ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, December 21, 2009


பொருளாதாரப் போரில் தமிழர்கள் சிறிலங்காவை வீழ்த்தலாம் - மருத்துவர் எலின் ஷான்டர்


உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் எல்லோரும் முழுமனதோடும் பெருமிதத்தோடும் பொருளாதரப் போர் செய்தால் - சிறிலங்கா அரசாங்கத்தையே அடிபணிய வைக்கலாம் என அமெரிக்க மருத்துவர் எலின் சாண்டர் [ Ellyn Shander ] தெரிவித்துள்ளார்

கடந்த டிசெம்பா 6 ஆம் திகதி அமெரிக்க நியூஜேர்சி மாநிலத்தில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது உரையின் விபரம்:

வணக்கம்

துன்பகரமான ஒரு நாளில் நாமெல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம்.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.

அவர்கள் ஒவ்வொருவரும் எமது அன்புக்குரியவர்கள். அந்த ஒவ்வொரு சாவும் எங்கள் இதயங்களை நொருக்கியது; அந்த வேதனையை இங்குள்ள ஒவ்வொருவரும் அனுபவித்துள்ளோம்.

எனக்கு ஞாபகம் இருக்கிறது, செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட – தமது வாழ்க்கையைத் தொடங்கும் அரும்புப் பருவத்தில் இருந்த – சிறுமிகள் ஒவ்வொருவரது முகங்களையும் பார்த்த போது நான் கதறி அழுதேன்.

தமிழ் மக்களின் கிரீடத்தில் இருந்து 61 மாணிக்கங்கள் அப்போது திருடப்பட்டன என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆழிப் பேரலைப் பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்த போது என்னுடன் பணியாற்றிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் எனக்கு மிக நெருக்கமான நண்பரானார்; நாங்கள் இருவரும் தமிழ் நோயாளிகள் மூலமாகப் பிணைக்கப்பட்டிருந்தோம்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்று அறிந்த போது, அந்தப் பெண் மருத்துவரும் அனேகமாக உயிரிழந்து விட்டிருக்கலாம் என எனது மனம் நினைத்தது.

2009 மே மாதம் நிகழ்ந்த இறுதிப் படுகொலைக்கு முன்னதாக - அந்த கடற்கரை ஓரத்தில் அடைக்கலம் புகுந்திருந்த மக்களை சிறிலங்காப் படைகள் கொன்று குவித்துவிடும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் - அதே சமயம் - , “இல்லை, இல்லை, அப்படி எதுவும் நடந்து விடாது” எனவும் நம்பினேன்.

ஆனால் - நான் முன்னர் நினைத்திருந்ததைப் போலவே - அவர்கள் அந்த மக்களைப் படுகொலை செய்துவிட்டார்கள்.

25,000-ற்கும் மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்றார்கள்; ஆனால், இந்த அனைத்துலக சமூகம் வாய் மூடி இப்போதும் மெளனமாக இருக்கின்றது.

அது சொல்லும் பாடம் என்னவென்றால் - எங்களுக்கு சீன போன்ற அதிகாரம் மிக்க பெரிய நண்பர்கள் இருந்தார்களானால், இத்தகைய குற்றச்சாட்டுக்களில் இருந்து நாங்களும் தப்பிவிட முடியும்.

ஆனால், இறந்து போன ஒவ்வொருவரையும் எமது மனங்களில் வைத்து நினைவுகூருவது, தமிழர்களாகிய எமது கடமை; அத்துடன் இந்த உலகம் அவர்களை மறக்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

பிசாசுகளின் இந்தச் செயல் குறித்து உலக நாடுகளிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பாகத் திரைப்படங்களை எடுக்க வேண்டும்.

தமிழர் படுகொலை தொடர்பான ஒளிப்படங்களையும் கதைகளையும் அருங்காட்சியகங்களில் வெளியிட வேண்டும்.

உலக நாடுகளின் அரச அதிகாரிகளுக்கு மேலும் மேலும் கடிதங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இப்போது தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களையும், அங்கிருந்து வெளியேறி வாழ்வுக்காய் போராடும் மக்களையும் ஊடகங்கள் தடையின்றிச் சந்திப்பதற்குக் குரல் கொடுக்க வேண்டும்.

எந்தவித உதவிகளும் இன்றி முகாம்களில் இருந்து நடு வீதிக்குத் தூக்கி வீசப்பட்டு – அர்த்தமே இல்லாத வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ள - தமிழ் மக்களுக்கு உணவும் ஆதரவும் வழங்குமாறு வலியுறுத்த வேண்டும்.

தமிழர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளார்கள்; தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறார்கள்.

தடுப்பு முகாம்கள் இப்போது திறந்து விடப்பட்டுள்ளதால் - தமிழர் விடயத்தை உலக நாடுகள் மறந்துவிடப் போகின்றன.

'போர் முடிந்து விட்டது; இனி எல்லாம் சரியாகிவிடும்' என இந்த உலகம் எண்ணத் தலைப்படுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

இந்தப் பூமியில் - எங்கெல்லாம், நிறத்தின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ, இனத்தின் அடிப்படையிலோ வேறுபாடு காட்டப்பட்டுத் துன்புறுத்தப்படும் மக்கள் இருக்கின்றார்களோ - அங்கெல்லாம் தமிழர்களுக்கு அண்ணன்களும் தங்கைகளும் இருக்கின்றார்கள்.

அவர்களுடைய நட்பை நாம் பெற வேண்டும்.

இரண்டாம் உலகப் போரின் போது நாசிக்களால் (ஹிட்டலர் படை) பல லட்சக்கணக்கான யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டதன் பின்னர் இந்த உலகத்தில் எழுந்த "இனி எப்போதும் இல்லை" [ "Never Again" ] என்ற குரலை இந்த உலகத்திற்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டும்.

"இனி எப்போதும் இல்லை" என்பதன் பொருள் நீதியற்ற தன்மையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பது.

"இனி எப்போதும் இல்லை" என்பதன் பொருள் இன அழிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பது.

"இனி எப்போதும் இல்லை" என்பதன் பொருள் இனப் படுகொலைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பது.

"இனி எப்போதும் இல்லை" என்பதன் பொருள் இனக் கொலைகளுக்கு எதிராகப் போராடுவோம் என்பது.

ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில் "இனி எப்போதும் இல்லை" என்பது இதுவரை வெற்றுச் சொற்றொடர் தான் என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்.

போர்க் கைதிகளை அடைத்து வைப்பது போன்ற தடுப்பு முகாம்களில் தற்போது 120,000 தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்; அங்கிருந்து வெளியேறுவதற்கு அவர்களுக்கு அனுமதி கிடையாது.

முகாம்களை விட்டு வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் வீதிகளில் கொண்டு சென்று கொட்டப்பட்டுள்ளார்கள்; அல்லது, இராணுவக் கிராமங்களை ஒத்த பின்தங்கிய கிராமங்களில் வருமானத்திற்கான வளங்கள் ஏதுமில்லாத நிலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்; சிலர் வேறு முகாம்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை.

வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய அபிவிருத்தி வேலை என்றால், அது கிளிநொச்சியிலும் வேறு இரு நகரங்களிலும் பாரிய சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டிருப்பது தான்.

இவற்றிற்குள் - விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் சிறுவர்கள் கூடத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஒருபோதும் அமைதியாக, சத்தமின்றி இருந்துவிடக் கூடாது; நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், மறைந்து போய்விடாதீர்கள்.

அனைத்துலக ஊடகங்களுக்கள் தங்கு தடையின்றி சிறிலங்கா சென்று வருவதற்கு அனுமதிக்குமாறு அந்த நாட்டை நிர்ப்பந்திக்கும்படி அனைத்துலக நாடுகளுக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அத்துடன், தமிழ் மக்களின் மீள்குடியமர்வுப் பணிகளை ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வை செய்ய வேண்டும் என்பது குறித்தும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

எனவே, இந்த வேளையில், உலகத் தமிழர்கள் மறைந்துவிடக் கூடாது; பிரிந்து நிற்கக்கூடாது.

மோசமான பகுதிகளில் குடியமர்த்தப்படுவதற்குப் பதிலாக தமிழர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என நாம் வலியுறுத்த வேண்டும்.

தமிழர்களைச் சிறிலங்கா அரசு தோற்கடிக்கலாம், தமிழ்ச் சிறுவர்களைக் கொல்லலாம், தமிழ் இளைஞர்களைக் காணாமல்போகச் செய்யலாம்; ஆனால், அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளத் தவறி விட்டார்கள் - ஒருபோதும் அவர்களால் தமிழர்களின் அரசியல் தாகத்தை அழித்துவிட முடியாது என்பது தான் அது.

எமக்கு சுதந்திரமான தேர்தல்கள் வேண்டும்; தமிழ் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும்; தமிழ் மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வையும் படையினர் கண்காணிக்கும் நிலைமை இருக்கக் கூடாது.

இன்றைய மிக முக்கியமான தருணம் - மிகத் திறமைசாலிகளான, நேர்மையான, உண்மையான மக்களிடம் வரலாற்றுப் பணியை ஒப்படைத்து நிற்கின்றது.

தமிழர்களைப் பாதுகாக்கவும் தமிழீழத்தை உருவாக்கவும் கூடிய சக்தி வாய்ந்த அந்தப் பெருமை மிகு மக்கள் நீங்கள் தான்.

எடுத்துக் காட்டாக - பொருளாதாரப் புறக்கணிப்பு மூலமாக சிறிலங்கா அரசை முழங்கால் இட்டு மண்டியிட வைக்க எங்களால் முடியும்.

அந்த நடவடிக்கையை இன்றே தொடங்குவோம்.

பெருமை மிக்க மக்களாகிய நாங்கள் - சிறிலங்காவில் இருந்து வரும் அனைத்துப் பொருட்களையும் குறிப்பாக ஆயத்த ஆடைகளைப் புறக்கணிப்போம்.

எங்கள் இலக்கு இலகுவானது: உலக மக்களின் பொருள் வாங்கும் பழக்கத்தையும், அது பற்றிய சிந்தனையையும் மாற்ற வேண்டும்.

எங்கள் செய்தி: "சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆடையாக இருந்தால் கீழே வைத்து விடுங்கள்”. அவ்வளவு தான்.

இரத்தக் கறை படிந்த அந்த நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொளும் நிறுவனங்களின் செயல் வெட்கக் கேடானது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

மகாத்மா காந்தி பிரித்தானியத் துணிகளைப் புறக்கணித்தது போன்று, நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்குக் காரணமாக, தென்னாபிரிக்காவை பொருளாதார ரீதியாக இந்த உலகு ஒதுக்கியதைப் போன்று – நாமும் சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும்.

அவ்வாறு பொருளாதார ரீதியாகப் புறக்கணிப்பதன் மூலம் நாசிகளை ஒத்த இந்த சிறிலங்கா அரசை நிலத்தில் மண்டியிடச் செய்ய முடியும்.

உலகம் முழுவதும் இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.

Victoria's Secrete, Marks & Spencer மற்றும் GAP போன்ற நிறுவனங்களின் சுற்றுப் பகுதியில் இது தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதுடன் சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டாம் என வாடிக்கையாளர்களையும் கோர வேண்டும்.

ஏற்கனவே அந்த நிறுவனங்கள் பதற்றத்திற்குள்ளாகி உள்ளமையை நாம் அவதானிக்கின்றோம்.

இதே ரீதியில் - “சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்” அனைத்தையும் புறக்கணிக்கும் பொருளாதாரச் சூழலை ஏற்படுத்த நாம் தொடர்ந்து செயற்பட வேண்டும்.

மக்களின் அழுத்தங்கள் காரணமாக ஒரு நிறுவனமாவது சிறிலங்காவில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் எமது தேவை; அதன் பின்னால், ஏனையவை எல்லாம் தொடர்ந்து வெளியேறி ஓடிவிடும்.

இந்தக் கடைகளில் இருந்து "Made in Sri Lanka" என்ற பட்டி உடைய ஆடைகளை நாம் முதலில் கொள்முதல் செய்ய வேண்டும்; பின்னர், அவற்றை அதே கடைகளில் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.

அப்போது - "சிறிலங்காவில் தமிழர்களின் அழிவுக்கு நாம் உடந்தையாக இருக்க விரும்பவில்லை" என்று அவர்களிடம் விளக்க வேண்டும்.

இந்தப் புறக்கணிப்பில் நாம் எல்லோரும் இணைந்து கொள்ள வேண்டும்; “சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட” பொருட்களை வாங்குவதில் உள்ள ஆபத்தை ஒவ்வொருவரிடமும் எடுத்து விளக்க வேண்டும்.

இது தான் தமிழீழத்திற்கான வழி; எங்கள் தேவைகளுக்காக நாம் இந்தப் புறக்கணிப்பை மேற்கொண்டோமானால் எங்களால் சிறிலங்காவின் அரசையே தூக்கி எறிய முடியும்.

எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி இறந்துபோன தமிழ் மக்கள் அனைவரினதும் சாவுகள் அர்த்தமற்றவையாகப் போய்விடுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

அடக்கு முறைகளில் இருந்து எங்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்காகவே விடுதலைப் புலிகள் போராடினார்கள்.

அந்தச் சுதந்திர நெருப்பு அணைந்து விடாமல் நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.

இறந்து போனவர்களால் இனி நீதியை நிலைநாட்ட முடியாது; பதிலாக, உயிருடன் இருக்கும் நாம் தான் இறந்து போனவர்களுக்காக அதனை நிலைநாட்ட வேண்டும்.

எனவே பொருளாதாரப் புறக்கணிப்பு என்ற இந்த அழைப்புக்கு நாம் ஒவ்வொருவரும் செவி சாய்த்து சிறிலங்கா அரசை முழங்காலி்ல் மண்டியிட வைக்க வேண்டும்.

தமிழ் மக்களின் சுதந்திர தாகத்தைத் தொடர்ந்து பேணுவதாக எமது முயற்சிகள் அமைய வேண்டும்.

அதே சமயத்தில் - உயிரிழந்து போன அனைவருக்காகவும் எனது பிரார்த்தனைகளையும் இங்கு செலுத்த விரும்புகிறேன்.

இந்தக் கொடூரமான வன்முறைகளில் பலியாகிப் போன தமிழர்களே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

ஒவ்வொரு காலையிலும் தங்கள் குழந்தைகளை நித்திரையில் இருந்து எழுப்பி, அவர்களுக்கு உணவளித்து, பாடசாலைக்கு மதிப்புடன் கூட்டிச் சென்ற தாய்மார்களே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

கடலுக்குச் சென்று பிடித்த மீன்களுடன் கரை திரும்பிய மீனவர்களே, அவர்களது வருகைக்காகக் காத்திருந்த அவர்களது மனைவியர்களே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

மருத்துவமனை மீதான தாக்குதலின் போது உயிரிழந்த மருத்துவர்களே, தாதியர்களே, பணியாளர்களே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

திருமணம், பிறந்த நாள், கொண்டாட்டங்கள் எதனையும் ஒருபோதும் கொண்டாடாத தமிழ் மக்களே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

தங்கள் பாடசாலைகளுக்குப் பிஞ்சுக் கால்களால் ஓடிச் சென்ற போது கொல்லப்பட்ட, கால்களை இழந்த சிறுவர்களே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

நீண்ட காலமாகச் சிங்களத்தின் ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டிருந்த தமிழ் மூத்தோர்களே, கடைசிக் கொடூரங்களையும் துன்பங்களையும் பார்ப்பதற்கு நீங்கள் இல்லாமல் போனமை குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்; ஆனால், நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

பயம் இன்றி நடப்பதற்கோ, பேசுவதற்கோ வாழ்வதற்கோ ஒருபோதும் சந்தர்ப்பம் கிடைக்காத தமிழ்க் குழந்தைகளே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

தமிழ் மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியவர்களுக்கு எதிராகப் போர்க் களங்களில் தீரத்துடன் போராடி மடிந்த எமது புலி மாவீரர்களே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

உயிர் நீத்தவர்களே, தமிழீழத்தை விடுவிப்பதற்கான போராட்டத்தை உங்கள் பெருமையுடன் நாம் தொடர்வோம்.

இரண்டாம் உலகப் போரில் நாசிப் படைகளுக்கு எதிராகப் படை நடத்திய பிரெஞ்சுத் தளபதி சார்ளஸ் து கோல் [ Charles de Gaulle ] நாசிப் படைகள் வீழ்த்தப்பட்ட போது சொன்னார்:

“எண்ணற்ற மரணங்கள், அளவிடற்கரிய அர்ப்பணிப்புக்கள், கணக்கிட முடியா அழிவுகள், வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத சாகசங்கள் - இவை எல்லாவற்றிலிருந்தும் சிறப்பான - உயர்வான - மனிதத் தன்மை எழவே இல்லை என்றால் அது ஏற்றுக் கொள்ளப்படவே முடியாதது; தாங்கிக்கொள்ளவே முடியாதது." [ "It is not tolerable, it is not possible, that from so much death, so much sacrifice and ruin, so much heroism, a greater and better humanity shall not emerge.” ]

எண்ணற்ற தமிழர்களின் சாவிலிருந்தும் அளவிடற்கரிய அர்ப்பணிப்புக்கள் மற்றும் சாகசங்களிலில் இருந்தும், என்ன எழப் போகிறது...? 'தமிழீழம்' என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த மனிதத் தன்மை எழவேண்டுமா இல்லையா?

என்று தனது உரையை முடித்தார் அமெரிக்க மருத்துவர் எலின் ஷான்டர்

1 comment:

Anonymous said...

ஒரு அமெரிக்கப் பெண்மணிக்கு இருக்கும் மன வருத்தமும்,துணிவும் தாய்த்தமிழ் நாட்டின் உடன் பிறப்புகளுக்கு இருந்தால் தமிழர் விடுதலை நிச்சயம்.
இதைப் பரப்புங்கள்.
பதிவெடுத்து அனுப்புங்கள்.
இலங்கையை, இலங்கைப் பொருட்களை ஒதுக்குங்கள்,பொருளாதாரத்திலே.
இந்திய அரசை வாட்டி வதக்குங்கள்.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil