
சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவின் நலன்களுக்காகச் செயற்படும் அதேவேளையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவின் நலன்களுக்காகச் செயற்படுவதாக ஜே.வி.பி. கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றது.
இருவருமே சிறிலங்காவை விலையாகக் கொடுத்து அந்த இரு நாடுகளினதும் நலன்களுக்காகச் செயற்படுவதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு அழைப்பு விடுப்பதன் மூலமாக ராஜபக்ச சகோதரர்கள் நாட்டுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்திவருவதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டடிருப்பதன் மூலமாக நாட்டின் பாதுகாப்பை கோத்தாபய ராஜபக்ச ஆபத்தான நிலைக்குக் கொண்டுவந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டிய ரில்வின் சில்வா, இந்த உடன்படிக்கை இந்தியாவின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டிருப்பதன் மூலம் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமான நிலையை அடைந்திருப்பதாகவும் தெரிவித்த அவர், கோத்தாபய ராஜபக்ச ஒரு அமெரிக்கப் குடிமகனாக இருப்பதால் அமெரிக்க நலன்களையே முன்னிலைப்படுத்திச் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தானிய நாளேடான 'த நேசன்' வெளியிட்ட செய்தியை ஆதாரம் காட்டி கருத்து வெளியிட்ட ரில்வின் சில்வா, விடுதலைப் புலிகளை போரின் மூலம் தோற்கடித்த உடனடியாகவே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசனையைக் கேட்டு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதென்ற முடிவை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச எடுத்தார் எனக் குறிப்பிட்டார்.
சரத் பொன்சேகா தொடர்ந்தும் இராணுவத் தளபதியாக இருந்தால் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமையே சிறிலங்காவிலும் உருவாகும் என இந்தியப் பிரதமர் தெரிவித்ததையடுத்தே சரத் பொன்சேகாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசுத் தலைவர் எடுத்ததாகவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவைப் போல நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் போக்கை சீனா ஒருபோதுமே கொண்டிருக்கவில்லை எனவும் குறிப்பிட்ட ரில்வின், இவ்வாறு சீனா தலையிட்ட ஒரு சந்தர்ப்பத்தையாவது குறிப்பிட முடியுமா என ஊடகவியலாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
 
 
 Posts
Posts
 
 



 
 


No comments:
Post a Comment