ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, November 30, 2009


எதிர்ப்பது சிங்களச் சிறீலங்காவோ இந்தியாவோ அல்லது அமெரிக்காவாகவோ....


ஒரு மிகவும் அரிதான காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கின்றோம். பலவித ஜாலம் நிறைந்த நம்பிக்கைகளைக் காட்டிக்கொண்டிருந்த வர்ண பலூன் திடீரென்று உடைந்து போன சோகத்தை ஜீரணிக்க முடியாத வயிற்று வலியில் துவண்டு போயிருக்கின்றோம்.

வால்நட்சத்திரம் தோன்றி மூவேந்தர் தொடர பிறக்கப்போகும் நித்தியத்துவ தேவனை விட இருந்த தேவனே ஏதேனும் ஒரு பொழுதில் உதிக்கும் கணத்திற்காகக் காத்திருந்தோர் இங்கு அதிகம். மாவீரர் தினத்தில் மாலையின் கருக்கலைப் போலவே நம்பிக்கையைக் கருக்கலில் தொலைத்து அடங்கிப்போயிருக்கின்றனர் அவர்கள்.

அதையே போன்ற அல்லது அதையும் விடப் பெரிதான வர்ணங்கள் அடைத்த ஜாலங்கள் காட்டும் பலூனை எதிர்பார்த்திருந்தோரும் இங்கு அதிகம். நாடுகள் கடந்த அரசு என்ற ஆரவாரமும் கேபி என்ற புலியின் முகவர் கைதுடன் அடங்கிப் போனது. நோர்வே தேர்தல், தமிழ் மக்கள் அவை என்ற ஆரவாரங்கள் சில்லிட்டுப் போய் அடங்கியிருக்கின்றன. அடுத்து என்ன செய்வது? என்ற கேள்வியில் முடங்கிப் போய் விட்டன.

ஈழத்தில் தேங்கியிருந்த அரசியல் கட்சிகளோ எப்போதும் போல சிறு மீன் பிடிக்கும் பிரயத்தனத்துடன் கூட்டல் கழித்தல் கணக்குகளுடன் பாரம்பரிய அரசியல் வட்டத்துடன் ஒன்றிப்போக முண்டியடிக்கின்றன. இராணுவப் பேயெழுச்சிக்குப் பயந்து பரதேசங்களில் கரந்தொழித்த அத்தனை கட்சி அரசியல் முகவர்களும் மெல்ல மெல்ல நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றார்கள். நடக்கப்போகும் ஜனாதிபதித் தேர்தல் என்ற குடையின் நிழலில் போட்டியாளர்களுக்கு "வேண்டியிருக்கும் ஆதரவு " என்ற அவசர ஒக்சிசன் நிழலில் மூச்சு விடும் சலுகையினால் துணிந்து நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து வரக்கூடும் என எதிர்பார்க்கும் பாராளுமன்றத் தேர்தலில் மீன் கொத்தக் காத்திருக்கும் தேவையும் அவர்களுக்கு இருக்கின்றது.

இதுவரை ஒற்றைக்கம்பின் சுழற்சியில் வண்டிக்குதிரைகளை மிரள வைத்துக் கொண்டிருந்த தேவதேவனின் இழப்பினைத் தொடர்ந்து லாகானைக் கைப்பற்றும் முயற்சியில் உணர்வு பேதமின்றி அனைவரும் ஒரே பாதையில். முன்னாள் ஆதரவாளர்கள் இன்னாள் எதிர்ப்பாளர்கள் இன்னாள் ஆதரவாளர்கள் முன்னாள் எதிர்ப்பாளர்கள் என்று ஏகப்பிரதி நிதிகளாகும் ஒரே பார்வையோடு.

எது எப்படியிருந்தபோதும் கடைசி வரை போராடிய அல்லது அவதியின் நெருப்பில் எரிந்து துவண்டுபோன மக்களின் கதறல்களுக்கு காது கொடுக்க முடியாத, விருப்பமில்லாத அசட்டையுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள். களத்தின் தலைமை மாற்றத்தைத் தாங்களே வலிந்து சுமப்பதாகப் பாவனை செய்யும் புலம்பெயர் கூட்டத்தின் அலறலே பெரிதான கூச்சலாக வீரியம் கூட்டி நிற்கின்றது.

புலி ஆதரவு புலியெதிர்ப்பு என்ற இரண்டு கன்னைகளிலும் ஒருவரை ஒருவர் ஏறிமிதிப்பதுடன் பிரதிநிதித்துவச் சான்று பெறுவதற்கான முயற்சிகள் களைகட்டியிருக்கின்றன. புலியெதிர்பு என்பது அரசு ஆதரவு தான் என்று ஒற்றைச் சுழியத்தில் கிடந்து சுழன்றவர்கள் எவ்வாறு மக்களுக்குள் ஊடுருவுவது என்ற சிந்தனைகளில் சலுகைகள் என்ற எலும்புத் துண்டுகளை வீசியெறிகின்றார்கள். அவர்களையும் விட அரசியலில் மேலானவர்கள் என்று தங்களை வரித்துக்கொண்டவர்களோ மார்க்ஸையும் எங்கல்ஸையும் துணைக்கழைத்துக் கொண்டு துண்டுப்பிரசுரங்களுடன் வீதியில் இறங்கியிருக்கின்றார்கள்.

இவர்களைப் போலவே தலித்தியம், தேசியம் என்ற பதாதைகளுடன் பலரும் வீதியில் இறங்கியிருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் சிங்கள அரசின் அல்லது இந்திய அரசின் அல்லது அதையும் விடக் கூடுதலாக அமெரிக்க அரசதிகாரத்தின் துணையுடனேயே தங்கள் நியாதாதிக்கத்தை நிலை நிறுத்தத் துணிகின்றார்கள்.

இதில் மிகப்பெரும் சோகம் என்னவென்றால் ஈழத்தமிழினத்தின் சுதந்திரம் என்பதும் இறையாண்மை என்பதுவும் இவர்கள் சார்ந்திருக்கும் அல்லது நம்பிக்கை கொண்டிருக்கும் இவ்வெளி அரசுகளிற்கு எதிரானது என்பதையும் போராட்டம் இவர்களை எதிர்த்தே வெல்லப்பட வேண்டும் என்பதையும் மறந்து போனதும் தான்.

அவ்வாறான எழுச்சியும் வழிகாட்டலும் தோன்றும் வரை இவ்வகையான நீர்க்குமுழிகளின் எழுச்சியும் உடைதலும் தவிர்க்க முடியாதவையே. ஆனாலும் ஈழத்தமிழ் மக்களின் சுதந்திர வேட்கைக்கான மறுதலிப்பை அரசியல் அதிகாரங்கள் கொண்டிருக்கும் வரை போராட்டத்தை நிறுத்தி விட முடியாது. இப்பிராந்தியத்தில் ஈழத்தமிழ் மக்களின் இருப்பை அங்கீகரிக்காது ஒரு சமாதானம் எப்போதும் வந்து விடப்போவதில்லை. அதை எதிர்ப்பது சிங்களச் சிறீலங்காவோ இந்தியாவோ அல்லது அமெரிக்காவாகவோ இருந்தாலும் அது தான் நியதி.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil