ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, November 28, 2009


பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் - இந்தியா


"கெட்டிக்காரனின் புளுகு எட்டு நாளைக்கு" என்பது நம்மூரில் வழங்கும் சொல்லடை. கடந்த மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நிறைவு பெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் கணக்கில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரும் சிங்கள அரசால் சுட்டிக் காட்டப்பட்டது. கூடவே பிரபாகரனின் உடலம் என்றும் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடையாத தமிழ் பேசும் மக்களே இருந்திருக்கவில்லை. தம் நம்பிக்கையின் நட்சத்திரமாக அவரை அடையாளங்கண்டிருந்த ஈழத்தமிழ் மக்களின் நிலையோ துயரத்தின் உச்சமாக இருந்தது.

கடைசி நம்பிக்கையையும் தொலைத்து விட்ட தமிழ் மக்களை ஆடு மாடுகளைப் போல அடைத்து வைத்து சிங்களம் இந்தியாவின் ஆசியுடன் அராஜகம் செய்தது. விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விட்டதாக மார்தட்டிய சிங்களமும் ஆசியும் ஆலோசனையும் கொடுத்து அதனை ஆட்டுவித்துக் கொண்டிருந்த இந்தியாவும், இந்தியாவுடன் நட்புக்கரத்தை மறைவாகப் பற்றிக் கொண்டு தமிழ் மக்களுக்காகப் போலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த மேற்குலகும் அமெரிக்காவும் புலிகளுக்கெதிரான தடையை நீக்கப்போவதில்லையென்ற போதே முதலாவது பொறி தட்டியது.

இல்லாத புலிகளுக்கெதிரான தடையை இவை ஏன் நீடிக்கின்றன என்ற நியாயமான கேள்வி எழுந்தது. இந்தியாவின் உள்நோக்கங்களான இலங்கையின் வளங்களைச் சுரண்டல் குறைந்த விலைக் கூலித் தொழிலாளர்களைப் பெறுதல் என்ற அடிப்படை நோக்கங்களை விரைந்து பெற்றுக்கொள்ள முடியாததும், முட்கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடந்த மக்களைச் சர்வதேசத்தின் அழுத்தத்தை மீறி கண்ணி வெடி அகற்றப்படாமை என்ற போலிக்காரணம் காட்டியும் வெளியில் விட தயக்கம் காட்டியபோதும் இரண்டாவது பொறி தட்டியது.

சிங்களத்தின் இராணுவ , அரசியல் ஆட்சியாளர்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலையால் பதட்டப்பட்ட இந்தியாவின் செயல்களும் சர்வதேச சமூகத்தின் இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நீர்த்துப் போக இந்தியா எடுக்கும் இராஜதந்திர நகர்வுகளும் தொடர்ந்த சந்தேகத்தை உறுதி செய்து கொண்டேயிருந்தது.

உண்மையிலேயே புலிகளின் தலைவர் கொல்லப்பட்டிருந்தால் சிங்கள ஆட்சியைவிட அதிகம் மகிழ்ச்சிப்பட்டிருக்கக் கூடியது இந்தியாவேதான். இடைஞ்சல்கள் அற்ற இலங்கையின் முழுமையான சரணாகதியை வேண்டி நிற்பது இந்தியாவே. வடக்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் முழுமையான பகையை எதிர்கொண்டிருக்கும் இந்தியாவிற்கு இலங்கையின் முழுமையான சரணாகதி ஓரளவு ஆறுதலை அளிக்கக் கூடும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே.

ஆனாலும் புலிகளின் தலைவரின் "தப்பித்தல்" அல்லது "தப்பித்திருக்கக் கூடும்" என்ற சந்தேகம் இப்போது இருந்த நிம்மதியையும் தொலைத்த சங்கடத்தில் இந்தியாவை ஆழ்த்தியுள்ளது. புலிகளின் தலைவரை கோட்டை விட்ட சிங்கள இராணுவத்தால் உறுதியான தகவலைக் கொடுக்க முடியவில்லை. அப்படியான உறுதியான தகவலை பெறமுடியாத இக்கட்டில் இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஒரு "மரண அத்தாட்சிப் பத்திரத்தை" தயார்ப்படுத்த முடியாது சிங்களம் விழியைப் பிதுக்குகின்றது.

அதனாலேயே 1991 இல் படுகொலை செய்யப்பட்ட இராஜீவின் ஆவியை நிம்மதியாக உறங்க வைக்க இந்திய ஆட்சியாளர்களால் முடியவில்லை. அண்மையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட தனி வழக்கு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக் காடுகளைச் சல்லடை போட்டு பிப்ரவரிக்குள் கண்டு பிடித்து விட முடியும் என்று சிங்கள இராணுவத்தாலும் அதன் ஆட்சியாளர்களாலும் அண்மையில் "அதிமுக்கிய" விஜயம் மேற்கொண்ட பிரணாப்பிற்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை நம்பி எடுக்கப்பட்ட முடிவாகும் இது.

அதே நேரம் பதுங்கியிருந்த புலி "மாவீரர்" நாளில் பாயலாம், அப்படிப் பாய்ந்தால் ஒரே அமுக்காக அமுக்கிவிடலாம் என்ற நப்பாசையும் இந்திய, சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இருந்தது. அப்படியான ஒரு தேவை குறித்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இந்திய இராணுவத்தின் அசைவுகளை முன்கூட்டியே மோப்பம் பிடித்திருந்த சரத் பொன்சேகா தனக்கு எதிராகவே இந்திய இராணுவத்தின் உதவி கேட்கப்பட்டிருந்தது என்று படங்காட்டியபோது, அனைத்தும் பிசுபிசுத்துப் போய் விட்டது.

புலியைப் பிடிக்க வைத்திருந்த இராணுவம் எலியைப் பிடிக்கவா என்று இந்தியாவும் மகிந்தவும் தலையில் அடித்துக் கொண்டதும் இரகசியமாக நடந்தேறியது. தப்பிச் சென்ற புலிகளின் ஊடுருவல் தமிழகப் பகுதிகளில் இருக்கக் கூடும் என்ற ஊகமே ப.சிதம்பரத்தை தெற்குப் பகுதிகளால் தீவிரவாதிகள் இந்தியாவினுள் ஊடுருவக் கூடும் என்று பேச வைத்தது. பாகிஸ்தான் முஸ்லீம் தீவிர வாதிகளின் ஊடுருவல் நிகழ பனி விழும் காஸ்மீர் மலைபிரதேசங்களும் பாதுகாப்பற்ற நீண்ட குஜராத்தி கடற்பிரதேசங்களுமே சிறந்தது என்பதை பயங்கரவாதிகள் உட்பட அனைவரும் அறிவர்.

புலிகளின் தலைவரைப் பிடிக்க முடியாது போனதனாலேயே கோபாலபுரத்தைச் சுற்றி ஒரு ஈ காக்காய் கூட பறக்க முடியாதபடி பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அண்மையில் தவறிப்போய் அங்கு நுழைந்த ஒரு காரும் அதில் இருந்தவர்களும் பட்ட பாடு அவர்களின் துரதிர்ஷ்டத்தை நினைவு படுத்தியதுடன் கருணாநிதியின் உயிராசையையும் புலப்படுத்தி நிற்கின்றது. தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருந்த மாமன்னனால் இப்போது தனியறையில் பஞ்சணை மெத்தையில் கூட படுத்து நிம்மதியாகத் தூங்க முடியாதிருக்கின்றது.

மே மாதத்தில் இறந்து போன பிரபாகரனுக்கு நவம்பர் மாதத்தில் கூட இறப்புச் சான்றிதழ் கொடுக்க முடியாத சிறிலங்கா அரசையும் இறப்புச் சான்றிதழைப் பெற்று இராஜீவின் ஆவியை நிம்மதியாகத் தூங்க விட்டு மக்களின் வரிப்பணத்தை விரயமாக்காது வழக்கை முடிக்க வக்கற்ற இந்திய அரசையும் என்னவென்பது.

இவர்கள் தான் இந்து சமுத்திரத்தில் வல்லரசாகும் வீண்கனவுகளுடன்.. அணு ஆயுதம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அனுப்ப/அடையாளமிட

Add-Tamil