ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, November 15, 2009


இலங்கை,இராணுவப்புரட்சி,இந்தியா,வல்லரசுக்கனவு





சிங்கள அரசு கூறுவதைப் போல யுத்தத்தின் பின்னாலான வெற்றி இன்னும் கிடைத்தபாடில்லை. இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் மகிந்த ராஜபக்ஸவால் விரைந்து முன்னேறமுடியாது பல தடைகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இதனால் மகிந்தவை விட அதிகம் பதட்டப்பட்டிருப்பது இந்தியாதான். தமிழ் மக்களின் எதிர்ப்புச் சக்தியை அழித்தொழித்து இந்தியா விரும்பும் பொருளாதார மேலாண்மைக்கு அமைவாக "பதப்படுத்தும்" நிகழ்ச்சித் திட்டத்தில் மனிதாபிமானத்தைக் காலில் போட்டு இரத்தம் தோய்ந்த வழி முறைகளைக் கடைப் பிடித்ததே இன்று மகிந்த ராஜபக்ஸேயிற்கு சங்கடமாகவும் இந்திய மேலாண்மை ஆசைக்கு தடைக்கல்லாகவும் வந்து நிற்கின்றது.

அமெரிக்காவின் ஆசீர்வாதம் இந்தியாவிற்கு உறுதுணையாக இருந்திருந்த போதிலும் சர்வதேச சமூகத்தால் வெளிக்கொணரப்பட்ட போர்க்கால அத்து மீறல் குறித்த சாட்சியங்கள் அமெரிக்காவை சற்றே யோசிக்க வைத்துள்ளது. போர்க்கால அத்து மீறல்களின் அழிக்க முடியாதா சாட்சியங்களை இலகுவாகத் திரட்டிக்கொண்ட சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அறிந்து அதிர்ந்து போயிருக்கின்றது.

சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடானது போர்க்கால குற்றங்களுக்கான பொறுப்பின் மீது சிலரைப்" பலிக்கடா"வாக்க வேண்டி நிற்கின்றது. போர்க்காலக் குற்றங்களுக்கான பலிக்கடாவாக முன்மொழியப்பட்டிருந்த இராணுவத் தளபதி பொறியில் இருந்து நழுவி எதிர்ச்சக்தியாக பிரமாண்டம் எடுத்திருப்பது இந்தியாவை மலைக்க வைத்திருக்கின்றது.

சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்த வேண்டிய தேவையில் பலிக்கடாவாக இப்போது எஞ்சியிருப்பது மகிந்தவின் சகோதரர்கள் என்ற நிலைமையானது மகிந்த ராஜபக்ஸேயை மிகவும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்கள அரசிற்கும் அதன் அத்து மீறல்கள், கொடுமைகள் அனைத்திற்கும் ஒத்துழைத்தமை தொடர்பான குற்றச்சாட்டு இப்போது இந்தியா மீது விழுந்துள்ளது. மகிந்தவும் அவரின் சகோதரர்களும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் இந்தியாவின் அப்பட்டமான அநீதியான மனிதாபிமானத்திற்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளும் வெளிச்சத்திற்கு வரும்.

இத்தகைய ஒரு ஆபத்தான நிலையை இலங்கை விடயத்தில் இந்தியா ஏன் எடுத்தது என்ற கேள்வி பலரையும் வியப்பிலாழ்த்தும். இராஜீவின் கொலை என்பது பொது மக்களுக்காகச் சொல்லப்படும் மேம்போக்கான காரணமாக இருந்தாலும் அமெரிக்காவினதும் உலக வங்கியினதும் பிராந்திய பொருளாதார மேலாண்மை குறித்த சிந்தனையுடன் மன்மோகன் சிங் தலைமையிலான அரசினை வழி நடாத்தும் பார்ப்பன மேலாதிக்கத்தின் சிந்தனையும் இணைந்து கொண்டதே முக்கிய காரணமாகும்.

திறந்த பொருளாதாரத் திட்டங்களின் மூலம் இலங்கையின் இயற்கை வளங்களை மட்டுமன்றி மனித வளங்களையும் கைப்பற்றும் திட்டமே புலிகளை அழித்தொழிக்கும் முன்முயற்சிக்கு இந்தியாவை உந்தித் தள்ளியது.

நீண்ட நாட்களாக சந்தர்ப்பம் எதிர்பார்க்கப்பட்டு காத்திருந்த இத்திட்டமானது சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தை முறியடித்து விடும் நோக்கில் முடுக்கி விடப்பட்டது. சீனாவின் அண்மைக்கால அபரிமித பொருளாதார வளர்ச்சியும் நேபாளம் ,தீபெத் போன்ற இமயமலைப்பிரதேச நாடுகளின் மீதான பிடியும் சீன பாகிஸ்தானிய நெருக்கமும் சிறிலங்கா, பங்களாதேஸ்,மாலை தீவு போன்ற நாடுகளினுடனான நெருக்கமும் இந்தியாவைக் கிலி கொள்ளச் செய்து விட்டது.

சீனாவின் வளர்ச்சியை உள்ளத்தளவில் விரும்பாத அமெரிக்கா இந்தியாவை மறைமுகமாகத் தூண்டி விட்டுள்ளது. ஆனால் சர்வதேச சமூகத்தின் நெருக்கடி என வரும் போது அமெரிக்காவால் இந்தியாவைக் காப்பாற்ற முடியாது போய் விடும். சர்வதேச சமூகத்தின் வாயை அடைக்க அல்லது இந்தப் பிரச்சினையை கால வரையறையின்றி இழுத்தடிக்க தொடர்ந்தும் மகிந்தவின் ஆட்சி இலங்கையில் இருப்பது இந்தியாவிற்கு அவசியமாகும்.

அவ்வாறிலாது ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுமாயின் அது மகிந்த சகோதரர்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கும் பெரும் தலையிடியாகவே அமையப் போகின்றது. இராணுவத் தளபதியாகவிருந்த சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் தன்னைக் காத்துக் கொள்ள கோத்தபாய மகிந்த ராஜபக்ஸ ஆகியோரைப் பலியிடத் தயாராகவே இருப்பார். இறுகி வரும் சிக்கலில் பகடைக்காயாக பலியிட இப்போது முன்னைநாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவின் பெயரும் அடிபடுகின்றது. இத்தனை காலம் எதுவித பிரச்சினையுமற்று இருந்த சந்திரிகாவின் பெயரும் போர்க்கால குற்றங்களுக்கான விசாரணையில் முன்மொழியப்பட்டிருப்பது சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தின் தன்மையை விளங்கிக்கொள்ளவும் மகிந்த ராஜபக்ஸே அரசு தன்னைக்காத்துக் கொள்ள யாரையும் பலியிடத் தயாராக இருப்பதையும் வெளிப்படுத்துகின்றது.

இலங்கையில் நடக்கவிருந்த இராணுவப் புரட்சி பற்றிய புரளியும் இந்திய இராணுவம் இலங்கையில் அத்து மீறி நுழையவிருந்த ஏற்பாடும் ஏதோ காரணத்தால் தடைப்பட்டுப்போய் விட்டது. அது இந்தியாவின் துரதிர்ஷ்டம் அல்லது சரத் பொன்சேகாவின் அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். அல்லது அமெரிக்காவுடன் ஒத்துப்போக சரத் பொன்சேகா இணங்கியமையும் காரணமாக இருக்கலாம். அதற்கு சீனாவால் அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்பட்ட உடன் பாடும் காரணமாக இருக்கலாம்.

ஏற்பட்டுவரும் அமெரிக்க டாலரின் வீழ்ச்சியும் சீனாவால் சேமிப்பாக வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க டாலரின் அபரிமிதமான அளவும் அமெரிக்காவை சீனாவுடன் இணங்கிப் போகும் நிலையை உண்டாக்கியிருக்கின்றது. எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றான கரன்ஸியை உலக நாடுகள் தேடிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சீனாவில் இருப்பில் இருக்கும் டாலருக்கான பெறுமதியை வழங்குவதால் உண்டாகக் கூடிய சங்கடத்தையும் அதனால் ஏற்படக் கூடிய அமெரிக்கப் பொருளாதார பின்னடைவையும் அமெரிக்கா நன்கு உணர்ந்துள்ளது.

"சீனாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடை செய்யும் நோக்கம் அமெரிக்காவிற்கு இல்லை" என்ற ஒபாமாவின் அண்மைய கூற்று அமெரிக்கா சீனாவுடன் இணைந்து போகவே விரும்புகின்றது என்பதை உறுதிப் படுத்துகின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிராக இந்தியாவை வளர்த்து விட அமெரிக்கா விரும்பினாலும் "தனக்குப் பின் தான் தானம்" என்ற நிலையில் அமெரிக்கா இருக்கின்றது.

மாறி வரும் இந்த பிராந்திய அரசியல் சூழ்நிலையை ஈழத் தமிழ் மக்களும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் நன்கு புரிந்து கொண்டு காய் நகர்த்த வேண்டும். இறையாண்மையுடன் வாழ்வதற்கோ பிரிந்து செல்வதற்கோ தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய உரிமையை அதிக காலத்திற்கு எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. இன்று தமிழ் மக்களின் பிரச்சினை தோல்வி முகத்தில் இருப்பது போலத் தோன்றினாலும் சுயநிர்ணய உரிமை கிடைக்கும் வரை ஓய்ந்து விடப்போவதில்லை.

இந்தியாவின் அராஜகம் இதை விட இனி வேறு எல்லைகளுக்குப் போய் விட முடியாது. ஜனநாயக அகிம்சா வேடம் போட்ட இந்தியாவின் முகம் இன்று சர்வதேச சமூகத்தால் நன்கு புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. அதே போல் இந்தியாவின் துரோகமும் ஈழத் தமிழ் மக்களால் மறக்கப்பட முடியாதிருக்கின்றது. அதற்கான பதிலை இந்தியா கூறவேண்டிய நேரம் நெருங்கி கொண்டிருக்கின்றது என்றே தோன்றுகின்றது.

1 comment:

வெண்காட்டான் said...

இந்திய வல்லரசு கனவுக்கு எம் தமிழ் மக்களே. பொறுத்திருந்து பார்ப்போம்.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil