ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, January 6, 2010


ஜே ஆரிடம் வேகாத பருப்பு சோனியாவால் மகிந்தாவின் சமையல் கூடத்தில்


சாட்சிக்காரனை நம்புவதை விட சண்டைக்காரனின் காலில்விழுவது மேலென்று ஒரு பழமொழி தமிழில் இருக்கின்றது. அதை எவ்வளவு தூரம் நம்பமுடியும் என்பதில் தான் பிரச்சினையே இருக்கின்றது. இப்போது சூடு கண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தலைப்போன்றே கடந்த ஜனாதிபதித் தேர்தலும் மிகவும் சூடு கண்டிருந்தது.

யூ.என்.பியில் கேட்ட ரணிலும் எஸ்.எல்.எfவ் பியில் கேட்ட மகிந்தருக்கும் தமிழரின் வாக்கு முக்கியமாகப்பட்டது. அதைக்கொடுக்கும் உரிமையைப்பெற்றிருந்த புலிகளின் கடைக்கண் பார்வைக்காக இருவரும் ஏங்கியிருந்தனர். இதே தமிழர் விடுதலை முன்னணி அப்போது என்ன காரணத்தைக் கூறியதோ அல்லது என்ன முடிவெடுத்ததோ அதையெல்லாம் மீறிய புலிகளின் பிரகாசம் அதை மீறி ஜோதிப்பிழம்பாக எழுந்து அழித்து விட்டது.

மேற்குலகின் கைப்பாவை தமிழினத்தின் கோடரிக்காம்பு என்ற புலிகளின் முன்முடிவுகளின் விஸ்தரணையுடன் ரணில் பின்னகர்த்தப்பட மகிந்த ஆதரவைப் பெற்று வெற்றி வாகை சூடினார். ரணிலை ஒதுக்க புலிகள் அரசல் புரசலாக விட்ட மேற்குலகின் "நிண்டு அறுக்கும் அராஜகத்துடன்" புலிகளின் கைப்பிடியைத் தமிழ் மக்களின் மீதிருந்து நழுவ வைக்கும் புத்திசாலித்தனத்துடன் ரணில் காய் நகர்த்துகின்றார் என்ற "ராஜதந்திர மேதாவித்தனக்" கதையானது கசிய விடப்பட்டிருந்தது.

ரணிலையும் மேற்குலகைப் பற்றியும் அவர்கள் கொண்டிருந்த கருத்துப் படிமங்கள் எப்படியிருந்தபோதும் தங்களால் ஒற்றைக்கண் புண்ணாக்கப்பட்டிருந்த சந்திரிகாவினதும் வடக்கிற்கான பாதை திறக்கப்புறப்பட்டு தடுக்கி விழுந்த ரத்வத்தை ஆட்சி பீடத்திலிருந்து புறப்பட்டு வரும் மற்றொரு "சிங்கள மோடையா" மகிந்த என்ற அபிப்பிராயமே மகிந்தவை ஆதரிக்குமாறு தமிழ் மக்களுக்கு ஆணையிடத் தூண்டி நின்றது.

"மோடையாக்கள்"(முட்டாள்கள்)... உலகம்,அது விதந்துரைக்கும் மனிதாபிமானம் என்பது பற்றி எதுவுமே அறியாதவர்கள்,கவலைப்படாதவர்கள் என்பதை உலகம் மட்டுமல்லாது இந்தியாவும் தமிழ் மக்களும் ஏன் மாண்டு போகும் கடைசித் தருணத்தில் புலிகளின் தலைமையும் உணர்ந்தேயிருக்கும்.

இல்லாவிட்டால் இராஜீவின் காலத்தில் ஜே ஆரிடம் வேகாத பருப்பு சோனியாவால் மகிந்தாவின் சமையல் கூடத்தில் தமிழ் வதை என்ற சொதியாக மாறியது எப்படி? இன்று இந்தியாவின் முண்டு கொடுப்பால் தப்பிப்பிழைத்து சேடம் இழுக்கும் மகிந்த சகோதரர்கள் தேர்தல் தோல்வி கண்டால் அதே இந்தியாவின் தப்பிப்பிழைத்தலுக்காகக் காவு கொடுக்கப்படுவார்கள் என்பதை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

இன்னுமொரு மிலயோவிச் போல சைரன் ஊதும் கார்களில் பளீரிடும் போட்டோ பிளாஷர்கள் மழையில் ராஜபக்ஷ சகோதரர்கள் செல்லும் போது எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கியிருந்து ஒழிக கோஷம் போடும் பாக்கியம் நமக்கும் வாய்க்கக் கூடும்.

அன்று அதே புலிகளின் தலைமை விட்ட அதே போன்ற தவறை அன்று கைகட்டி வாய் பொத்தி நின்ற தமிழர் விடுதலை முன்னணி எடுத்திருக்கின்றது.

அதற்காக அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை இத்தனை ஈழத்தமிழர்களின் உயிரையும் கொலை செய்து எரித்தழித்த இராணுவத்தின் முன்னைநாள் தலைவரும் இன்னை நாள் ஜனாதிபதி வேட்பாளருமான பொன்சேகா கொடுத்த உறுதிமொழிகளாகப் பட்டியலிட்டுள்ளார்கள்.

பட்டியலில் முதலாவது:சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்

சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் இராணுவம் என்ற பலப்பிரயோகத்தை முன்னிறுத்திக் கலைத்தவர்களே அதை மீட்டுத்தருவதான பொய்யுரையை நம்பி எம்மையும் நம்ப வைப்பது.

பட்டியலில் இரண்டாவது: துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்

தமிழருக்கான நியாயமான போராட்டத்தைத் துடைத்தழிக்க துணை இராணுவக் குழுக்களை ஆயுத தாரிகளாக உருவாக்கியவர்களே அவற்றைத் தடை செய்வதான தட்டையான வாக்குறுதியை நம்பி மக்களை மூளை மழுங்கச் செய்வது.

அவர்கள் ஒப்பந்தம் கண்டுள்ள ஒன்பது அம்சத் திட்டங்கள் இதை ஒரு அரசியல் நிகழ்வாகக் காட்டுவதற்கான வெறும் கண்துடைப்பு மட்டுமே.

வெல்லப்படாத யுத்தத்தை மகிந்த இன்று நடத்திக் கொண்டிருந்தால் புலிகளின் தலைமையால் கைகாட்டப்படும் நபராக மகிந்த இருந்திருக்கக் கூடும். புலிகள் எதிர்பார்த்திருந்ததைப் போலவே அரசியல் ஞானமும் எதிர்காலத் திட்டமும் அற்ற "மோடையாகவே" மகிந்த சகோதரர்கள் செயற்பட்டிருக்கின்றார்கள் என்பதுவே இன்று அவர்கள் "தோற்கடித்த" தமிழர்களின் ஆதரவைத் தேடி அலைவதிலேயே இருந்து தெளிவாகின்றது.

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருந்து அடித்த இந்தியாவின் இராஜதந்திரத்தை இனி சிங்கள தேசம் புரிந்து கொள்ளும். சந்தன மாலைகளுடனும் பன்னீர்ச் செம்புகளுடனும் இந்தியாவை வரவேற்ற ஈழத்தமிழ் மக்கள் செயின் புளொக்குகளில் அரைபட்டு இரத்தச் சாறாக சிதைந்து போன ஒரு அனுபவத்தை சிங்கள மக்களுக்கும் விரைவில் இந்தியா பரிசளிக்கத் தயாராக இருக்கின்றது என்பதை இந்த "மோடையாக்கள்" எப்போது புரிந்து கொள்ளப்போகின்றார்கள் என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil