ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, January 9, 2010


தேர்தல் ஸ்டண்டும் தமிழ் மக்களின் கொண்டையும்


இலங்கையிலே ஜனாதிபதி தேர்தல் வருதுன்னு அறிவிச்சாலும் அறிவிச்சாங்க நம்ம ஆளுங்களெல்லாம் ரங்கராட்டினம் சுத்தத் தொடங்கிட்டாங்க.. ஏன் சறுக்கு மரம் ஏறலியான்னு நீங்க கேட்கலாம். அதெல்லாம் பழமையான வெளையாட்டுங்க. ரங்கராட்டினம் தான் எங்கே போரோம்னும் தெரியாம ..முன்னே பின்னே போரோமான்னும் தெரியாம சுத்திக் கிட்டே இருக்குற வெளையாட்டு.

தமிழ் மக்களெப் பொறுத்தளவில் இந்த வெளையாட்டே புரியாத, தேவயில்லாத ஒரு துக்கத்தில் மயக்கத்தில் இருக்கப்போக துள்ளிக்குதிப்பது என்னவோ சூடு சொரணயத்த அரசியல் வெளையாட்டுப் புள்ளிங்களும் எழுத்துக் கவிராயர்களும் தான். கள்ளன் போலீஸ் வெளையாட்டெல்லாம் வெளையாடிய காலம் போயி கள்ளனில எந்தக்கள்ளன் கம்மியாக் களவெடுத்தான்னு தேர்வு நடக்கின்றது... இந்த லட்சணத்தில அவன் தான் இவன் தான்னு கையைக் காட்டி தங்கள் இருப்பை மூச்சுப்பிடிச்சு நிறுத்திக் கொண்டிருக்கின்றாங்க இவங்கள்.

தமிழ்ச் சனம் எக்கேடு கெட்டாலும் தான் ஒரு அரசியல்வாதின்னதும் கருத்தியல்வாதின்னதும் மறந்து போகக் கூடாதுன்ன ஆவலாதி தான் அவங்க அவசரத்தில் தெரியுதுங்க. கருத்துக் கண்ணாயிரங்களும் தங்களைக் கவனிக்கணும்ன ஒரு வெறியிலேயே பக்கம் பக்கமா எழுதிக் குவிக்கிறாங்க... என்ன எழுதினோம்னே மறந்து போயி அதுக்கு எதிர்த்தாப்பில எழுதுற அவலமும் சேம் சைட் கோல் போடுற கொடுமையிலும் தம் பிரபலத்தை நிரூபிக்கப் போராடிக்கொண்டிருக்கிறாங்க..

போர்க்காலக் குற்றங்கள்னு மூச்சுக்கு முன்னூறு தடவ பேசிக்கிட்டிருக்கும் போதே குற்றவாளிகள்னு கைகாட்டப்படும் இருவர் தான் அதி உத்தம கனாதிபதி வேடத்திற்கு போட்டி போடுபவர்கள்னது தான் அழகிய முரண் நடை. இதில் இரண்டு பேருக்குமே சம அளவு குற்றப்பங்கு இருக்கின்றது.கொலை செய்வதும் கொலைக்கு உடந்தையாய் இருப்பதும் ஒரே அளவு குற்றங்களே.அதைத் தூண்டி விடுவதும் ..அதே அளவு தண்டைனைக்குரியதே . அதைச் செய்த இந்தியா தன்னைக் காத்துக் கொள்ள யாரைப் பலிக்கடா ஆக்குவது என்பதில் நொண்டியடித்துக் கொண்டிருக்கின்றது.

நிலைமை இப்படியிருக்க ...மக்களால் இதில் எந்தக் குற்றவாளியைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதுவும் எதற்காகத் தேர்ந்தெடுக்க தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்றும் காரணங்களை எந்த அதி மேதாவிககளாலும் கூறத் தெரியவில்லை.

தலைக்கு மேல் தொங்கும் கத்தியை ஒருவர் மேல் ஒருவர் திருப்பி விடுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவே முன்னநாள் நண்பர்களும் இன்னைநாள் எதிரிகளுமான அதி உத்தம ஜனாதிபதி வேட்பாளர்கள் கருதுகின்றார்கள்.

கவனித்துப் பார்த்தீர்களானால் யுத்தகாலத்தில் வலக்கை இடக்கை அல்லக்கைகளாக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ,பஸில் ராஜபக்ஷ போன்றவர்கள் இருந்த இடமே தெரியாது அஞ்ஞாத வாசம் போயிருப்பதை அறிந்து கொள்ளலாம். முன்னரெல்லாம் இலங்கையின் ஆட்சியைத் துக்கிப்பிடிக்க அரசியல் அறிக்கைகளை வெளியிட்ட டில்லி இப்போது வாய் மூடி ராஜதந்திர தகிடுதத்தத்திலேயே மூழ்கிப்போய் கிடக்கின்றது. தமிழ் மக்களின் கதறல்களைத் தனது கடிதம் தந்தி மூணரை மணிநேர உண்ணாவிரதம் என்பதால் கதிகலங்க வைத்துக் கொண்டிருந்த கருப்புக் கண்ணாடியும் இந்தப் பூனையும் பால்குடிக்குமோ என்ற பம்மாத்துள் பதுங்கிக் கொண்டுவிட்டது.

மேற்குலகின் கிடுக்கிப்பிடியென்ற ஐக்கிய நாடுகள் சபை நகருகின்ற நச்சுப்பாம்பாக அசைந்து அசைந்து என்றோ ஒரு நாள் கொத்தியே தீரும் என்பதை இந்திய அரசியல்வாதிகளான மன்ணுண்னிப்பாம்புகள் உணர்ந்தேயிருக்கின்றன. நயவஞ்சக காட்டிக்கொடுப்பின் பின்னால் தமிழ் மக்களைக் கொன்று பிணமலையைக்குவித்த இந்தியக் குள்ளநரி அரசியல்வாதிகளின் கொக்கரிப்புக்கள் அடங்கிப்போய் விட்டன. ஒரு ஆட்சி மாற்றத்திற்காகக் காத்திருக்கும் நகரும் நச்சுப்பாம்பு தங்களைக் கொத்தியே தீரும் என்பதில் காங்கிரஸ் அரசியல் வாதிகள் உள்ளூரக் கிலி கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சீர் செய்ய முடியாத யுத்த கால அழிவிற்குப் பின்னர் தமிழ்மக்களை வழி நடாத்த இங்கிருக்கும் ஈழத் தமிழ் அரசியல் புள்ளிகளுக்கோ கருத்துக் காண்ணாயிரங்களுக்கோ யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ் மக்களின் உடனடி, எதிர்கால தலைவர்கள் தாங்கள் தான்னு நிரூபிக்க எந்தக் கோமாளி வேடத்தையும் விட்டு வைக்க இவர்கள் தயாராகவில்லை.

இதில என்ன கொடுமைன்னா யாரு மக்கள் பத்தி நெனைக்கிறாங்கன்னோ எது சரி எது பிழைன்னோ புரியாத மயக்கத்தில் மக்களை வழமைபோலவே குழப்பத்திலேயே விட்டிட்டாங்க...

முன்னெல்லாம் தேர்தல்னா தமிழர் தரப்பு காவடி எடுக்கும் தமிழ்நாடு, டில்லி சுற்றுப்பயணங்கள் பின்னர் வன்னி நோக்கி திசை திருப்பப்பட்டிருந்தது. அப்புறம் புலிகளின் ஒழிப்புடன் மீண்டும் டில்லிக்கு தமிழர் முன்னணி எடுத்த படையெடுப்பை டில்லி உதாசீனம் செய்ததோ கண்டுக்கலையோ அதுவும் நின்று விட்டது. டில்லி - மகிந்த கூட்டுநெருக்கத்தில் , தங்களைக்காத்துக் கொள்ளும் அவசரத்தில் தமிழர் தேவையையோ துன்பத்தையோ நினைத்துப்பார்க்க டில்லிக்குத் நேரமில்லாது போய் விட்டதை உணரக்கூட திராணியில்லாத தமிழர் முன்னணி இப்போது தம் இருப்பை நிலைநாட்டிக்கொள்ள முன்னைநாள் இராணுவத் தளபதிக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது.

டக்ளசு பிள்ளையான் வழமை போலவே மகிந்த தோணியில் தொற்றிக்கொண்டிருக்க மகிந்தவால் உதாசீனப்படுத்தப்பட்ட கருணா, ஆறுமுகம் தொண்டமான் போன்றோர் சரத் பொன்சேகா அணியில் சேரத் துடித்துக்கொண்டிருக்காங்க.. ஜேவிபியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட விமல் வீரவன்ச மறுபடியும் புலி வருகுது கிலியைக் கிளப்பியபடி மகிந்த தோணியில் இடம் தேடிக்கொண்டிருக்கின்றது.

புலிகளின் எஞ்சிய தும்புகளும் தமதிருப்பை நிலைநாட்ட வட்டுக்கோட்டை, வணங்காமுடி, நாடு கடந்த அரசுன்னு நட்டுவாங்கம் தட்டிக்கொண்டிருக்கின்றது. வயசு போய் இறந்து போன வேலுப்பிள்ளையின் மரணத்தையும் போர்க்குற்றமாக்கி உருத்திரா அறிக்கை விட்டு தனதிருப்பையும் தமிழ் மக்களின் மறதியில் இருந்து தூசு தட்டிப்பார்க்கின்றார். நம்மாளுங்களின் அகராதிப்படி ஆதரவாளன் துரோகியாவதும் துரோகி ஆதரவாளனாவதும் ரொம்ப சுலமமாகவே தோன்றுகின்றது.

இது வரை புலி ஆதரவாளனென்று பேரெடுத்த சிவாஜி லிங்கத்தை மகிந்தவின் கைத்துரும்பென்று பழித்துரைக்கவும் தயங்கவில்லை. மரணித்த வேலுப்பிள்ளையரை வல்வெட்டித்துறைக்கு எடுத்துப்போக முடியுமான்னு இருந்ததை மறந்து முடிந்தபோது மகிந்தவின் தேர்தல் ஸ்டண்டு என்று மாத்தியடிக்கவும் இந்தக் கருத்தியலாளர்களாலும் தான் முடிந்திருக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் சிங்கள தேசத்தினதோ இந்தியாவினது தயவிலோ தங்கியிருக்கவில்லை என்பதையும் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதிலேயே தங்கியிருக்கின்றது என்பதை இந்த அரசியல் புள்ளிங்களும் கருத்துக் காண்ணாயிரங்களும் எப்போது புரிந்து கொள்ளப்போகின்றார்களோ தெரியவில்லை.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil