ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, July 15, 2009


இவர்களுக்காக நாம் என்ன செய்கின்றோம்?


சிங்கக் கொடிக்கு சலூட் அடித்து "நமோ நமோ மாதா"பாடுவதுடன் காலை விடிகின்றது. அது அவர்கள் கடமையல்ல கட்டாயம். 24 மணிநேரமும் துப்பாக்கி முனைகளால் ஆட்டுவிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ செய்ய வேண்டியது.

கொழும்பிலிருந்து 260 கி.மீற்றர் தொலைவாக அமைந்திருக்கும் வெலிகந்த சீர்திருத்த முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் 350 பேரின் காலை இப்படித்தான் விடிந்து கொண்டிருக்கின்றது.

சில மாதங்களின் முன்னர் இதே சிங்கக்கொடியை கிழித்து காலில் போட்டு மிதித்தவர்கள் தான் இவர்களெல்லாம்.தமிழீழத் தாகத்துடன் புலிகளாகக் கொண்டாடப்பட்டவர்கள். புலியாதரவாளர்களால் தீரர்களாகவும் புலியெதிர்ப்பாளர்களால் பாசிச வெறியர்களாகவும் சித்தரிக்கப்பட்டவர்கள். இன்று அனாதைகளாக...

செத்துப்போன புலிகளின் தலைவருக்கு உயிரூட்டுபவர்கள் ஒரு புறம்,தமிழ் மக்களின் தலைமையை தங்கள் இடுக்கிப்பிடியில் வைத்திருக்க தேசம் கடந்த அரசு அமைக்க பிரயத்தனப்படுபவர்கள் மறு புறம்,புலிப்பாசிசம் என்று தம் மனதின் காழ்ப்புக்களைக் கொட்டித் தூற்றியவர்கள் எதிர்ப்புறம்... ஆனால் யாரின் கவனத்தையும் பெறாது எதை வேண்டி எந்த சுதந்திரத்திற்காகப் போராடினார்களோ ..எதற்காக தம் இளமையைத் தொலைத்து குடும்பத்தை ஒதுக்கி உறவுகளைப் பிரிந்து காடுகளிலும் மேடுகளிலும் அலைந்தார்களோ அவை எல்லாம் மறுக்கப்பட்டு மறைக்கப்பட்ட அனாதைகளாக எதிரியின் காலடியில் அவன் பிச்சையில் உயிர் வளர்க்கின்றார்கள்.

இவர்களைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய இந்த மாமனிதர்கள் இன்று தம் சொந்த வயிற்றுப்பிழைப்பிற்காக எதிரி கற்றுக்கொடுக்கும் தச்சுவேலை கட்டட வேலை ஒட்டு வேலை என்று வேலைகளைக் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.அத்துடன் ஆங்கிலம் கட்டாய சிங்களம். இன்னும் மூவாயிரம் பேர் இவர்களின் பின்னால் அடுத்த அனுபவத்திற்காக காத்திருக்கின்றார்கள்.

இதே போல கொழும்பிலிருந்து வடக்காக 60 கி.மீற்றர் தொலைவிலுள்ள அம்பேபுச என்ற இடத்திலுள்ள முகாமில் நூற்றிற்கும் அதிகமான பதின்ம வயதுப் பெண்களும் குழந்தை போராளிகளும் அடைபட்டிருக்கின்றார்கள்.

இந்த எண்ணிக்கைகள் சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட எண்ணிக்கை. ஒரு முறை சிறிலங்கா இராணுவ தளபதி சரத்பொன்சேகா இறுதிக்கட்ட சுற்றி வளைப்பில் 9000 புலிகள பிடிபட்டதாகக் கூறியிருந்தார். உண்மையில் எத்தனை பேர் பிடிபட்டார்கள். இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற உண்மை பிரபாகரனுக்கும் சரத் பொன்சேகாவிற்குமே தெரிந்திருக்கும்.

அதில் பிடிபட்ட 17 வயதான வஜீமா ரவீந்திரன் இப்பொழுது தச்சுத் தொழில் கற்றுக் கொண்டிருக்கின்றார். தமிழ்ப்பாடல்களையும் புலிக்கொடியையும் மட்டுமே பார்த்திருப்பதாகக் கூறும் அவர் சிறிலங்காவின் அடக்கு முறையை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்.

புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகளில் ஒருவராக இருந்த 29 வயது தேவநாயகம் சங்கர் இப்போது கட்டட வேலை கற்றுக்கொண்டிருக்கின்றார். 15 வருடங்கள் புலிகளுடன் இணைந்திருந்த இவர் "தலைவர் போனபின் எங்களுக்கு வழிகாட்ட யாருமில்லை" என்று கழிவிரக்கத்துடன் பேசுகின்றார். வழிகாட்ட மட்டுமல்ல, காப்பாற்றவும் தான்.

35 வயது ஆஞ்ஜலோ செல்வகுமார் "துப்பாக்கியுடன் நின்றபோது மக்கள் பயத்தில் எங்களுக்காக எல்லாம் செய்தார்கள். பணம் சம்பாதிப்பது இலகுவாக இருந்தது. இப்பொழுது பணம் சம்பாதிப்பது (தொழில் செய்வதன் மூலம்) எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது" என்கின்றார்.

இவர்கள் எல்லோரும் இப்படி இருப்பதற்கு யார் காரணம்? இவர்களின் சிதைந்து போன வாழ்விற்கு யார் பொறுப்பு? புலிகளா? புலியெதிர்ப்பாளர்களா? சிங்கள பேரினவாதிகளா? இல்லை தமிழ் மக்களா?

இவர்களுக்காக நாம் என்ன செய்யப் போகின்றோம்?

1 comment:

Anonymous said...

//35 வயது ஆஞ்ஜலோ செல்வகுமார் "துப்பாக்கியுடன் நின்றபோது மக்கள் பயத்தில் எங்களுக்காக எல்லாம் செய்தார்கள். பணம் சம்பாதிப்பது இலகுவாக இருந்தது. இப்பொழுது பணம் சம்பாதிப்பது (தொழில் செய்வதன் மூலம்) எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது" என்கின்றார்.//

????

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil