ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, November 5, 2009


மனங்களின் சந்திப்பும் மசாலாக்களின் வசீகரிப்பும்


எழுத்துக்கள் எழுத்தாளர்கள் என்ற பிரமிப்பும் பிரமையும் இப்போது இணைய எழுத்தாளர்களையும் ஏற்றுக்கொள்வது அல்லது இணைத்துக் கொல்வது வரை நீட்சி பெற்றிருக்கின்றது. ஏற்றுக்கொள்வது அல்லது இணைத்துக்கொள்வது பற்றிய கருத்துக்கள் யாரால் கூறப்படக்கூடும். வாசகர்கள் அல்லது பயனாளர்களால் மட்டுமே இவ்வாறு கூறமுடியும் என்பது எனது கருத்தாகும்.

ஏனெனில் எழுத்துக்கள் தேடப்படுவதும் வாசிக்கப்படுவதும் வாசகர்களாலேயே நடக்கின்றது. வாசகர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாக அல்லாவிட்டாலும் எழுத்தாளர்கள் எல்லோரும் வாசகர்களாக அறியப்பட்டவர்களே.

தற்போதைய வாசிப்பு இணையத்தின் வாயிலாகவே பெரிய அளவில் நடைபெறுகின்றது. உலகத்தின் எந்தமூலை முடுக்கில் நடைபெறும் நிகழ்வுகளும் நிமிடத்தில் வாசகன் முன்பு கொண்டுவரப்படுகின்றது. உலக நடப்பியலை வாசகன் முன்பு கொண்டு வரும் தெரிவு முன்னர் பத்திரிகைகளிடம் மட்டுமே இருந்தது. பெரும் பத்திரிகைகளால் சார்பு, சார்பற்ற நிலையில் கொடுக்கப்பட்ட விடயங்களே உலக அறிவை போதித்தது. ஆனால் இப்போதோ உலக நடப்பியலை தெரிவு செய்யும் வசதி சார்பு, சார்பற்ற வகையில் வாசகன் முன்பு விடப்பட்டிருக்கின்றது. அத்தனை தூரம் நிகழ்வுகள் வெளிச்சம் போடப்பட்டு அம்பாரமாக இணைய வெளியெங்கும் குவிந்து கிடக்கின்றன.

இதைச் சாத்தியமாக்கியவர்கள் இணைய எழுத்தாளர்களே.முக்கியமாகப் பதிவர்கள். இவர்கள் நிகழ்வுகளைப் பதிவு செய்வதையும் தாண்டி கலை இலக்கிய உலகிலும் கால் பதிக்கின்றார்கள். காத்திரமான படைப்புக்களை சகல வெளிகளிலும் படைக்கின்றார்கள். இப்படைப்புக்களை வாசிக்கும் ஒரு வாசகர் வட்டத்தையும் கட்டியெழுப்புகின்றார்கள்.

இது இவ்வாறு இருக்க சகல அல்லது பெரும்பான்மை தமிழக வாசக வட்டத்தால் இது வரை ஏற்றுக்கொள்ளப்படாத சாருநிவேதிதா, தான் இணைய எழுத்துக்களையே வாசிப்பதில்லை என்றும், இணையத்தில் வெறும் குப்பைகள்தான் எழுத்தாக்கப்படுவதாகவும், இணையத்தில் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள் அல்ல என்றும் தனது கருத்தை கூறியிருக்கின்றார்.

சாருநிவேதிதா பற்றிய முன்னறிவிற்கு இதைப்போன்ற பல உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றது. தன்னை ஒரு எழுத்தாளர் என்று நிரூபிக்க முயலும் ஒருவரின், மற்றவர்களை ஊக்குவிக்க அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பாது மறுதலிக்கும் மூர்க்கம் இவ்வாறு வெளிப்படுகின்றது.

சமூகத்தில் எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் காலத்திற்குக் காலம் பிரதியீடு செய்யப்படுகின்றார்கள். ஒரு காலத்தில் போற்றப்பட்டவர்கள் பின்னர் கண்டு கொள்ளப்படுவதில்லை.சிலர் காலத்திற்கும் போற்றப்படுக்கின்றார்கள். இவ்வகையான ஏற்றமும் இறக்கமும் கொண்டதான தாக்கமே எழுத்தாளர்களால் சமூகத்தில் உருவாக்கப்படுகின்றது. இதற்கு நல்ல உதாரணங்கள், புதுமைப்பித்தன் அவரைத்தொடர்ந்து ஜெயகாந்தன். வாசக உலகத்தால் கொண்டாடப்பட்டவர்கள் இவர்கள்.

இத்தகைய காத்திரமான தாக்கத்தைச் சமுதாயத்தில் உருவாக்க முடியாது தத்தளிக்கும் சாருநிவேதிதா போன்றவர்கள் ஒரு எதிர்காலத்தையே நிராகரிக்கும் போக்கு வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது. தாங்கள் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்களாகவே இவர்கள் இருக்கின்றார். இந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணன் போற்றப்படக்கூடியவர். இணைய எழுத்தில் பலர் நன்றாக எழுதுவதாகவும், அவர் தொடர்ந்து பல நல்ல பதிவுகளை வாசித்து வருவதாகவும் கூறியிருக்கின்றார். இதனால் குறைந்த பட்சம் தன் வாசிக்கும் மனோபாவத்தையும் தன் உருவாக்கத்தின் மூலத்தையும் மறக்காத நிலையை வெளிப்படுத்துகின்றார்.

ஒரு எழுத்தாள அங்கீகாரத்தை இவ்வாறு வாசக அனுபவத்தின் மூலமாகப் பெறும் நேரத்தில் சாருநிவேதாவால் முன்வைக்கப்படும் குப்பைகள், மொக்கைகள் என்ற கருத்துருவாக்கம் பற்றியும் பார்க்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

இணைய எழுத்தாளர்களின், பதிவர்களின் எழுத்துக்கள் வாசக அனுபவத்தை மேவிய எழுத்தாள வெளிப்பாடுகளின் முகையவிழ்ப்புக்களே. அவர்களின் சூழல், தகமை, உலகம் பற்றிய பார்வையின் விசாலம் என்பவையே அவர்களை போற்றப்படும் எழுத்தாளத் தகமைக்கு உந்தித் தள்ளுகின்றது.

அவர்களால் கொள்ளப்படும் சமுதாய அக்கறையும் வெளிப்படுத்துகையும் அவர்களுக்கான இடத்தை வாசகர் வட்டத்தில் உருவாக்கும். அவர்களுக்கான அங்கீகாரம் தீர்மானிக்கப்படும். வெறும் மொக்கைகள் பத்தோடு பதினொன்றாக அவர்களை வெளியேற்றிவிடும். தமிழ், தமிழக சூழலில் இந்த சமுதாய அக்கறை மிகவும் உயர்ந்த பட்ச தேவையோடு இருக்கின்றது. எழுத்தாளர்களால் நிரப்பப்பட பெரும் வெளியொன்று காத்திருக்கின்றது. அத்தனை தூரம் உலக சமூகத்துடன் ஒப்பிடும் போது நமது சுழல் அழுகி நாற்றமெடுத்துப் போய் இருக்கின்றது. ஒரு சில பேனாக்கள் கூர்மையுடன் இதனை எதிர்கொண்டிருந்தாலும் பலர் பயங்காரணமாகவோ அல்லது ஏதாவது ஒரு காரணத்தாலோ பட்டும் படாமல் விலகி நிற்கின்றார்கள்.

இத்தகைய சமூக அக்கறைக்கு அப்பால் விலகி நின்று எழுத முற்படுபவர்கள் மொக்கைகளை மட்டுமே பிரசவிக்கின்றார்கள். சிலர் தங்களைக் காத்துக் கொள்ளும் உத்தியுடன் அரச இயந்திரத்தின் சீற்றத்தில் இருந்து விலகி நிற்கும் வசதியுடன் சுற்றி வளைத்து எழுதுகின்றார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் என்பவர்கள் சமூக அக்கறையுடன் சமூகத்தை வழிநடாத்தித் செல்பவர்களே ஒழிய சமூகத்தில் நடப்பவற்றைப் பதிவு செய்பவர்கள் மட்டுமல்ல.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil