ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, November 29, 2009


ஜனாதிபதி தேர்தலும் தமிழ் முட்டாள்களும்


இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களை வகை தொகையின்றி கொன்று போட்டு மண்மூடிக்குவித்து விட்ட மண்மேட்டில் நாட்டி விட்ட வெற்றிக்கொடியின் அறுவடைக்கு சிங்களப் பாசிசம் போட்டி போடும் நாள் தான் இந்த ஜனாதிபதி தேர்தல் நாளாக இருக்கின்றது.

சிங்களத்தை மீட்டெடுத்த துட்டகாமினிப்பட்டத்திற்கு ஏற்பட்டிருக்கும் அடிபிடியாக இது இன்று சிங்கள மக்களால் இனங்காணப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் உள்நாட்டுப்போரில் வடக்கிலிருந்து பிரிந்து போக எத்தனித்த தெற்கை எதிர்த்துப் போரிட்ட தளபதிக்கு வெற்றியின் அறுவடை சொந்தமா ? அல்லது அந்த படை நடவடிக்கையை நெறிப்படுத்திய ஆபிரகாம் லிங்கனுக்கு அறுவடை சொந்தமா ? என்பது போன்ற மில்லியன் டாலர் கேள்வி இது.

அமெரிக்காவில் அறுவடையை அள்ளிக்கொண்டதென்னவோ ஆபிரகாம் லிங்கன் தான். அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே அதி சிறந்த இடத்தை ஆபிரகாம் லிங்கனுக்கே கொடுத்துப் போற்றுகின்றார்கள் அமெரிக்க மக்கள் இன்றுவரை.

ஆனால் இலங்கையில் சிங்களவர்களால் கொண்டாடப்படும் துட்ட கைமுனு ஒரு படைத்தளபதி + மன்னன். இந்த இடத்தில் தான் இந்த முரண்பாடு தீவிரம் அடைவதுடன் சரத் பொன்சேகா வகையறாக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்ததும் அதுவே. புலிகளுடனான வெற்றி எதிரிகளான தமிழர்களை வெற்றி கொண்ட பெரு விழாவாக சிங்களப் பாமரர்களால் வெடி கொழுத்திக் கொண்டாடப் பட சரத் பொன்சேகாவின் புகழின் வெளிச்சம் பேதுருதாலகால மலையையும் தாண்டி வளர்ந்து கொண்டே செல்கின்றது.

பலமுறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோற்றுப் போன கையாலாகாத எதிர்க்கட்சித் தலைவனாக ரணில் விக்கிரமசிங்க இன்னும் யூ.என்.பி தலைவராக தொங்கிக்கொண்டிருக்க அதிர்ஷ்டக் காற்று சரத் பொன்சேகாவை தள்ளிக்கொண்டு உச்சத்திற்கு போய்க்கொண்டிருக்கின்றது. சிங்கள இனவாதக்கட்சியான மற்றொரு எதிர்க்கட்சி ஜே.வி.பி சரத் பொன்சேகாவின் பெயரை மந்திர உச்சாடனம் செய்ய சரத் பொன்சேகாவின் பெயர் பாமர ஜனங்களின் வாக்கு வங்கிகளைக் குறிவைக்கும் பூமராங் ஆக மாறிப்போய் விட்டது.

கைக்கெட்டியது வாய்க்கெட்டாத தவிப்பில் மகிந்த கூட்டணி முழங்கால் வரை தேய்ந்து கூனிக்குறுகி நிற்கின்றது.

"மருங்கடவெல யக்கடயா" போன்ற கெளபாய் படங்களைப் பார்த்து வீரம் பற்றி அறிந்து கொண்ட சிங்கம் பெற்ற வீரப்புத்திரர்களின் சிலுப்பிக்கொண்டிருக்கும் மனங்களைப் படிய வைத்து வாக்குப் பெறுவதிலுள்ள சிக்கல்களை அறிந்து கொண்ட மகிந்த கூட்டணி சிராய்ப்புக் காயங்களுடன் (பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் தோல்வி, சீனாவின் அருணாச்சலப் பிரதேசம் பற்றிய சினப்புகளில் ஏற்பட்ட பாதிப்பு, பங்களாதேஸின் எல்லைச் சண்டை) வல்லரசுக் கனவுடன் நொண்டிக்கொண்டிருக்கும் இந்தியாவின் துணையை நம்பி ஒருபக்கமும், இலட்சியத்திற்காக மட்டுமே போராடி இறந்த (தலைமை தப்புக்கள் செய்திருந்தாலும்) மாவீரர்களை கொலையாளிகள் என்று வர்ணித்த எலும்புத் துண்டுகளை நக்கிச் சுவைப்பதே இலட்சியமாகக் கொண்டியங்கும் டக்ளஸ், ஆனந்த சங்கரி, பாதிப்புலி பாதிப்பூனையாகிப் பதுங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையான், கருணா போன்ற அரைவேக்காடுகளையும் இணைத்துக் கொண்டு தமிழ் மக்களின் வாக்கு வங்கியைக் குறி பார்த்து அடிக்கத் துணிந்திருக்கின்றது.

இதனிடையில் தமிழ்த் தேசிய முன்னணி, உதிரிகளான மனோ கணேசன் போன்றவர்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்று முடிவுகள் செய்யப்படவில்லை, தமிழர்களுக்காக அவர்கள் கொண்டிருக்கும் கொள்கைகளைப் பார்த்து முடிவு செய்வோம் ..என்பது போன்ற வார்த்தை விளையாட்டுகளை விட்டுக்கொண்டிருப்பது இவர்களின் அரசியலை நன்கு அறிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களால் விளங்கிக் கொள்ள முடியாததல்ல.

இது ஒரு வகை கேடு கெட்ட அரசியல் பேரம். 30 ஆயிரத்திற்குமதிகமான மக்களைத் துடி துடிக்கக் கொன்று போட்டவர்களிடம் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை முட்கம்பி வேலிக்குள் அவர்களின் அடிப்படை உரிமையையும் மீறி அடைத்து வைத்திருக்கும் அராஜக வாதிகளிடம் எந்த வகையில் தமிழ் மக்களுக்கு நன்மை விளைவிக்கும் கொள்கைகளை எதிர்பார்க்க முடியும்.

இந்த நிலையில் சிங்களப் பாசிசத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தோலுரித்து விமர்சனம் செய்யவேண்டிய பொறுப்புள்ளவர்கள் சலுகைகளுக்காகச் சதிராட்டம் போடும் அவலம் இது. தமிழ் மக்கள் சிந்திய குருதி அனைத்தும் சிங்கள்ம் வீசும் சிலபல எலும்புத் துண்டுகளைச் சுவைக்கவே என்ற இவர்களின் மூளையின் குறுகுறுப்பை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தி இவர்களை குப்பைக் கூடையில் அள்ளிப்போட வேண்டும்.

இன்றைய தமிழ் தேசிய முன்னணியும் அதே அதே அரதப்பழசான கூட்டணியின் நழுவல் போக்கிலான அரசியலையே இத்தனை இழப்புகளின் பின்னால் நொந்து கிடக்கும் தமிழ் மக்களிடம் எடுத்து வருகின்றது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தன் தன் சுய இலாபங்களை மட்டுமே தூக்கிப்பிடிக்கும் இத்தகையவர்களை ஒதுக்கித் தள்ளுவதே இத்தகைய அரசியல் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதே தமிழ் மக்களின் ஆத்மார்த்தமான கோபத்தை வெளிக்காட்டுவதற்கும் சர்வதேசத்தின் கள்ள மெளனத்தைக் கலைக்கவும் உதவி செய்யக்கூடும்.

2 comments:

Anonymous said...

இட்லி ஐயா உங்களை வழி மொழிகிறேன்.
ஒரு சிறு தவறு
முள் கம்பிக்குள் அடைக்கப்பட்டவர்கள் முப்பதாயிரம் அல்ல மூன்று லட்சம் பேர் .

இட்டாலி வடை said...

வாருங்கள் அனானியாரே!

திருத்திக் கொண்டேன்....

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil