ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, November 14, 2009


மனுஷபுத்திரனின் சக்கரநாற்காலியும் சாருவின் நொண்டித்தனமும்



மனிதன் ஒரு விலங்கு என்பது தான் இயற்கையின் விதி. அதை மீறி நாம் மனதளவில் கற்பித்து வைத்திருக்கும் உயர்வுகள் அனைத்தும் நமக்கு நாமே வரித்துக் கொண்டது தான். அது சிந்திக்கத் தெரிந்த மனிதர்களாகிய எங்களின் சுய கற்பிதம். இயற்கை என்ற பிரமாண்டம் அனைத்து தாவர, விலங்குகள் போன்றே மனிதர்களையும் அடக்கியிருக்கின்றது. அனர்த்தங்களோ அழிவுகளோ நேரும் போது மனிதர்களுக்கென்று எந்த விதி விலக்கும் கிடையாது.

அழிபவர்கள் போக மீண்டவர்கள் தொடர்ந்து வாழ்வார்கள். மற்றைய விலங்குகள் தாவரங்கள் போலவே மனிதர்களுக்கும் ஆகக் கூடிய காரியம் இதுவாகவே இருக்கின்றது. எங்களுக்கு நாங்களே செய்து கொள்ளும் உதவிகள் மனிதர்களின் சிந்திக்கத் தெரிந்த தன்மையினால் உண்டாகியிருப்பது. ஒரு தேவையாக இன்று செய்வது நாளை நமக்கும் வேண்டியிருக்கக் கூடியது.

மனிதனை விலங்கு நிலையிலிருந்து உயர்த்தி வைத்திருப்பது இவ்வகையான சிந்தனையினால் ஏற்பட்டிருக்கும் கொடுக்கல் வாங்கல். இன்று நாம் செய்யும் உதவி நாளை சகாயமாகக் கூடும். இது ஒரு வகை சுயநலம் தான். இதையே மனித மேன்மையாக மகான்களும் மகா அனுபவங்களும் எடுத்துக் கூறுகின்றன. துன்பப்படும் மனிதர்களைக் கண்டு அவ்வகைத் துன்பங்களில் இருந்து விடுபடத் துடித்ததே புத்தரின் அனுபவங்கள்.

மதங்கள் அனைத்தும் இரக்க்கம் காட்டுவதன் தேவையையும் நேசிக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.

"இரக்கம் காட்டுபவர்கள் எவர்களோ-அவர்கள்
இரக்கம் காட்டப்படுவார்கள்" என்று உயரிய விவிலியம் கூறுகின்றது. உன்னைப்போலவே அயலவனை நேசி என்று இயேசு கூறியிருக்கின்றார்.

"பல்லுயிர் ஓம்புதல்" இந்து சமயம் கூறுகின்றது.

"உன் வலது கை இடது கையைக் கழுவட்டும், இடது கை வலது கையைக் கழுவட்டும் இரண்டும் சேர்ந்து முகத்தைக் கழுவட்டும்" என்று ஒருவருக்கு ஒருவர் உதவி வாழும் தன்மையைத் திருக்குர்ரான் இயம்புகின்றது.

இது சிந்திக்கத் தெரிந்த மனிதர்களால் இயற்கையின் சீற்றங்களிலிருந்தும் உற்பாதைகளிலிருந்தும் மனித சமூகத்தைக் காத்துக் கொள்ள மகான்கள் கூறிய நல்லுரைகள்.

ஆனால் பெருந்துயரம் என்னவென்றால் இயற்கையால் ஏற்படும் தொல்லைகளை விட மனிதர்களால் மனிதர்களுக்கு ஏற்படுத்தப்படும் துயரங்கள் தான் இப்போது பல்கிப் பெருகிப்போய்விட்டது. இரக்கங்காட்டும் தன்மையும் சகமனிதனை நேசிக்கும் தன்மையும் தேய்ந்து குறைந்து போய்விட்டது. வஞ்சித்து கருவறுக்கும் கயமையே பல்கிப் பெருகிவிட்டது.

விழுந்து கிடக்கும் மனிதனை இடறி மிதித்துச் செல்லும் தன்மையே இன்றைய மனித நடைமுறையாகி விட்டது. அதற்குள்ளும் ஈரம் கொண்ட மனிதர்கள் சிலராவது வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே சிறிது ஆறுதல்.

இந்த ஈரத்தையும் கொச்சைப்படுத்தும் ஒரு வாதமாகத் தான் சாருவின் இந்த வார்த்தைகளைப் பார்க்கின்றேன். தாழ்வு மனப்பான்மையின் ஆத்திரமாக அல்லது அறிவற்ற தன்மையின் முரட்டுப்பாய்ச்சலாக இது எனக்குத் தெரிகின்றது.


"உங்கள் கடிதத்தில் தெரியும் மனிதாபிமானம் இன்றைய தமிழர்களின் பொதுப் பிரச்சினை என்பதால்தான். வெளிப்பார்வைக்கு மனிதாபிமானமாகத் தெரியும் உங்கள் வாதம் உண்மையில் ஃபாஸிச மனோபாவத்திலிருந்துதான் எழுகிறது. அதனால்தான் இப்படிப்பட்ட போலி மனிதாபிமானத்தை 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து எதிர்த்து எழுதி வருகிறேன். அதனால்தான் நான் மனிதாபிமானத்துக்கு எதிரி போலவும், மனிதாபிமானம் பேசுபவர்கள் மனிதாபிமானிகள் போலவும் ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. மனிதாபிமானத்துக்கு எதிராகப் பேச வேண்டும் என்று எனக்கு ஆசையா என்ன? உங்கள் மனிதாபிமானத்தில் ஒளிந்திருக்கும் ஃபாஸிசம்தான் எங்களை பயமுறுத்துகிறது.

மற்றவர்களின் மீது இரக்கம் கொள்வது பச்சையான அயோக்கியத்தனம். இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்னை நேரில் சந்திக்கும் போது என்னை ஒரு அறையாவது அறைந்து கொள்ளுங்கள். பேசாமல் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் இப்போது நான் உண்மையைப் பேசியாக வேண்டும். இப்படி மற்றவர்கள் மீது இரக்கும் கொள்வது பச்சையான அயோக்கியத்தனம்தான். சந்தேகமே இல்லை. இப்படி இரக்கம் கொள்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களை விட ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள். அந்த ‘உயர்ந்த இடத்தில் ’ இருந்துதான் இது போன்ற மனிதாபிமான வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. "


இதில் இரக்கம் காட்டப்படும் ஒருவர் தாழ்ந்தவன் என்றும் இரக்கம் காட்டுபவர் உயர்ந்தவர் என்றும் யார் சொன்னது. ஒருவருக்கு இருக்கும் "தேவை" இற்கு வழங்கப்படும் "உதவி" என்பது தான் முக்கியமானது. கால் நடக்க முடியாத ஒருவருக்கு வழங்கப்பட்ட உதவிதான் சக்கர நாற்காலி. யாரோ ஒருவருக்கு ஏற்பட்ட இரக்கம் தான் சக்கர நாற்காலி என்ற ஒன்றை உருவாக்கி கால் இல்லாதவர்களை நடமாட விட்டிருக்கின்றது. அவர்கள் தேவையை அவர்களாகவே பார்த்துக்கொள்ளும் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது. ஒரு சக்கரநாற்காலி கொடுக்கும் இரக்கமும் இல்லாது அவர்களை சப்பாணிகளாக இருக்கச் செய்வதா? இவ்வாறு இரக்கப்படுவதைத்தான் பாஸிஸம் என்று சாரு கருதுகின்றாரா?

பட்டினியால் வாடும் மக்களுக்கான உணவு வழங்கும் இலாப நோக்கற்ற ஸ்தாபனங்கள், போர்களினால் துன்பப்படும் மக்களுக்கான உதவிகளை வழங்கும் ரெட் குரொஸ், எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு அனைத்தும் பாஸிஸத்தின் செயற்பாடுகளா? ஏனெனில் சாருவின் வார்த்தைகளில் "மற்றவர்களின் மீது இரக்கம் கொள்வது பச்சையான அயோக்கியத்தனம்." ஆயிற்றே.

உலகில் காணப்படும் சமநிலையற்ற தன்மையைச் சீர் செய்ய முயற்சிக்கும் அனைத்துக் கருமங்களும் பாஸிஸம் தானா?

மனுஸபுத்திரனின் சக்கர நாற்காலிக்குள் ஒளிந்திருந்தது அவருக்குத் தேவையான மற்றவர்களிடம் கேட்கப்படும் இரக்கம். அல்லது கால்கள் இருக்கும் மற்றவர்கள் மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் அசூசை.

"புனிதர்களோ கடவுள்களோ
சட்டென மண்டியிடும்படி
நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை"

"இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளில்
பங்கேற்கவேண்டியதில்லை
தேசியகீதம் பாடும்போது
எழுந்து நிற்கவேண்டியதில்லை"

கால்கள் இருக்கும் மனிதர்களின் மேலான அசூசையை அவர் இவ்வரிகளால் தான் நிரூபித்திருக்கின்றார். மற்றவர்களை விட தான் வேறு பட்டவன் திமிரானவன் என்பதை இவ்வார்த்தைகளின் வெளிப்படுத்துதலில் தம்பட்டம் அடிக்க முயல்கின்றார்.

ஆனாலும் ஒன்றை மறந்து போகின்றார்."புனிதர்களோ கடவுள்களோ
சட்டென மண்டியிடும்படி
நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை" அவரை மட்டுமல்ல காலுள்ள மனிதர்களையும் தான் யாரும் மண்டியிட கட்டாயப்படுத்துவதில்லை. நாமே எம் சுய விருப்பத்தால் தான் நாம் மண்டியிடுகின்றோம். அதனால் நாம் அவமானப்பட்டுப் போவதில்லை. உயர்வாகவே உணர்கின்றோம். அடக்கமாக நடந்து கொள்வது உயர்வான குணமாகவே பார்க்கப்படுகின்றது.

சுய தம்பட்டம் அல்லவென்பதை சாருவும் மனுஸபுத்திரனும் உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் சுய எள்ளல் செய்வதில்லை. ஒரு கால் இல்லாத ரெரி பொக்ஸ் தன் குறை பற்றிச் சிந்தித்துக் கொண்டிராது தொடரோட்டங்களை ஓடி நிதி சேகரித்தது, அத்தகைய குறைபாடுள்ளவர்களுக்கு உதவி செய்யவே. அவர் இன்று எங்களோடு இல்லாவிட்டாலும் சக மனிதர்கள் இன்றும் அவருக்காக அவரைப் போன்றவர்களுக்காக ஓடி நிதி சேகரித்துக் கொண்டிருக்கின்றார்களே. இவர்கள் எல்லாம் பாஸிஸ வாதிகளா?


"அப்போது எங்களை நோக்கி வந்த அறுபது வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒருவர் வந்து மனுஷ்ய புத்திரனிடம் “உங்களுக்கு இது பிறவியிலேயே உள்ளதா? இடையில் வந்ததா? ” என்று கேட்டார். மனுஷ்ய புத்திரன் என்ன பதில் சொன்னார் என்று ஞாபகமில்லை. ஆனால் அந்த ஆளை உதைக்க வேண்டும் என்று தோன்றியது. ’ குறைந்த பட்சம் அசிங்கமாகத் திட்டியாவது இருக்க வேண்டும்; தவறு செய்து விட்டோம் ’ என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது."

ஆமாம் ஐயா, அவரை உதைக்கத்தான் வேண்டும். யார் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்ற அறிவில்லாது உங்கள் மீது இரக்கம் காட்ட வந்த அவரை உதைக்கத் தான் வேண்டும். மனுஸ புத்திரன் வசதிகளில் கொழித்திருக்கலாம். அவருக்கு யாருடைய உதவியும் வேண்டாது இருக்கலாம். ஆனால் உதவி தேவைப்படும் விளிம்பு நிலை மனிதர்கள் இந்த பூமியில் நிறைந்து தான் இருக்கின்றார்கள். அவர்கள் மீது நிறையவே இரக்கம் காட்டப்படும் தேவை இருக்கின்றது. சக மனிதனுக்கு உள்ள கடமையாகவே அது இருக்கின்றது. அடுத்த நேர உணவிற்கு வழியில்லாத ஏழையின் முன்னால் அமர்ந்து விருந்தோடு உண்ணும் பழக்கம் எமக்கு வேண்டாம்.

அத்தகைய குரூர மனம் உங்களுக்கு இருந்தால் அதை நீங்களே கொண்டாடுங்கள். புரட்சி முலாம் பூசி வெளியில் விடாதீர்கள். இப்படியெல்லாம் புரட்சி செய்யும் சாரு தான் வங்கி கணக்கு எண்ணை வெளியிட்டு "தண்டல்" அறவிடும் எழுத்தாளராகவும் இருக்கின்றார். அப்படித் தண்டல் வழங்குவது சமுதாயத்தின் கடமையாகவும் கடிந்து கொள்கின்றார்.

ஒரு எழுத்தாளராக கல்வியாளராக கருத்துக் கூறுபவராக இருப்பதை விட "மனிதனாக" இருப்பதன் தேவை பெரிதல்லவா?

இறுதியாக, மனுஸபுத்திரன் என்ன நோக்கத்தில் அந்தக் கவிதையை எழுதினாரோ என்னவோ அவருக்குத் தான் வெளிச்சம். ஆனால் சாருவின் குதர்க்கம் நிறைந்த எழுத்துக்கள் அவரையும் கல்லெறி வாங்கும் நிலைக்கு உள்ளாக்கி விட்டன என்றே தோன்றுகின்றது.

"எந்த நியாயமான, நியாயமற்ற
காரணத்திற்காகவும்
நாற்காலியை யாருக்கும்
விட்டுக்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை"


நியாயமான காரணங்களுக்காகத் தானே எழுதுவதாக கூறுகின்றீர்கள்.

"மனுஷ்ய புத்திரனின் கவிதைகளிலுள்ள அரசியலும், அதிகாரத்துக்கு எதிரான குரலும் புரியாமல் ..."


நியாயமான காரணங்களுக்காக நீங்கள் போராடவில்லையா மனுஸபுத்திரன்? உங்களுடன் கூடவே இருந்து குழி பறிக்கும் சாருவின் "அரசியல்" உங்களுக்குப் புரிகின்றதா?

"ஒருமுறை தற்கொலை பற்றி கவிதை எழுத, உடனே அவர் மீது பிரியம் கொண்ட நூறு பேர் அவரை உங்களைப் போல் மனிதாபிமானம் பொங்க விசாரித்து விசாரித்து அதனாலேயே தற்கொலை உணர்வு தோன்றியது என்றார். அதாவது, இப்படி ஒரு கொடுமையான சூழலில் எழுதிக் கொண்டிருக்கிறோமே என்ற ஆயாசத்தில்."

வாழ்க்கை பற்றிய நம்பிக்கையுள்ள ஒருவர் ஏன் எதிர் மறையான விடங்களைத் தெரிவு செய்து எழுத வேண்டும் என்ற கேள்வி எழுவது சரிதானே. உங்கள் மீது அன்பு கொண்டவர்கள் அனுதாபம் கொள்வதும் முறைதானே..

எழுத்தாளனின் எழுத்தை ஏன் ஒரு அனுபவமாகப் பார்க்க மறுக்கிறீர்கள்? கால் உள்ள ஒருவரின் அனுபவத்திற்கும் கால் இல்லாத ஒருவரின் அனுபவத்திற்கும், கண் உள்ள ஒருவரின் அனுபவத்திற்கும் கண் இல்லாத ஒருவரின் அனுபவத்திற்கும் வித்தியாசம் இருக்காதா? அதை ஒருவர் எழுத்தில் பதிவு செய்யக் கூடாதா?

உங்களுக்கு இப்படியான ஒரு அனுபவம் அல்லது எண்ணம் ஏற்பட்டிருக்கின்றது என்று மற்றவர்கள் எண்ணுவதில் என்ன தவறு? ஏன் சாரு ..நீங்கள் என்ன எழுதுகின்றீர்கள் என்ற பிரக்ஞை உங்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கின்றதா? ஒன்றுக்கொன்று முரணாக எழுதுவது தான் உங்கள் குனாம்சமா?

இப்போது நான் தமிழிலேயே இதுவரை இப்படி ஒரு ஆபாச நாவல் வந்ததில்லை என்று சொல்லப்படும் அளவுக்கு ஒரு ஆபாச நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். டிசம்பரில் அது வெளிவந்தவுடன் நோர்வேவுக்குத் தப்பி ஓடி விடலாம் என்ற திட்டத்தோடுதான் அதை ராப்பகலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் மனுஷ்ய புத்திரனிடம் சென்று அறிவுரை சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது?

நீங்கள் எழுதுவதெல்லாம் ஆபாசம் என்று நீங்களே ஒத்துக் கொள்கின்றீர்கள். அதையே நாங்கள் சொல்ல வந்தால் இதுதான் ’ காமன்மேன் ’ இலக்கியத்துக்குள் நுழையும் போது ஏற்படும் ஆபத்து. இப்படி தினந்தோறும் காமன்மேன்களையே எங்களைப் போன்ற எழுத்தாளர்கள் எதிர்கொண்டிருந்தால் எங்கள் நிலைமை என்ன ஆவது?


என்கின்றீர்கள். நீங்கள் சொல்வதைத் தானே நாங்களும் சொல்கின்றோம். நீங்கள் எழுதுவதெல்லாம் வெறும் குப்பைகள்..ஆபாசக் குப்பைகள் என்று.

" டிசம்பரில் அது வெளிவந்தவுடன் நோர்வேவுக்குத் தப்பி ஓடி விடலாம் என்ற திட்டத்தோடுதான் அதை ராப்பகலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்."

நீங்கள் இந்த சமூகத்திற்கு தேவையில்லாத ஒருவர் என்பதை உங்கலைப் போலவே நாங்களும் புரிந்து கொண்டிருக்கின்றோம். அதைச் சொல்ல வந்தால் அது என்ன? எங்களைக் "காமன் மேன்" என்று ஒதுக்கி விடுகின்றீர்கள். குறைந்தபட்சம் ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்குக் கூட நீங்கள் தயாராகவில்லாத ஒரு மூர்க்கம் காட்டுகின்றீர்கள். தயவு தாட்சண்யமின்றி காலில் போட்டு மிதிக்கும் மூர்க்கம் கொள்கின்றீர்கள்.

உங்கள் மீதுள்ள மற்றவர்களுக்கான சகமனித இரக்கம் தான் உங்களை இன்னும் வாழ வைத்திருக்கின்றது.நம்புங்கள். அது போலல்லாது உங்களைப் போலவே அடிக்கு அடி உதைக்கு உதை என்று எல்லோரும் இருந்திருந்தால் உங்கள் நிலை ..நினைக்கவே பரிதாபமாக இருக்கின்றது. இதை எழுதியதற்காக உங்கள் விஷப்பற்களில் நான் அரைபடக் கூடும். ஆனாலும் செல்வராஜ் ஜெகதீசன் போன்ற சாதாரணர்களையும் என்னைப் போன்ற சக மனிதர்களின் உணர்வுகளையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil