ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, December 10, 2009


30 ஆயிரம் புதிய படைகளும் நோபல் பரிசும்

இப்போதெல்லாம் மனிதருக்கு விவஸ்தை என்பதே கிடையாது போய் விட்டது. ஏன்? எதற்காகச் செய்கின்றோம் என்று அறியாது செய்து விட்டு "தத்தக்கா பித்தக்கா"என்று அசடு வழிந்து கொண்டே சிரிப்பது வாடிக்கையாகி விட்டது. இந்தச் சுழியில் இப்போது அமிழ்ந்து கொண்டிருப்பது அமெரிக்காவின் முதல் மனிதன் பராக் ஒபாமா.

ஈராக்கில் படையை அனுப்பியது அராஜகம் செய்வது எல்லாம் "கெளபோய் புஷ்ஷின்" நிர்வாகம் செய்தது என்ற கோதாவில் ஒபாமா மீது அனுதாபம் இருந்தது சில நாள் முன்வரையில். பதவிக்கு வந்ததும் இராக்கில் இருந்து படையை எடுப்பேன். உலகத்தில் அமைதியைக் கொண்டு வருவேன் என்று முழங்கிய ஒபாமா சுழட்டிய வாளும் மொட்டை தான் என்பது அண்மையில் ஆப்கானிஸ்தானிற்கு மேலும் முப்பதினாயிரம் படையை அனுப்ப முடிவு செய்தபோது புரிந்தது.

அட்டைபோல் மக்களை உறிஞ்சிக் கொழுக்கும் பெரும் முதலாளிகளின் உலகம் எப்போதும் தட்டைதான். அது ஒபாமாவிற்காகவோ மற்றவர்களுக்காகவோ வளைந்து கொடுப்பதில்லை. இணங்கிப் போக வேண்டியது ஒபாமா போன்ற ஜனாதிபதிகளே. ஆணையிடுவது அவர்கள். நிறைவேற்ற வேண்டியது இவர்கள். அப்படித்தான் அமெரிக்க அரசியல் இருக்கின்றது.

இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றது ஒரு துப்பாக்கிக் குண்டும் ஒரு இராணுவ மரியாதையும். அடிமைகளை ஒழிக்க வெளிக்கிட்ட ஆபிரஹாம் லிங்கன் முதல் பல ஜனாதிபதிகளுக்குக் கிடைத்த பரிசு அது தான். அதிலிருந்து தப்பித்துக் கொள்ள இப்போதைய ஜனாதிபதிகள் அதிகம் கற்று வைத்திருக்கின்றார்கள். ஒத்துப் போகின்றார்கள்.

இரண்டு யுத்தங்களை (வெளிப்படையாகவும் மறைமுகமாக எத்தனையோ உறிஞ்சலுக்கான யுத்தங்கள்) நடாத்திக் கொண்டிருக்கும் ஒரு அரசின் தலைவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு. கேலிக்கூத்தாகத் தெரியவில்லையா? சமாதானத்திற்கான யுத்தம் என்று முழங்கிய சந்திரிகாவிற்குப் போனது ஒரு கண். ஒபாமாவிற்கு இப்போது கிடைத்திருப்பது நோபல் பரிசு.

ஒபாமாவிற்குக் கிடைத்த நோபல் பரிசு உலக சமாதானத்தை எதிர்பார்த்து ஒபாமாவை வரவேற்ற உலக மக்களுக்கு அடித்த சாவு மணி. ஈழத்திலும், யுத்த காலக் குற்றம் ..அதற்கான விசாரணை என்று முழங்கிய அமெரிக்கா சுருதி பேதம் காட்டத்தொடங்கியிருக்கின்றது. இதுவும் இது போன்ற அண்மைய பல நிகழ்வுகளும் (தனி மனித சுதந்திரத்தை எப்போதும் அடக்கியொடுக்கும் சீனாவுடன் உறவு,சீனாவிற்கு எதிரான தைவான் தீபெத் ..மூச்) ஒபாமா என்ற தனி மனித அலை அடித்து ஓய்ந்து சருகாக அள்ளுப்பட்டுக் கொண்டு போவதன் ஆரம்ப அறிகுறிதான். இனி வழமை போலவே கோபமும் குரோதமும் குண்டுகளும் நிறைந்த வழமையான உலகில் வழமையான வாழ்க்கை தான் நம் எல்லோருக்கும்.


No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil