ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, January 31, 2011


மீனவர்களின் கண்ணீரும் நொண்டிக்குதிரையும்


நீண்ட காலத்தின் பின் எழுதத் தோன்றுகின்றது. பாக்கு நிரிணையில் பதைபதைக்க உயிர்துறக்கும் உறவுகளுக்காக மெளனம் துறக்க நேரிடுகின்றது. வன்னியில் விதைத்த வேதனைகள் பாசியாய்ப் படிந்து மனம் முழுவதையும் மூடிவிட்டிருந்தது.

எல்லாவற்றையும் தாண்டி இன்னும் பேசவேண்டிய தேவைக
ள்  நீண்டு கொண்டே போகும் என்றே தோன்றுகின்றது. சிங்களவன் சுட்டுப்போடும் மீனவனை பலிகொடுக்கும் பூசாரிகளைத் தட்டியெழுப்ப டுவிட்டரில் டுவிட்டுபவர்களையும் பெட்டிசனில் கையெழுத்திடுவோரையும் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கின்றது.

மக்களெல்லோரும் முட்டாள்கள் என்றே இன்றுவரையும் நடந்து கொண்டிருக்கும் கருணாநிதியும் மன்மோகனும் எதை விரும்புகின்றார்களோ அதுவாகவே இருக்க பிரயத்தனப்பட்டு முயன்று கொண்டிருக்கும் இவர்களை என்னவென்று சொல்வது?

அரசியல் அதிகாரத்தைக் கொடுக்கும் ஓட்டை பணத்திற்காக விற்று விட்டு பலனில்லாத போராட்டங்களில் பொழுதைக்கழித்துக் கொண்டிருக்கின்றார்கள் இவர்கள்.

தேர்தல் இனிதாக நடந்தேறி இந்த ஆட்டுமந்தைகளின் கழுத்தில் இன்னொரு ஐந்தாண்டு சுருக்கு வீழுமட்டும் .....கடிதங்கள் எழுதப்படுவதும் , "ராவ்"கள் ராவோடு ராவாகப் பறப்பதும் கூட்டறிக்கை வெளிப்படுவதும் நடந்து கொண்டே தானிருக்கும்.

இவர்களும் இணையத்தில் புளொக்கில் விடும் புருடாக்களும் புழுகுகளும் ஒரு கண்ணிமைக்கும் பொழுதில்....ஒரு நடிகையின் கள்ளக் காதல் செய்தியில் அல்லது ஒரு சாமியாரின் லீலைகளின் புழுதியில் அல்லது ஒரு "தலீவ"னின் அடுத்த பட கட்வுட்டில் காணாமல் போய் விடும்.

அது வரை  நொண்டிக்குதிரை மூட்டை சுமக்க முண்டியடிக்கும்.


மீனவர் மீது தாக்குதல் நடத்துவதில்லை இலங்கை இந்திய அரசுகள் இணக்கம் நிருபமா கொழும்பு வந்து பேசிய பின் கூட்டறிக்கை

 எத்தகைய சந்தர்ப்பத்திலும் மீனவர்களுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துவதில்லை என்று இலங்கை மற்றும் இந்திய அரசுகள் இணங்கி உள்ளன. மீனவர்களுக்கு எதிராகப் பலப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதை நியாயப்படுத்த முடியாது என இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன என்று நேற்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமாராவ் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசிய பின்னர் இந்தக் கூட்டறிக்கை வெளி யிடப்பட்டது.இலங்கை  இந்தியக் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ்,   நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இரு நாட்டு மீனவர்களும் கடல் எல்லைகளில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ் நேற்றுக் காலை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை அவரது அமைச்சில் சந்தித்தபோது தெரிவித்தார். இந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.பின்னர் அவர் ஜனாதிபதியைச்சந்தித்துப் பேச்சு நடத்தினார். அதன் பின்னர் சந்திப்புக்கள் குறித்து கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது:
இந்திய இலங்கை நாடுகளுக்கிடையிலான கடலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த இந்திய அரசின் ஆழ்ந்த கவலையை வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், வெளியிட்டார்.இச்சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்வாறான சம்பவங்கள் இனி இடம்பெறுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். எல்லை தாண்டி இலங்கையின் கடல்பரப்புக்குள் வரும் இந்திய மீனவர்கள் உட்பட அனைத்து மீனவர்களையும் மனிதாபிமான ரீதியில் நடத்த வேண்டும் என்பதே இலங்கையின் கொள்கை என்பதை இலங்கை அதிகாரிகள் வலியுறுத்தினர்.இலங்கை இந்திய  நாடுகளுக்கு இடையில் மிக நெருங்கிய இரு தரப்பு உறவுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஜீவனோபாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மீனவர்களின் நலன்களில் தாக்கம் செலுத்தும் எந்த விடயமும் இலங்கையின் மிகுந்த கரிசனைக்குரியதாகும்.அதனால் இச்சம்பவங்கள் குறித்த உண்மைகளை கண்டறிவதற்கு இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளது. விசாரணைகள் தொடரும் நிலையில் மேலதிக தகவல்களைத் தருமாறு இந்தியத் தரப்பிடம் இலங்கை கோரியுள்ளது.தற்போதைய சுழ்நிலைகளின் அடிப்படையில் ஏற்பாடுகளை மேற்கொண்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மீன்பிடி தொடர்பான கூட்டுச் செயற்குழுவின் அடுத்த கூட்டத்தை விரைவாக கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது என்றுள்ளது.இதேவேளை, நேற்று மாலையே நாடு திரும்பிய நிருபமாராவ்,"தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்''  என்றார். குறித்த ஒப்பந்தம் மீனவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். நாடு திரும்புவதற்கு முன்னதாக நிருபமாராவ், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் சி.ஆர்.ஜெயசிங்கவையும் சந்தித்துப் பேசினார்

நன்றி : யாழ் உதயன்

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil