலேயே பலம்வாய்ந்த செம்படை கொண்டே நீண்ட காலம் வைத்திருக்க முடியாத கூட்டை இந்தியா போன்ற ஒரு நாட்டால் நெடுங்காலம் தக்க வைக்க முடியாது.

ஒரு நாடு என்பது ஒரே மொழி ஒரே இன மக்களைக் கொண்டிருப்பது தான் இயற்கை. மிகப்பெரும் நாடான அமெரிக்காவில் ஒரே மொழி பேசுவதால் ஏற்படாத பிரிவினை அதே அளவுள்ள கனடாவில் இரு மொழி பேசுவதால் அடிக்கடி எழுகின்றது. கனடிய மக்கள் மதத்தால் ஒன்று பட்டவர்களாயினும் மொழியால் இரண்டு பட்டவர்கள். பிரச்சினையோ போராட்டமோ வெடிக்காத நாடுகள் ஐரோப்பிய நாடுகள். ஒரே மொழி ஒரே மதம் ஒரே மக்கள்.

சுவிஸ் ஒரு வித்தியாசமான நாடு. மூன்று நாடுகளையும் சேர்ந்த வசதியான மக்கள் சேர்ந்து உருவாக்கிய நாடு. பிரச்சினை நிலவும் அரபு நாடுகளிலும் மொழி ஒன்று ஆனால் மதம் இரண்டு. அல்லது வழி இரண்டு.

பொருளாதார ஏற்றத்தாழ்வு உச்சமடைய அடைய இனங்களிற்கிடையிலான முரண்பாடும் கூர்மையடையும். அது இந்தியாவின் கோடீஸ்வர ஊழல் அரசியல்வாதிகளாலும் பேராசை பிடித்த முதலாளிகளாலும் சிதறிப்போகும் இந்திய சந்தையைத் தன் கையகப்படுத்தத் துடிக்கும் சீனாவாலும் துரிதப்படுத்தப்படும்.

அப்படிச் சிதறிப் போகும் இந்திய குட்டி நாடுகளில் சம்பந்தப்பட்டவர்களிடம் கணக்குக் கேட்க ஈழத்தமிழினம் காத்திருக்கும் ஆறாத வெஞ்சினத்துடன்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil