ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Wednesday, December 2, 2009
நமக்கு நாமே
உலக, பிராந்திய பேராசை நலன்களுக்குள் அகப்பட்டு சிக்கிச் சின்னாபின்னமாகிப் போய் எந்த நம்பிக்கையுமற்றுக் கூனிக்குறுகிப் போயிருக்கின்றது தமிழினம். பொய்மையே பேசி பொய்மையாய் இரங்கி பொய்மையாய் நடந்த பிரதேச, பிராந்திய, உலக சக்திகளின் கழுத்தறுப்புகளால் ஏற்பட்ட காயம் என்பது இலகுவில் ஆற்றிவிடக் கூடியதல்ல. அதனாலேயே நிர்க்கதியாக நிற்பதென்ற நினைவும் அதிக கெடுதலைக் கொடுக்கக் கூடியது.
தீவிரவாதத்துடனான யுத்தம், யுத்தத்தின் பின்னான தீர்வு என்று பல்வேறு தொனிகளில் உச்சரிக்கப்பட்டு வந்த விடயம் இப்போது தேர்தலின் பின்னான தீர்வு அல்லது அல்லது தேர்தலுக்கான திட்டம் என்ற அளவில் சுருங்கிப் போய் விட்டது. எப்போதோ எழுதி வைக்கப்பட்ட 13 ஆவது திருத்தம் என்ற எலும்புத்துண்டு மீண்டும் கிண்டியெடுக்கப்பட்டு நக்கிப் பார்க்கப்படுகின்றது.
உலகத்தின் புதிய வல்லரசு இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் சண்டியன் என்ற புதிய தோற்றத்தை மறைத்தபடியே சமாதானப் புறாக்களின் சிறகுகளில் பறந்து வந்த இந்தியா தமிழ்மக்களை அறவே ஒதுக்கிவைத்துவிட்டு தான்தோன்றித் தனமாக முண்டா தட்டி சிங்களத்தின் மீது சுமத்திய திட்டம் தான் இந்த 13 ஆவது அரசியல் திருத்தம். அதிகம் ஒன்றுமில்லை, சட்டம் ஒழுங்கு பொலீஸ் அதிகாரம் மற்றும் காணிப்பங்கீடு ஆகியவற்றை மாகாண சபைகளுக்கு வழங்கல் என்ற பாவனையைத் தான் அது கொண்டுள்ளது.
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இருக்கக் கூடிய அதிகாரங்களுக்கு மேம்படாத தன்மையுடன் கவனமாக வடிவமைக்கப்பட்டது. அதை நம்பி ஆட்சியில் அமர்த்தப்பட்ட வரதராகப்பெருமாள் இறுதியில் வெறுத்துப்போய் சொன்ன வார்த்தைதான் "நான் இருப்பதற்கு ஒரு மேஜையும் கதிரையும் கூட பெற்றுக்கொள்ள முடியாத அதிகாரம் தான் இங்கிருக்கின்றது". அதனைத் தொடர்ந்து அஞ்ஞாத வாசம் போனவர்தான். இது வரை மீண்டு வரவில்லை.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஓடிய இவ்வேளையில் முன்னர் இருந்த வடக்கு கிழக்கு மாகாணத்தை வடக்கு,கிழக்கு என்று தனியாகப்பிரித்து, பிரிந்த கிழக்கு மாகாணத்திற்கு முதலமைச்சராய் வந்திருக்கும் முன்னாள் புலி இந்நாள் எலி சந்திரகாந்தன் கூட புலம்புவது அதையே தான். 20 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையிலும் எந்த வித சுதந்திரத்தையும் தமிழ் மக்களுக்கு கொடுத்து விடக் கூடாது என்ற உறுதியுடன் சிங்களப் பேயாட்சியும் அதனை முண்டு கொடுத்தபடி இந்திய,அமெரிக்க உலக சக்திகளும்.
ஒரு சின்னஞ்சிறு இலங்கையில் சமாதான சக வாழ்வை ஏற்படுத்த முடியாத சர்வதேச சமூகமும் சபைகளும் நடைமுறைகளும் தோற்று விட்டன என்றே கூறவேண்டும்.
அவர்கள் தோற்று விட்டார்கள் என்பதற்காக நம் மக்கள் வாழாதிருந்து விட முடியுமா? இனி யாரையும் நம்பியிருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதைத் தமிழ் மக்கள் உணரவேண்டும். ஒலீவ் கிளையுடன் வரப்போகும் தேவ தூதனையோ மேற்கில் இருந்து கிழக்கே பறக்கப்போகும் சமாதானப் புறாவையோ நம்பியிருப்பதில் நடக்கப்போவது எதுவுமில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
"வல்லன வாழும்" கூர்ப்பின் அசைக்க முடியாத விதி. ஆம் வல்லன மட்டுமே வாழும். நாம் வாழ்வதற்கான போராட்டத்தில் இறங்க வேண்டும். நமக்கு நாமே. ஆம் எம்மை நம்பி நாமே போராட வேண்டும். போராட்டம் என்றால் ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு ஓடுவதென்பதல்ல. மக்களே வீதியில் இறங்கிப் போராட வேண்டும். நமக்கு நாமே போராட வேண்டும். நம் உரிமைகளைப் பெற்றிட மக்கள் அனைவரும் வீதிக்கு வர வேண்டும்.
இங்கு தலைவனும் இல்லை தொண்டனும் இல்லை. நாமே தலைவர் நாமே தொண்டர். பசப்பு வார்த்தைகளைக் கூறிக்கொண்டு வரும் அரசியல் வாதிகளை அடித்து விரட்ட வேண்டும். இராணுவத்தை விட்டு மக்களைக் கொல்வார்கள். எத்தனை மக்களை? எத்தனை நாளைக்கு? இது வரை போராடாது இருந்த மக்களையும் அவ்வாறு தானே கொன்று போட்டார்கள். இப்போதும் போராடாது இருக்கும் மக்களையும் அவ்வாறுதானே கொல்கின்றார்கள். எங்களிடம் இருப்பது உயிர் ஒன்று தானே. சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அதுவும் போவதில் என்ன குறைந்து போய்விடும். மக்கள் போராட்டத்தை எந்தக் கொம்பனாலும் அடக்கி விட முடியாது. தொடர்ந்து காபந்து பண்ண முடியாது.
இழப்பதற்கு எம்மிடம் உயிரைத் தவிர ஒன்றுமில்லை என்பது தான் நமது பலம். புலம்பெயர் தேசங்களில் இருக்கும் உறவுகள் ஒன்றை விளங்கிகொள்ள வேண்டும். உங்கள் ஆலோசனகளையும் தலையீடுகளையும் உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். உண்மையிலேயே உதவும் எண்ணம் இருந்தால் சுழற்சி முறையில் இலங்கைக்கு வந்து போராடும் மக்களுடன் சேர்ந்து போராடுங்கள்.
உங்கள் புலம் பெயர் தேசத்து பாஸ்போட்டுகள் சிலவேளை உங்களைக் காக்கக் கூடும். அல்லது சாவதென்றாலும் அது தமிழுக்காகவே இருக்கட்டுமே. நம் அடுத்த தலை முறையாவது துயரங்களில் இருந்து வெளிப்பட நம் இரத்தம் உதவட்டுமே. அவ்வாறில்லாது பேப்பர் பேச்சிலும் வாய்ச்சவடாலிலும் எங்கள் உணர்வுகளைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.
இது நமக்கு நாமே போராட்டம். இங்கு யாரின் அனுமதியும் தேவையில்லை. யாருக்காகவும் காத்திருக்கவும் நமக்கு நேரமில்லை. நமக்கு நாமே.. கரங்களை இறுக்கிப் பிடியுங்கள். இப்போதும் பின் நின்றால் நம்மை யாராலும் காக்க முடியாது போய் விடும்.
நமக்கு நாமே.. கரங்களை இறுக்கிப் பிடியுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment