ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, December 22, 2009


விஜய் நம்பியாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை - இன்னர் சிற்றி பிரஸ்


புலிகளின் தலைவர்கள் சிலர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயன்ற போது சிறிலங்காப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக அந்தச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை உயர் அதிகாரி விஜய் நம்பியாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்று ‘இன்னர் சிற்றி பிரஸ்’ கேள்வி எழுப்பி உள்ளது.

புலிகளின் தலைவர்கள் சரணடைய முயன்றால் அவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு சிறிலங்கா அரச தலைவரின் தலைவரது தம்பியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச களத்தில் இருந்த படையின் கட்டளை அதிகாரிக்கு நேரடியாக உத்தரவிட்டிருந்தார் என்று முன்னாள் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் தான் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்று கூறி மறுத்திருந்தார்.

எனினும், அவரது குற்றச்சாட்டை அடுத்து குறிப்பிட்ட சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு – சட்டத்திற்குப் புறம்பான, எழுந்தமானமான படுகொலைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு விசாரணையாளர் பிலிப்ஸ் அலிஸ்ட்டன் சிறிலங்கா அரசிடம் கேட்டிருக்கிறார்.

ஐ.நா. தம்மிடம் விளக்கம் கேட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ள சிறிலங்கா அரசு அது குறித்து நிதானமாகத்தான் பதிலளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, புலிகளின் தலைவர்களை வெள்ளைக் கொடியுடன் சென்று சிறிலங்காப் படையினரிடம் சரணடையுமாறு சொன்ன சம்பவத்தில் ஐ.நா.வின் தலைமை அதிகாரி விஜய் நம்பியாருக்கும் தொடர்புகள் இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

புலிகளின் தலைவர்கள் சரணடையும் போது ஐ.நா.வின் உறுதிமொழியை வேண்டி நின்றார்கள் என்பதை அதன் பேச்சாளரும் உறுதிப்படுத்தி இருந்தார்.

அத்தகைய நிலையில், சம்பவம் குறித்து சிறிலங்கா அரசிடம் விளக்கம் கேட்டுள்ள ஐ.நா. விசாரணையாளர் ஏன் அது தொடர்பில் விஜய் நம்பியாரிடம் விளக்கம் கேட்கவோ விசாரணை நடத்தவோ இல்லை என்று கேள்வி எழுப்பி உள்ளது ‘இன்னர் சிற்றி பிரஸ்’ செய்தி நிறுவனம்.

தொடர்புபட்ட முன்னைய செய்தி:

விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் அவர்களுடைய குடும்பத்தினரும் எவ்வாறான சூழ்நிலையில் கொல்லப்பட்டனர் என்பதையிட்டு விளக்கமளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை ஐ.நா. கேட்டுக்கொண்டிருக்கின்றது.

சட்டத்துக்குப் புறம்பான எழுந்தமான படுகொலைகள் தொடர்பான ஐ.நா. வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப்ஸ் அலிஸ்ட்டன் சிறிலங்கா அரசாங்கத்திடம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

கடந்த வாரம் வெளியான சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, பாதுகாப்பு செயலாளர் கோதாபய மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே வெள்ளைக்கொடிகளுடன் படையினரிடம் சரணடைவ வந்தபோது விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறியிருந்தார்.

இது தொடர்பான செய்திகளை அரசாங்கம் மறுத்திருந்த போதிலும், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஐ.நா. தற்போது கோரிக்கை விடுத்திருப்பது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவிலுள்ள சிறிலங்காவின் நிரந்திரப் பிரதிநிதி செனிவிரட்ணவுக்கு இது தொடர்பான கடிதம் ஒன்றை ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப்ஸ் அலிஸ்ட்டன் அனுப்பிவைத்திருக்கின்றார்.

"சம்பவம் இடம்பெற்ற போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கொல்லப்பட்ட சூழ்நிலைகளை 58 வது படையணியுடன் இருந்த ஊடகவியலாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்" என இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனால் இந்தப் படுகொலைகள் இடம்பெற்ற சூழ்நிலை தொடர்பாக சிறிலங்கா அரசு விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil