ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, November 25, 2009


சூடு பிடிக்கும் நவம்பரும் தேவையான சிந்தனையும்


அனல் பறக்கும் அரசியல் மாதமாக நவம்பர் எப்போதும் இருக்கின்றது. துயரத்தின் அடுக்குகளைத் துடைக்கமுடியாத இயலாமையில் ஈழத்தமிழினம் துவண்டு விடும் மாதம் இது. இன்றளவும் இதுவே உண்மையாகவும் இருந்தது. ஆனால் இறுதிப் போரும் இழந்துவிட்ட இலட்சத்திற்கும் அதிகமான உறவுகளும் இந்த மக்களையும் எண்ணிப்பார்க்க வேண்டிய தேவையை உணர வைத்துள்ளது. இந்த மாவீரர்களின் இழப்புக்களைப் போலவே இந்த மக்களின் இழப்புகளும் பெறுமதியானவை.

தமிழராய் இருந்ததனாலும் தமிழராய் வாழ விரும்பியதாலுமே இவர்களின் உயிர்களும் பறிக்கப்பட்டிருக்கின்றது. இதே போல தமிழர்களாய் இருந்ததாலேயே உயிர் பறிக்கப்பட்டவர்களும் நினைவு கூரப்படுவது அவசியம். புலிகளின் அரசியல் தோற்றுப்போன இவ்வேளையில் புலி அரசியலால் கட்டாயமாக்கப்பட்ட சில தளைகளில் இருந்தும் வெளிவருவது அவசியமாகின்றது.

தமிழ் மக்களின் போராட்டத்தில் இழக்கப்பட்ட உயிர்களின் நினைவுகளும் போற்றுதலும் முழுத் தமிழனத்திற்குச் சொந்தமானது. அதை இனியும் தோற்றுப்போன ஒரு அரசியல் கொள்கைக்காகவோ அல்லது அதனுடன் தொட்ட குறை விட்ட குறையாகத் தொற்றிக்கொண்டிருக்கும் ஒரு சிலரின் பணப்பைகளை நிரப்புவதற்காகவோ பயன்பட அனுமதிக்கக் கூடாது.

விட்டதைப் பிடித்து விட முயற்சிக்கும் ஒரு சிலரினதும் எட்ட முடியாது இருந்ததை எட்டிப்பிடித்து விட முயற்சிக்கும் ஒரு சிலருக்கும் இடையில் நடக்கும் சிண்டு முடிப்புகளிற்குள் தமிழ் மக்களின் இருப்புக்கான உரிமையைக் காவு கொடுக்க முடியாது.

ஈழத்தமிழினத்தின் இருப்பிற்காகக் குரல் கொடுக்கும் ஒரு சிலரின் கோரிக்கையாக எழுந்திருக்கும் புலிகளால் திரட்டப்பட்ட மக்களின் சொத்தைப் பொதுச் சொத்தாக வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த காலங்களில் விட்ட தவறுகளை நேர் செய்ய புலிகளின் அனுதாபிகளுக்குக் கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்.

அதே போல மாற்றுக்கருத்தாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர்களும் செத்த பாம்பை மீண்டும் மீண்டும் அடிப்பதைப் போல புலிகளின் கடந்த காலத் தவறுகளை விமர்சிப்பதால் எந்த நன்மையும் தமிழினத்திற்கு உருவாகப் போவதில்லை என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிங்களப் பாசிசத்தின் இன அழிப்பிற்கு ஏதுவாக முட்கம்பி வேலிகளுக்குள்ளும் போராளிகள் என்ற போர்வையில் அடைக்கப்பட்டுக் கொடுமைக்குள்ளாகும் இளைஞர் யுவதிகள் பற்றியும் பொதுச் சிந்தனையை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தருணம் இது.

இறந்தவர்களை நினைவிருத்திக் கொள்ளும் வேளையில் இருப்பவர்களைக் காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டியதும் எங்களின் கடமையும் அவசியமுமாகும்.

தமிழினத்தைப் பிரித்துப் போடும் பேரினவாதத்தின் நோக்கங்களை ஈடு செய்யும் வகையில் நாடு கடந்த அரசு, மகாசபை போன்ற பிரிவினைகளை தோற்றுவிப்பதும் புலம் பெயர்ந்த மக்கள் நாடு வாரியாகப் பிரிந்து நின்று செயற்படுவதும் நிறுத்தப்பட வேண்டும்.

பதவி சுகம் தேடும் அரசியல் வாதிகளையும் பேரினவாதத்திற்கு எடுபிடி வேலைகள் செய்யும் கூலிகளையும் அவர்களின் தந்திர அரசியலையும் குப்பைக் கூடையில் தூக்கிப் போட வேண்டியதும் இன்றைய தேவையாகின்றது. புலி புலியல்லாத அரசியலைப் புறம் தள்ளி ஈழத் தமிழர்களுக்கான அரசியலை முன்னிறுத்துவதும் அதற்கான வழிவகைகளைத் தெரிவு செய்வதும் இன்றைய இக்கட்டுகளைக் கடக்க உதவி செய்யும்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil