ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, November 30, 2009


எதிரியை அழிப்பதென்பது வெறுக்கக் கற்றுக்கொள்ளல்


எதிரிகளில்லாத மனித வாழ்க்கை என்பது எப்போதுமே சாத்தியமானதல்ல. எதிரியாதல் என்பதற்கு தன் வசதிகளை மேம்படுத்தல் என்ற சுய இச்சை வழிகோலுகின்றது. பார்ப்பனம் என்பது மேலாதிக்கம் என்பதையும் விட புத்தியினால் சுகித்திருப்பது என்பதன் மாற்று வடிவமே. சமுதாயத்தின் முழுப்பாரங்களையும் சுமப்பதில் இருந்து தப்பித்துக் கொள்வது என்ற வகையில் இதனை ஓரளவு அடையாளங்கண்டு கொள்ளலாம்.

முதலாளித்துவம் எப்போதும் வெற்றியின் பக்கத்தில் இருப்பது இத்தகைய எல்லா மனிதருக்கும் இருக்கக்கூடிய மேலாதிக்கம் அல்லது மேல் நிலை என்ற ஒரு ஆழ்மன இச்சையினாலேயே. இந்த இச்சை சார்ந்தே உலகின் எல்லாவகை செயற்பாடுகளும் நடைமுறைகளும் இருக்கின்றன. இத்தகைய ஆழ்மனத்தின் இச்சையினால் உருவாவதே மேலாண்மை. அதை இந்திய சாதியக் கூறுகள் தொடக்கம் சோவியத்தின் சமத்துவக் கோட்பாடுகள் வரை வகை பிரித்து விவரிக்கலாம்.

ஆகக்குறைந்த தொடக்கப் புள்ளியாக குடும்பம் என்ற இரு மனிதப்பிறவிகளுக்கான ஒப்பந்தத்தில் இருந்தே இதனை ஆரம்பிக்கலாம். ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே குடும்பத்தலைவன் உழைப்பது என்பதும் குடும்பத்தலைவி வீட்டைப்பார்ப்பது என்பதுவும் உருவானதும். துயரம் நிறைந்த சுமையாகிலும் ஆண்களால் அது விரும்பி ஏற்கப்பட்டிருப்பதன் காரணம் அக்குடும்பம் மீதான ஆதிக்கம் தரும் சுகமே. மனைவி மீதும் பிள்ளைகள் மீதும் வரக் கூடிய நிபந்தனையற்ற ஆளுமையே அந்தச் சுகம்.

கீழை நாடுகளில் இவ்வகையான ஆணாதிக்கம் கட்டுக்குலையாது போற்றப்படும் நிலையில் மேற்கு நாடுகளின் அதீத நுகர்ச்சிப்பண்புகளால் வேண்டியிருந்த அதிக உழைப்பு ,வருமானம் போன்ற விடயங்களால் பெண்களையும் ஈடுபடுத்த வேண்டிய இக்கட்டிற்கு மேலைத் தேய ஆண்களை உந்தித் தள்ளிவிட்டிருந்தது.

பொறுளாதாரரீதியாக உருவான இச்சுதந்திரம் கொடுத்த சிந்தனையின் விளைவாக உருவான அடங்கிப்போதலை மறுதலிக்கும் பண்பு மேற்கத்தைய நாடுகளில் உருவாக்கிய விடயம் தான் அனைத்து பவித்திர மாயைகளையும் உடைத்தெறிந்த "அக்கிரிமெண்ட்" குடும்பங்கள். கிழக்கில் இருந்து மேற்கிற்கு இடம் பெயர்ந்த நம்மவர்களும் அத்தாக்கத்தில் இருந்து தப்பவில்லையென்பதும் வாராது வந்த திடீர் சுதந்திரத்தில் அடிபட்டு தொலைந்து போன குடும்பங்களும் அதிகம் என்பதும் புறம்பான சரித்திரம்.

இத்தகைய மேலாதிக்கம் சார்ந்ததாகவே உலகின் அத்தனை கிரியைகளும் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மேலாண்மையின் சான்றாகவே மனித வாழ்க்கையின் தொடக்கப்புள்ளிகளாக இனக் குழுமங்களின் தலைவன் அதனிலும் மேலான மன்னன் போன்ற கட்டமைப்புகள் உலகில் தோன்றின. ஆதி மனிதனின் ஆளுமை என்பது தனி மனிதரின் வீரதீரப் பராக்கிரமத்தாலேயே தீர்மானிக்கப்பட்டன.

காலப்போக்கில் மனித மனங்களில் ஏற்பட்ட மறுமலர்ச்சி புதிது புதிதான உத்திகளுக்கூடாக மேலாண்மையைக் கட்டவிழ்ப்பது தொடர்பாக சுயபரிசோதனையை மேற்கொண்டது. அதன் விளைவாகவே தனிமனித பராக்கிரமங்களை ஒதுக்கித் தள்ளி இனங்களின் அல்லது நாடுகளின் அல்லது நாடுகளின் கூட்டுகளின் என்று மேலாதிக்கம் வரையறுக்கப்பட்டது. அதனை நிலைநாட்ட பல சங்கங்கள் , நாடுகளின் சபைகள்,கூட்டணிகள் என்று பல வார்த்தைப் பிரயோகங்களுடன் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.

அதாவது மனித மனத்தின் தீவிர சிந்தனைப் போக்கில் மேலாதிக்கம் கொள்ளுவதற்கான கட்டமைப்புகளைப் போலவே மேலாதிக்கத்தை எதிர்க்கும் சிந்தனைகளும் உருவாகின. அதாவது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த, விரும்பாத தனி மனிதர்கள் கூட்டாக அல்லது சித்தாந்த வாரியாக ஒன்று திரண்டு மேலாதிக்கத்தை எதிர்த்தனர். அதனாலேயே மேலாதிக்கத்தை தம் கரங்களில் எடுத்துக் கொண்டனர்.

இதனை முதலாளித்துவம் அல்லது தனி மனித அதிகாரமான மன்னர் ஆட்சிக்கு எதிரான சோசலிச மார்க்ஸிய மாற்று அதிகாரமாக விளங்கிக் கோள்ளலாம். எவ்வகையான மாற்றமாக இருந்தாலும் மேலாண்மை என்பது ஒரே விதமான குணாதிசயத்தைக் கொண்டிருத்தலாலேயே உலக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்று வரை தீர்ந்து போகாது வீரியத்துடன் இருக்கின்றன.

மேலாதிக்கம் பற்றிய இச்சிறுவிளக்கம் நமக்குக் கற்றுக் கொடுப்பது யாதெனில் மேலாதிக்கம் கொள்ள விழையும் யாவரும் எதிரிகளைக் கொண்டிருப்பார்கள் என்பதுவும் அவர்களை வெறுக்கவும் அறிந்திருக்கின்றார்கள் என்பதையுமே.

இனி தமிழ் ஈழப் போராட்டத்தில் சிங்கள பேரினவாதம் முதல் இந்தியத் தலையீடு அமெரிக்க அதிகார விளையாட்டு என பல கூறுகளை நாம் விளங்கிக் கொள்ளலாம். இது வரை செத்தொழிந்த கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நம் இன்னுயிர்களைப் பற்றிய ஆதங்கத்தில் எழுந்த ஏன்? ஏன்? என்ற விடை கிடைக்காத அனைத்துக் கேள்விகளுக்குமான விடை இங்கே பதுங்கியிருக்கின்றது.

இதை விளங்கிக் கொள்ள முற்பட்ட முதற்கணத்திலேயெ நாம் என்ன செய்ய வேண்டுமென்பதையும் தெரிந்து கொல்ளலாம். ஆம் வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். வெறுக்கக் கற்றுக் கொள்வதனாலேயே எதிரியை அழிக்க முடியும். வெறுக்கும் தேவை இல்லாதவிடத்து சிந்திப்பதற்கும் செயற்படுவதற்குமான அடிப்படையை நாம் இழந்து விடுகின்றோம்.

வசதியற்ற வாழ்வை நாம் வெறுக்கும் போது வசதியான வாழ்க்கையை அடைவதற்கான சிந்தனையையும் செயலையும் நாம் அடைக்கின்றோம். அதே போலவே சுதந்திரமற்ற வாழ்க்கைய நாம் வெறுக்கும் போது சுதந்திரத்திற்கான சிந்தனையையும் செயல் முறையையும் நாம் அடைகின்றோம். வெறும் எண்ணம் என்பது காற்றில் வாள் சுழற்றுவதைப் போல. அதையும் மீறி எம் சுதந்திரத்திற்கான எதிரிகளை அடையாளம் காணும் போது வாள் சுழற்றுவது இலகுவாகின்றது. தமிழீழ மக்களின் எதிரிகளாக இப்போது எம்முன்னால் நிற்பது பாசிசச் சிறீலங்காவும் பாடாவதி இந்தியாவுமே.

வாள் சுழற்றக் கற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே.

"Without something to hate, We should lose the very spring of thought and action"

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil