ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, December 2, 2009


இந்தியாவுடனான ஈழத்தமிழனின் கடைசி உறவு


தொப்புள் கொடி பப்புள் கொடி உறவெல்லாம் திகட்டிப் போய் விட்டது. இந்தியா என்றாலே நாராசமாகக் கரிந்து கொண்டிருக்கின்றது ஈழத்தமிழனின் கண்கள் உப்புக் கண்ணீரிலே. செய்யக்கூடாத தவறும் விடக்கூடாத பிழையுமான இந்தியாவின் மேலான நம்பிக்கையை ஊட்டி வளர்த்தவர்கள் தமிழரசுக் க்ட்சியும் அதனைத் தொடர்ந்து வந்த தமிழர் கூட்டணியும் தான். இரத்தப்பொட்டும் அடுக்கு மொழிகளும் "எழுந்து வா மனோகரா" போன்ற திராவிடக்கட்சிகளின் வசனங்களைப் பாடமாக்கி ஒப்புவித்த பெருமையும் அதனால் இழந்துவிட்ட இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களுக்குமான பொறுப்பும் அவர்களையே சார்ந்தது.

இந்திப் பெண்ணிற்கு சேறடித்து தமிழ் வீரம் உயர்த்தி தன் பையை நிரப்பிக் கொள்ளும் கீழ்த்தர அரசியலைக் காப்பியடித்து சிங்களச் "சிறீ" க்கு தார் பூசி தமிழ்ச் "சிறீ" எழுதி பிரம்படியும் செருப்படியும் வாங்கிய மூன்ன்றாம் தரத்து தமிழ் அரசியல்வாதிகள் ஒரு விடயத்தை முற்றுலுமாக மறந்து போய் விட்டார்கள். இந்தியா போன்ற பல்லின மொழிக் கலாச்சாரச் சூழலில் பெரும்பான்மையினத்தின் அடக்கு முறை மட்டுப்பட்ட அளவிலேயே இருக்கும் என்பதையும் அபரிமிதமான சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை பல்வேறு சிறுபான்மையினத்தவர்களையும் ஒருமுகப்படுத்தி தங்களை சிறுபான்மையாக்கி விடும் என்பதை அவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் இலங்கையில் இருக்கும் ஒரேயொரு சிறுபான்மையினம் தமிழர்களே. அதிலும் மலையத் தமிழர்களை நாடற்றவர்களாக்கி நமக்கு நாமே ஆப்படித்துக் கொண்டோம். வடக்குக் கிழக்குத் தமிழர்களின் மேட்டுக்குடி மனப்பான்மை இன்று நமக்கு நாமே மண்மேடுகளைக்கட்டிப் புதைந்து கொள்ளும் அளவிற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது. தமிழ் பேசும் சோனகர்களோ வித்தியாசமான குணமும் பார்வையும் கொண்டவர்கள். தங்கள் வியாபார நோக்கங்களைப்பாதுகாக்க யாருடனும் கூட்டு வைக்கத் தயங்காதவர்கள்.

வரலாறும் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் கடந்து வந்திருக்கவில்லை. "தொப்பி பிரட்டிகள்" என்ற ஒரு சொற்பிரயோகம் தமிழ்ர்களுக்கு அவர்கள் மீதுள்ள நம்பிக்கையீனத்தால் உருவானதே. அதே போலவே மலையகத் தமிழர் மீதான காட்டிக்கொடுப்புக்களை அறிந்து வைத்திருக்கும் அவர்களாலும் ஈழத்தமிழினத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாது போனதும் இயற்கையானதே.

ஆகவே சிங்களப் பேரினவாதம் மூர்க்கமாக அடிமைபடுத்தும் களமும் சிறுமைப்பட்டுப் போகும் அவலமும் தமிழர்களுக்கு வாய்க்கும் என்பதை இவ்வாய் வீச்சு அரசியல்வாதிகள் கணக்கில் எடுக்கவேயில்லை. தத்தம் பதவிகளைக் காத்துக் கொள்ளவும் பணப்பைகளை நிரப்பவும் முண்டியடித்தார்களே தவிர தீர்க்க தரிசனம் வாய்ந்த தலைவர்கள் யாருமே இருக்கவில்லை. ஐம்பதுக்கு ஐம்பது புகழ் ஜீ.ஜீ பொன்னம்பலத்திலிருந்து தனித்தமிழீழம் கேட்ட எஸ்.ஜே.வீ செல்வநாயகம் வரை யதார்த்தம் என்ற ஒன்றை அறியாத அரசியல் கூழ்முட்டைகளாகவே இருந்தார்கள்.

அவர்களுக்குச் சற்றும் சலிக்காத சிங்கள ரெளடிகள். எப்போதோ செத்து உக்கிப்போன துட்ட கெமுனுவின் தமிழ் வெறுப்பைத் தூபம் போட்டு வளர்க்கும் கேடுகெட்ட அரசியல் துன்மார்க்கர்களின் கைகளில் இலங்கை சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது.

அரசியல்வாதிகளைத் தொடர்ந்து கோதாவில் இறங்கிய தமிழ் ஆயுதக் கிளர்ச்சியாளர்களும் அதே "குட்டையில் ஊறிய மட்டையான" இந்தியத் தொப்பூழ் கொடி என்ற சூப்பியை வாயில் திணித்தபடி பிச்சை ஏந்தி நின்றதுமே இன்றைய அவலத்தின் முடக்கத்தின் பெறுபேறாகும்.

வீரப்புலிகளின் வீழ்ச்சியின் பின் வாய் வீச்சில் அரசியல் செய்யக் கிளம்பியிருக்கும் அத்தனை மழைகாளான்களும் இரவல் புடவையில் இது நல்ல கொசுவம் என்று காட்ட முற்படுக்கின்றார்களே தவிர சுய சிந்தனையை வெளிப்படுத்தக் காணோம். தமிழகத் தமிழர்களின் ஆதரவு என்பது அதிக பட்சம் ஒரு கோஷமாக இருக்குமே தவிர வேறு ஒன்றையும் ஒரு போதும் சாதிக்க மாட்டாது. இதை நான் சொல்லுவதற்காக மன்னிக்க வேண்டும். உங்களுக்கே உங்கள் "பவர்" என்ன என்பது தெரியும். ஆகவே உங்கள் உணர்ச்சி வசப்படலை நிறுத்திக் கொண்டு அடுத்த வேளை சோற்றுக்கான வழியைப் பாருங்கள்.

கருணாநிதியின் ஈழத்தமிழ் அகதிகளுக்கான இந்தியக் குடியுரிமை, சீமானின் ஈழவல்லரசு ஜோக் என்பவற்றுக்கு நடந்த கதையை நீங்கள் அறிவீர்கள். இன்று இலங்கையில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவிற்கான வாக்குகளின் குறைநிரப்பிற்காக இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளை அள்ளிப்போக மகிந்த அரசு முடிவு செய்துள்ளது. இன்னுமொரு திறந்தவெளி முகாமில் அடைத்து வைத்து மகிந்தவிற்கான வாக்குப்பெட்டியை நிரப்புவது ஒன்றும் பெரிதான விடயமல்ல.

இந்த முடிவும் பிரணாப்பின் அண்மைய இலங்கை விஜயத்தில் இந்தியாவில் கூறப்பட்ட அறிவுரை தான். யுத்தம் முடிந்த மிக அண்மையான காலமாகிய இந்தப் பொழுதில் அழிக்கப்படவேண்டிய சாட்சியங்களும் "பட்டா" போடவேண்டிய இலங்கையின் பகுதிகளும், இந்தியாவின் பேச்சிற்கு "ஆமாம்" போடக்கூடிய மகிந்த தொடர்ந்தும் இருப்பதை இந்தியா சாதகமாக நினைக்கின்றது.

சரத் பொன்சேகாவின் அமெரிக்க சார்பும் சரத் பொன்சேகாவுடனான அமெரிக்காவின் அனுகூலமான போக்கும் இந்தியாவை மிரள வைத்திருக்கின்றது. அதே நேரம் ஈழத் தமிழினப்படுகொலையின் இந்தியாவின் கூட்டாளியான மகிந்தவைப் படிய வைப்பதில் இந்தியாவிற்கு அதிக சிரமம் இருக்கவில்லை. மேற்கு மற்றும் அமெரிக்க கூட்டாளிகளின் "சர்வதேச விசாரணை" என்ற அம்பு மகிந்தவை இந்தியாவை நோக்கி விரட்டுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

இலங்கையின் மீதான தங்கள் பிடியை இறுக்கிக் கொள்வதற்கும் சர்வதேச சமூகத்தின் முன்னால் "கறைபடாத நீதிமான்கள்" என்ற பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் "சர்வதேச விசாரணை" என்ற பிரமாஸ்திரம் மேற்கு மற்றும் அமெரிக்க நாடுகளுக்குத் தேவையாயிருக்கின்றது.

படுகொலையின் பின்னர் "சர்வதேச விசாரணையை" வேண்டி நிற்கும் இவர்கள் ஏன் படுகொலைகள் நடந்த போது அதைத் தடுத்து நிறுத்தவில்லை? என்று கேட்பது கூட அடிப்படை அரசியலே தெரியாதவர்கள் என்று உங்களைத் தனிமைப்படுத்தக்கூடும். அடுத்த மேற்கு அமெரிக்கக் கூட்டாளிகளின் அஸ்திரம் "நிதியுதவி" என்ற பெயரில் தங்கள் நீண்ட கால நவகாலணியாதிக்கத்திற்கான நிகழ்ச்சித் திட்டத்தை உலகவங்கி உட்பட்ட பினாமிகள் மூலம் நடைமுறைப் படுத்துவதாகும்.

இந்தியா ஒரு பேட்டை ரெளடி என்ற அளவில் இந்த "மனிதாபிமான" அளவுகோல்கள் பற்றி கவலைப் படவே படாது. ஜனநாயகம் என்ற பெயரில் ஒரு இழுபறி நிலையிலுள்ள குறுநில தண்டல்காரர்களின் அராஜகம் நிறைந்த ஆட்சியே நடைமுறையிலுள்ளது. எந்த மனித உரிமைகள் சட்டங்களையும் கோட்பாடுகளையும் நல்நெறிகளையும் மதிக்காத காட்டுமிராண்டித் தனங்கள் இன்னும் முற்றிலுமாக ஒழியாத சூழலே அங்கு நிலவுகின்றது.ஊழலும் இலஞ்சமும் அடக்குமுறையும் மிக்க காட்டுமிராண்டித் தர்ப்பாரைக் கடந்து அது வரவே அதிக காலங்கள் எடுக்கும்.

பொறுப்பு நிறைந்த யோக்கியமான அரசியல்தலைவர்களையே கொண்டிராத குறுகிய சுயநல கொள்ளையரே ஆட்சி செய்கின்றார்கள். அடித்த வரை இலாபம் என்பதைத் தவிர ஸ்திரமான கொள்கைகளே அவர்களுக்குக் கிடையாது. இதற்கு நல்ல உதாரணம் மிகப்பெரிய அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவிடம் பறி கொடுக்கும் நிலையிலும் சின்னஞ் சிறிய இலங்கையில் கொள்ளை அடிக்கத் திட்டம் தீட்டுகின்றார்கள்.

பலம் பொருந்திய சீனாவுடன் மோதி (நேரு விட்ட தவறு போல பெரும் நிலப்பரப்பை இழந்து) மக்களிடம் உள்ள செல்வாக்கை இழந்து ஆட்சியைத் துறக்க மனமில்லாது மெளனம் காக்கின்றார்கள். அண்மையில் லடாக் பகுதியில் போடப்பட்ட வீதி விஸ்தரிக்கும் வேலையை சீன இராணுவம் அதிரடியாக தலையிட்டு நிறுத்தியபோதும் இந்த சண்டப்பிரசண்டர்கள் வாயே திறக்காது மெளனம் காக்கின்றார்கள்.

ஆனால் ஈழத் தமிழனைப் பற்றிக் கருத்துச் சொல்ல நான் நீயென்று வெறிநாய்கள் போல முண்டியடிக்கின்றார்கள். அநியாய அழிப்பு யுத்தத்தில் இழந்த மக்களுக்கான இரங்கல் போஸ்டர்களை காட்டுமிராண்டிகள் போல கிழித்து எறிகின்றார்கள். இறந்த பின் கொடுக்கும் இறுதி மரியாதையைக் கூட கொடுக்க மறுதலிக்கின்றார்கள்.

இந்தியாவினது தந்திரப்படி இலங்கையின் வாக்குச் சேகரிப்பிற்காக ஈழ அகதிகள் அனைவரையும் இலங்கைக்கு அழைத்துச் செல்ல முண்டியடிக்கின்றார்கள். மக்கள் என்பது வெறும் வாக்குப் போடும் இயந்திரங்களாகவும் கழிவை உண்டு உழைப்பைக் கக்கும் உணர்ச்சியற்ற ஜடங்களாகவும் நினைத்துக் கொண்டிருக்கும் தேசத்தின் செயல்களும் நினைப்புகளும் இவ்வாறாகத் தான் இருக்கும்.

இப்போது அனுப்பப் படப்போகும் இந்த உறவுகளுடன் இந்தியாவிற்கும் ஈழத்தமிழருக்கும் இருந்திருக்கக் கூடிய பல நூற்றாண்டு உறவின் கடைசி சாட்சியமும் மறைந்து போகின்றது. இதை என்றும் நினைவில் வைத்துச் செயற்படுவதே ஈழத்தமிழினம் உய்த்துயர வழியாகும்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil