ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, November 16, 2009


இந்தியா - ஈழம் எதிர் முனைகளின் ஒவ்வாமை




இது காந்தத்தின் கவர்ச்சி அல்ல. காத்திரமான மக்களின் இருப்பு. பொருண்மிய அரசியல் இராணுவ மேலாண்மையை வலிந்து திணிக்க முயலும் இந்தியாவிற்கு எதிரான போராட்டம். இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தன் ஆதிக்கத்தை விரித்துக் கொள்ள முற்படும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம். இந்த அச்சு ஒன்றிலேயே ஈழம் இந்தியாவுடன் தொடர்பு படுகின்றது. அதாவது ஆக்கிரமிப்பாளர்களும் அதை எதிர்த்து நிற்கும் விடுதலையுணர்வாளர்களும். இது தான் யதார்த்தம்.

ஈழ மக்களின் போராட்டம் நாடு கடந்தது. இந்தியாவின் ஆசை அளவு கடந்தது. ஏற்றுக்கொள்ள முடியாதது. திறந்த பொருளாதாரத்தின் விசப்பல். நச்சு நிறைந்தது. இதற்கான போராட்டம் இன விடுதலையுடன் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர் போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டியது மிக அவசியமானது. மக்கள் சக்தியை அவர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமே ஒருங்கிணைக்க வேண்டும். இன்றைய ஈழத்தின் பின்னடைவிற்கு முக்கிய காரணம் மக்கள் சக்தியைப் போதிய அளவு ஒருங்கிணைக்கத் தவறியதே.எதிரியைப் பட்டவர்த்தனமாக அறிந்து கொள்ள வேண்டும்.இந்தியாவின் தயவை நம்பியிருத்தலையும் நாடுவதையும் அறவே துண்டிக்க வேண்டும்.

முதலாளித்துவ சமூக அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளால் அவ்வாறு நடந்து கொள்வதை நிறுத்த முடியாது.அவர்களை அலட்சியப்படுத்தி மக்களை முன்னிறுத்தி மக்கள் போராட்டமாக இதை முன்னெடுக்க வேண்டும். ஏழைத் தொழிலாள மக்களை முன்னிறுத்தி எடுக்கப்படும் போராட்டத்தின் மூலமே இந்தியாவின் இக்கபடத்தை உடைத்தெறிய முடியும்.

இந்தியாவின் விசப்பல் இன்று தமிழ் மக்களை மட்டுமல்லாது இலங்கையின் அனைத்து மக்களையும் கடித்துக் குதறிக்கொண்டிருக்கின்றது. அதை அறிந்தும் இந்திய அநாகரீகத்திற்கும் உறிஞ்சலுக்கும் சிங்கள அரசியல்வாதிகள் துணை போகின்றார்கள். அது அவர்களின் முதலாளித்துவ அடக்கு முறை மனப்பான்மையில் இருந்து வெளிப்படுகின்றது.

தொழிலாளர் கட்டமைப்பு பலமாக இல்லாத விவசாயத் தொழிலாளர்களையும் உதிரித்தரம் வாய்ந்த தொழிலாளர்களையும் புலம் பெயர்ந்த தமிழர்களையும் கொண்ட ஈழத் தமிழ் சமூகத்தால் இதை எவ்வாறு சாதிப்பது என்பது பற்றியே நாம் இப்போது சிந்திக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட சீனா,கியூபா போன்ற நாடுகளின் முன்னுதாரணங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். காலத்தின் மாற்றத்திற்கொப்ப நவீன உத்திகளையும் இணைந்த சக்திகளையும் சேர்த்துக்கொள்ளல் வேண்டும்.

புலம் பெயர்ந்த சமூகத்தால் உலகின் பல நாடுகளிலும் இருக்கக் கூடிய முற்போக்குச் சக்திகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள முயல்வது எங்கள் போராட்டத்திற்கு வலு சேர்க்கும். இந்திய இலங்கை அரசுகளின் செயற்பாடுகளை ஒடுக்கவும் தடுக்கவும் இவ்வாறு ஒருங்கு படுத்தும் அன்னிய முற்போக்குச் சக்திகளை நாம் பயன்படுத்த வேண்டும். ஈழத்தில் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய சுதந்திர வாழ்வுக்கான உரிமையை நாம் எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது.

தெற்கின் ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்து சிங்களப் பாசிச ஆட்சியின் அவலத்தை உலக நாடுகளின் முன்னால் வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பாசிச அரச முகமூடியைக் கிழித்தெறிந்து அம்பலமாக்குவதுடன் இந்தியா என்ற கட்டமைப்பில் மூச்சுத்திணறி விழிபிதுங்கும் இன, வர்க்கக் குழுமங்களின் விடுதலைக்கும் உந்துகோலாக இருக்க வேண்டும்.

இதை நினைவிற்கொண்டு செய்யப்படும் முயற்சிகளுக்கு எம்பூரண ஆதரவை நல்கவேண்டும். சுயநல அரசியலையும் ஒரு கட்சி இயக்கத்தையும் துடைத்தெறிய வேண்டும். முதிர்ச்சியற்ற இவ்வகையான நடவடிக்கைகளால் நாம் நிறையவே இழந்தாயிற்று.பாதிக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை வென்றெடுக்க நாம் அயராது போராட வேண்டும். சுதந்திரம் நமது பிறப்புரிமை. அதனை நாம் யாரிடமும் கெஞ்சிப்ப்பெறத் தேவையில்லை. அதைப் போராடியே பெறவேண்டும்.

அந்தப்போராட்டத்திற்கு நம்மை நாமே தாயார்ப்படுத்திக் கொள்ளலே இப்போதைய அவசியமாகின்றது.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil