ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, November 26, 2009


எழுச்சி நாள்
இமயம் முதல் குமரி வரை கொடி நட்டு ஆண்டான் தமிழன். கப்பலோட்டி கடலையும் அளந்தான், வென்றான் என்ற கதைகளை வரலாறாகவே அறிந்திருந்தோம். அந்த வரலாற்றுக்கே சாட்சியமாக எங்களை இருக்க வைத்தான் ஒரு மனிதன். அவர் தான் பிரபாகரன். புலிகளின் தவறுகளோடு என்னால் ஒன்றிப்போக முடியாவிட்டாலும் அவர்களின் வீரத்தோடு என்னால் இணைந்து போக முடியும். எலிகளாகவே வாழ்ப்பழக்கப்பட்ட நம் மக்களைப் புலிகளாக நிமிர்த்தியவர் அவர்.

துயரங்களே வாழ்வாக வாழும் உரிமையே பிச்சையாகக் கையேந்தி நின்றவர்களை வாழ்க்கையின் உச்சங்களை எட்டச் செய்த மகாவீரர் அவர். வாலை குழைத்து சலுகைகளுக்காகக் கையேந்தி நிற்கும் முதுகெலும்பற்ற கோழைகளுக்கு மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்த உன்னத வீரன் அவர்.

அகிம்சைகளும் அஞ்சாமையும் ஒரு சொட்டு இரத்தத்தில் அல்லது ஒரு துண்டு எலும்பில் வாலை மடக்கி உட்கார்ந்ததைப் பார்த்து " தமிழா உனக்கு எதிர்காலமே இல்லையா? "என்று கூனிக்குறுகி இருந்த ஒரு இனத்தை உலகமே நின்று திரும்பிப் பார்க்க வைத்தது அவர் தான்.

குட்டக் குட்டக் குனிவதல்ல வாழ்க்கை என்பதை இளைய தலை முறைக்கல்லாது எல்லாத் தலை முறைக்கும் எடுத்துக் காட்டியதும் செயற்படுத்திக் காட்டியதும் அவரேதான். எத்தனை இஸங்களைக் கற்றிருந்தாலும் எத்தனை அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் எத்தனை அறிவுச் சுடர்களைக் கொழுத்தி வைத்திருந்தாலும் எந்தக் கல்வி மானாலும் எந்த அறிஞராலும் எந்த அரசியலாளராலும் சொல்லிக் கொடுக்க முடியாத ஒன்றைச் சொல்லிக் கொடுத்தவர் அவர்.

அது தான் சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்பது. சில நூற்றாண்டுகளாக நீண்டிருந்த அடிமை வாழ்க்கையில் மறந்து போயிருந்த தமிழனின் வீரம். அதற்காக அந்த வீர மறவனுக்கு அவரின் பிறந்த நாளில் "சல்யூட்"

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil