ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, December 25, 2009


துரத்தப்பட்ட கடவுளை மீண்டும் "கண்டுபிடித்திருக்கின்றார்கள்".


மன்னார் ,வங்காலை,பேசாலை பகுதிகளிலிருந்தே நான்காவது ஈழயுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. அது அங்கங்கே குடியிருந்த மக்களை குடியெழுப்பியபடியே முன்னகர்ந்தது. மக்களின் அவலங்களையும் அழுகுரல்களையும் கேட்க அங்கு காவலர்களும் இல்லை கடவுள்களும் இல்லை. புலிக்காவலர்களுக்கு முன்னாலேயே கடவுள்களும் ஓடித் தப்பினார்கள். எல்லோராலும் நிராதரவாக விடப்பட்ட மக்கள் ஓடித்தப்ப முயன்ற வழிகளிலும் வெளிகளிலும் இனி ஓட முடியாத உடல்களை மட்டும் இழந்து சுவர்க்கம் புகுந்தார்கள். பங்கர்களில் தமது இரத்தத்தைத் தானமாகக் கொடுத்து ஆவியைத் துறந்து இயேசுவைத் தேடி பரலோகம் புகுந்தார்கள்.

முள்ளிவாய்க்கால் வரை மூச்சிரைத்த ஓட்டத்திலும் முடிவுறாத பாவத்துடன் இரக்கம் காட்ட யாருமில்லாத அநாதைகளாகச் செத்துத் தொலைந்து போய் விட்டார்கள். கடவுளின் தூதுவர்களும் ,ஏஜெண்டுகளும் ,பக்தர்களும் இரக்கம் காட்டப்படாத அந்தப்பாவிகளின் இரத்தத்தால் கழுவப்பட்ட பாதையில் போய் நிறுவி விட்ட மடுமாதா சொரூபத்தின் முன் தம் பாவங்களைக் கழுவுவதற்காக கண்ணீர்விட்டுப் பாவனை செய்கின்றார்கள்.

இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டதாகப் பாவனை செய்யப்பட்ட இந்தப் பூமி இத்தனை பாவிகளின் இரத்தத்தையும் குடித்தும் இன்னும் பாவாத்காரத்திலேயே மூழ்கிப் போய்க்கிடக்கின்றது.

எல்லாப் பாவங்களின் காராணகர்த்தாக்களான நாட்டின் தலைவரும் தளபதியும் அறிக்கை விட்டிருக்கின்றார்கள். தங்களால் துரத்தப்பட்ட கடவுளை மீண்டும் "கண்டுபிடித்திருக்கின்றார்கள்".

"எமது மக்களின் சிதைந்து போன வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு இயேசு போதித்த அன்பையும் கருணை யையும் இலங்கை மக்கள் பெரிதும் வேண்டி நிற்கின்றனர்."

காரணமும் காரியமும் நீயே என்ற பகவத் கீதையின் வாக்கியத்தை மகிந்தர் மீளவொருமுறை நினைவு கூர்ந்திருக்கின்றார்.

"பெத்லஹேமில் சிறியதொரு மாட்டுத் தொழுவத்தில் இடம்பெற்ற இயேசு நாதரின் பிறப்பு, அன்பு என்பது எல்லாத் தடைகளையும் தாண்டி வாழ்க்கையில் தாழ் நிலையிலுள்ள மக்கள் முதல் இப்பூவுலகில் எம்முடன் ஒன்றாக வாழும் உயிரினங்கள், எம் எல்லோருக்கும் வளம் சேர்க்கும் இயற்கை ஆகிய எல்லாவற்றையும் தழுவிச் செல்லவேண்டும் என்பதையே அடையாளப்படுத்தி நிற்கின்றது.
நத்தார் பண்டிகையின் நாதஒலி நல்உள்ளம் படைத்த எல்லோருக்கும் புதியதோர் சமாதான யுகத்திற்கான விடியலை அறிவிப்புச் செய்து நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பரப்புகின்றது." -சாத்தான் மகிந்தவின் புதிய வேதம்


"கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களின் மத வழிபாடுகளுக்காக அந்த உன்னதமான பூமியை மீட்டெடுப்பதற்கு போராட்டத்தில் உயிர்நீத்த சகல மக்களையும் அதேபோல் இராணுவத்தினரையும், பொலிஸாரையும் சிவில் படையினரையும், எல்லாப் படையணிகளையும் இங்கு நான் நினைவு கூருகிறேன்." - சரத் பொன்சேகா.

உயிருக்குப்பயந்து ஓடிய மக்களைக் கொன்று போட்ட இராணுவம் மடுமாதா கோவிலின் மீட்பின் பங்காளர்களாக அந்த மக்களையும் இரத்த சாட்சியாக்கியிருக்கின்றது.எதைச் செய்தோம் எதைச் சொல்ல வந்தோம் என்பதே அறியாத துஷ்டரின் போதனைகளை அறிவுரையாகக் கேட்கும் பாவநிலையில் இன்று நாட்டுமக்கள்.


ஏடன் தோட்டத்தில் ஆதாமையும் ஏவாளையும் பாவக்கனியைச் சுவைக்கச் செய்த சாத்தான்கள் ஓதும் இப்புதிய வேதத்திற்கு ஓடி ஒழிந்து இன்று புதிதாய்ப்பிறக்கும் கடவுளின் தீர்ப்பு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற பரிதவிப்புடன் சுவர்க்கம் செல்லும் வழியெங்கும் முக்கலும் முனகலுமாய் எம் தமிழ் மக்கள்.

கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பாராக.

பரிசுத்த வேதாகமத்தில் நீதிமொழியில் இவ்வாறு கூறப்படுகிறது:
உத்தம மனுஷன் தேவனுடைய கிருபையைப் பெறுவான்.
தீய எண்ணங்கள் உள்ளவனை நியாயம் தீர்ப்பார்.
மனுஷன் துன்மார்க்கத்திலே நிலைத்திருப்பதில்லை.
நீதிமானின் வேர் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil